Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வண்டி ஓட்ட தெரிஞ்சுக்கிறதும் வாழ்க்கை கல்விதான்!


''ஊருல...  இருக்கிற ஆம்பளைங்க எல்லோரும் அவங்க அவங்க  பொண்டாட்டிய பின்னால உட்காரவெச்சு  மோட்டர் சைக்கிள்ல  ஜாலியா போறாங்க... கோயில் ,குளம், திருவிழானு 'குஷியா' போய் வர்றாங்க.
ஆனா, எங்க வூட்டு ஆம்பள... இன்னும் சைக்கிளே பழகல. இந்த பொழப்புல மத்தவங்கபோல புடுபுடுனு எப்படிப் போறது...? என் கெரகம்.. நான் எங்க போனாலும் நடராஜ் சர்வீஸ்தான்... " - இப்படியான பெண்கள் சிலரின் புலம்பல் இன்னும் கேட்கத்தான் செய்கிறது.

இது போன்று, சரியான நேரத்தில் நேர்முகத் தேர்வுக்குச் செல்ல முடியாமல் வேலைவாய்ப்பை இழந்தவர்கள்,காதலியை இழந்தவர்கள், கணவரை விவாகரத்து செய்த சம்பவம்... என வாகனம் ஓட்டத் தெரியாததால் சுகமான வாழ்க்கை பலருக்கு சுமையாகிப்போனது உண்டு.

ஒவ்வொரு மனிதனும் கற்றுக்கொள்ளவேண்டிய பட்டியலில் இருச்சக்கர வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்வதற்கு முக்கிய தருணம் உண்டு.  அவரவர் குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லிக்கொடுக்க வேண்டிய வாழ்க்கைக் கல்வி இது.

வாராவாரம் பெட்ரோலின் விலை ஏறிக்கொண்டே போனாலும் வாகனங்களை ஓட்டும் நபர்களின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. வாகனம் ஓட்டக் கற்றுக் கொள்வதன் மூலம், தன்னம்பிக்கை மிக்கவர்களாக மிளிரமுடியும்.

மேலும், தனக்கான பணிகளை தானே செய்துகொள்வதோடு, நம்மை சார்ந்து இருக்கக்கூடிய நபர்களின் தேவைகளையும் நம்மால் நிறைவேற்றி வைக்க முடியும். வாழ்க்கையின் வளைவு மிகுந்த பாதைகளில் நாம் பயணிக்கவும், குடும்ப வாகனத்தை நாம் சிறந்த முறையில் ஓட்டிச் செல்லவும் நமக்கான ஓட்டுநர் உரிமம் அவசியம்.

அதன்படி, வாகனத்தை முறையாக ஓட்டுவதற்கான பயிற்சியுடன், போக்குவரத்து தொடர்பான சாலை விதிமுறைகளையும் ஒருவர் தெரிந்துவைத்திருப்பதை தெரிவிக்கும் சான்றிதழே ஓட்டுநர் உரிமம். வாகனத்தில் உர்... உர்... எனப் பறந்தபடி உலகைச் சுற்றி வர நினைப்பவர்கள், முதலில்  பழகுநர் உரிமம் (Learner’s License Registration - LLR ) பெற வேண்டும்.

LLR விண்ணப்பத்துடன், மருத்துவச் சான்று, உடல் தகுதிச்சான்று, முகவரிச் சான்று, இந்தியக் குடியுரிமைச் சான்று, ஒப்புகைச் சான்றுகளுடன் மூன்று புகைப்படங்களையும் இணைக்க வேண்டும்.

இவற்றை தொகுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர் அல்லது மோட்டார் வாகன ஆய்வாளரிடம் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். 50 வயதைப் பூர்த்தி அடைந்தவர்கள் மருத்துவச் சான்றிதழுடன் ‘படிவம் 1’-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

விண்ணப்பம் கொடுத்த அன்றே நமக்குரிய பழகுநர் உரிமம் அளிக்கப்படும். அவ்வாறு அளிக்கப்படும் உரிமம், ஆறு மாதங்கள் வரை செல்லும். ஆனால் ஓட்டுநர் உரிமத்தை நம்மை ஓட/ஓட்ட விட்டுத்தான் அளிப்பர். இதைப் பெற்ற 180 நாட்களுக்குள், ஓட்டுநர் உரிமம் பெறலாம். கியர் இல்லாத மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கான  பழகுநர் உரிமம் பெற, 16 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். கியர் உள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் இலகு ரக நான்கு சக்கர வாகனங்களை ஓட்ட 18 வயது முடிந்திருக்க வேண்டும். 

ஓட்டுநர் உரிமத்தைப் பெற,  நாம் பயன்படுத்தும் வாகனத்தின் தகுதிச் சான்றுகள் அனைத்தையும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெறும்போது, வாகனத்தை ஓட்டிக் காட்டுவதோடு,  சாலைவிதிகள் குறித்த கேள்விகளுக்கும் சரியான பதில் அளிக்க வேண்டும். இதற்கான கட்டணம், இலகு ரக அல்லது கன ரக வாகனங்களைப் பொறுத்தது.

காது கேளாத, வாய் பேச இயலாத, உடல் நலம் குன்றிய  மாற்றுத்திறனாளிகளின் உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு ஏற்பவும், அவர்கள் எளிதில் இயக்கும் வகையிலும் வாகனங்கள் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் வாகன ஓட்டுநர் உரிமம் பெற முடியும்.

'அட போப்பா... கையளவிலான ஒரு அட்டைக்காக ஏகப்பட்ட படிவங்களை நிரப்பி, வரிசையில கால் கடுக்க நின்னு, லோ லோன்னு அலைஞ்சு...’ என ஏதேதோ கற்பனை செய்துகொண்டு லைசென்ஸுக்கே விண்ணப்பிக்காமல் இருப்பவர்கள் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்வது நல்லது.

வாகனம் ஓட்டக்கத்துக்கோங்க பாஸ்... தன்னம்பிக்கை தானா வரும்...!


-பாசுதேவ்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close