Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

73 வயதில் பட்டம்... கோவையை கலக்கும் விவசாய வாத்தியார்!


ல்வி கற்க வயது தடையில்லை என்பதற்கு இன்னுமொரு உதாரணமாக திகழ்கிறார்  கோவையை சேர்ந்த சுவாமி அன்பு சுந்தரானந்தம் என்ற 73 வயது முதியவர். 

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பி.எஃப்.டெக் ( B.F.Tech - Bachelor of Farm Technologyஎனப்படும் பண்ணைத்தொழில் நுட்பவியல் படிப்பில் சேர்ந்து  மூன்று ஆண்டுகள் பயின்று பட்டம் பெற்றுள்ளார். அவர்தான் சுவாமி அன்பு சுந்தரானந்தர்.

காவியுடை,வெண்தாடி, வெள்ளந்தி சிரிப்புடன் எந்நேரமும் காட்சி அளிக்கும் இவர், ஒரு மிதி வண்டி பிரியர். கடந்த 60 வருடங்களாக நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 20 கீ.மீ. தூரம் மிதிவண்டியில் பயணிக்கிறார். பஞ்சாலைத் தொழிலாளியாக வாழ்வை தொடங்கிய இவர்,  கடந்த 30 வருடங்களாக இயற்கை வாழ்வியல் பயிற்றுநராகவும் விளங்கி வருகிறார்.இவர் சாணிச்சாமியார் என்றும் அழைக்கப்படுகிறார்.

அது என்ன சாணிச்சாமியார்?

நீங்கள் கேட்பது புரிகிறது. இதோ அவரே பதில் சொல்கிறார்...

'' என்னோட பேரு சுந்தரம். சொந்த ஊரு கோயம்புத்தூர் மாநகரை ஒட்டியுள்ள கீரணத்தம் கிராமம். சின்ன வயசுல படிக்க வசதியில்ல. அதனால 15 வயசுல மில்லுவேலைக்கு போயிட்டேன். தினந்தோறும் வீட்ல இருந்து மில்லுக்கு சைக்கிளில்தான் போய்வருவேன்.  15 வயசுல எடுத்த சைக்கிள இந்த 73 வயசிலயும் இன்னும் கைவிடல .

ஒரு கட்டத்துல மில்லு வேலைய விட்டுட்டேன். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்பட்டுச்சு. ஊர் ஊரா சுத்தினேன். அப்ப..திருநெல்வேலி பக்கம் இருக்கிற  சிவசைலம் என்கிற இடத்துல  இருக்கும்  இயற்கை நல்வாழ்வு மையத்தின் தொடர்பு கிடைச்சுது. அங்கு சில மாதங்கள் தங்கி இருந்ததில்  இயற்கை உணவு, சேற்றுக்குளியல், வாழையிலை வைத்தியம் போன்ற பல விஷயங்களை அனுபவிச்சு கத்துக்கிட்டேன்.

அங்கு கற்றுக் கொண்டதை  ஊர் ஊரா  போய் முகாம் நடத்தி,  மக்களுக்கு சொல்லிக்கொடுப்பதை முழுநேரமா செஞ்சு வர்றேன்.

பசு மாட்டு சாணத்தில் நோய் எதிர்ப்பு சக்தி  நிறைய இருக்கிறது  எல்லோருக்கும் தெரிஞ்ச தகவல்தான். அதை வீடு மெழுக மட்டுமே பயன்படுத்துறோம். ஆனா, நான் அதுக்கு ஒரு படி மேல போயி, கடந்த  20 வருஷமா  உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சாணிப்பால் பூசித்தான் தினந்தோறும் என்னோட குளியலை நடத்துறேன். சோப்பு,ஷாம்பு எதையும் பயன்படுத்தும் வழக்கமில்லை." என்ற அன்பு சுந்தரானந்தம், இந்த 73 வயசிலும் படிச்சு பட்டம் வாங்கிய விஷயத்துக்கு தாவினார்.

" சின்ன வயசுல படிச்சு பட்டம் வாங்க முடியலைங்கிற  இருந்த என்னோட ஏக்கம்...பசுமை விகடன் மூலமா நிறைவேறுச்சு.

பசுமை விகடனை முதல் இதழில் இருந்து தொடர்ந்து வாசிக்கிறேன். அதுல வெளியான ஒரு செய்தி  என்னை ரொம்ப சந்தோஷப்படவெச்சுது.  கோயம்புத்தூர்ல இருக்கிற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,  பி.எஃப்.டெக் என்கிற பண்ணைத்தொழில்நுட்ப படிப்பை அறிமுகம் செஞ்சிருக்கிறதாகவும்,  அந்த படிப்புக்கு  வயது வரம்பும்கிடையாது,  ஒன்பதாம் வகுப்பு முடிச்சிருக்கணும்ங்கிறதுதான் ஒரே தகுதின்னும் வெளியான தகவல் கண்ணில் பட்டதும். உடனே பல்கலைக்கழகம் போய் முறைப்படி  சேர்ந்து,  விடுமுறை எடுக்காமல்  வகுப்பு இருக்கும் நாள் எல்லாம்  போய் அக்கறையோடு படிச்சேன். மூணு வருஷம் படிச்சதில் அரியர்ஸ் இல்லாமல் பாஸ் பண்ணி  விவசாய பட்டதாரினு பட்டம் வாங்கினேன்.

இனி மேல் படிக்கவே வாய்ப்பில்லை. அதுக்கான வயதுவரம்பு  பல வருடம் கடந்து விட்டது என்று காலாவதியான என்னோட கல்விக்கனவு  73 வயதில் நிறைவேறியது. கற்க வயசு ஒரு தடை இல்லைங்கிறதுக்கு சாட்சியாகிப்போனது.

மேலும், படிச்சு பட்டம் வாங்கியாச்சு நம்ம கனவு நிறைவேறிடுச்சு. பேருக்கு பின்னால பந்தாவா   பட்டத்தை போட்டுக்கலாம் என்பதோடு நான் சோம்பி விடவில்லை.

நான் படிச்ச விவசாய அறிவை பயன்படுத்தி,  விவசாயிகளுக்கு  பல தொழில்நுட்பங்களை சொல்லிக்கொடுக்கிற விவசாய வாத்தியாரா இருக்கேன். அது மனசுக்கு நிறைவா இருக்கு'' என்றபடி மிதிவண்டியில் ஏறினார்   'அக்ரி' சுந்தரானந்தர்.

மற்ற பல்கலைக்கழகங்களில்  தொலைதூரக்கல்வி இருப்பது  எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்  ஆனால், கோயம்புத்தூரில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில்  பி.எஃப்.டெக். பாடத்திட்டத்தை துவக்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது...? என்கிற கேள்வியை அப்போதைய துணைவேந்தர்  முருகேச பூபதியிடம் கேட்டோம்.

அவர், " நான் தமிழ்நாடு துணைவேந்தராக பணியில் இருந்த பொழுது இஸ்ரேல் நாட்டுக்கு   விவசாய கல்வி சுற்றுலா போயிருந்தேன்.
மண் வளமே இல்லாத அந்த நாட்டில்  அற்புதமாக விவசாயம் நடந்து வந்ததை பார்த்து வியந்தேன்.

அங்கு நடந்த மண்ணியல் விஞ்ஞானிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டேன்.  அதில் பேசிய மண்ணியல் விஞ்ஞானி ஒருவர்தான்  மண்ணியல் சம்பந்தமான  பல புதிய விஷயங்களை பேசினார்.
கருத்தரங்கு முடிந்ததும் அவரை சந்தித்துப் பேசினேன். அதில் விவசாயத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் அல்ல என்பதையும்  அவர் ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்தவர் என்பதையும்  தெரிந்து  வியந்தேன். பள்ளிப்படிப்பை மட்டுமே படித்த அவரது விவசாயக் கல்வி  அறிவு,  அனுபவத்தால் கிடைத்தது என்பதை தெரிந்துகொண்டேன். அது எனக்குள் ஒரு தெளிவை ஏற்படுத்தியது.

நமது நாட்டில் பல  விவசாயிகள் பள்ளிப்படிப்பை தாண்டாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால்,  தெளிந்த நல்ல விவசாய அறிவுடன் திகழ்கிறார்கள். அவர்களை மேலும் மெருகேற்றி,  பல புதிய தொழில் நுட்பங்களை கற்றுக்கொடுத்தால் பல முன்னோடி விவசாயிகளை  விஞ்ஞானிகளாக மாற்ற முடியும் என்பதை உணர்ந்து கொண்டதன் விளைவுதான்  பண்ணைத்தொழில் நுட்ப படிப்பை துவக்கினோம்.  முதல் பேட்சில் 150 பேர் விவசாய பட்டத்தை வாங்கி விட்டார்கள். அதில் அன்பு சுந்தரானந்தரும் ஒருவர்.

நான் பணி ஓய்வு பெற்று விட்டேன். எனக்கு அடுத்து துணைவேந்தராக பொறுப்பேற்றுள்ள முனைவர் ராமசாமியும் இந்த கல்வி முறையை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க ஆர்வமுடன் செயல்படுகிறார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார்.

-ஜி.பழனிச்சாமி.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close