Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அன்று மாடு மேய்த்தார்... இன்று பள்ளி நடத்துகிறார்!
துராந்தகம் அருகில் உள்ள சிறிய கிராமம் சித்திரவாடி.‘பெருமாள்’ என்ற பெயரை உச்சரித்தாலே அவரின் ஆரம்பப் பள்ளியை நோக்கி கையை நீட்டுகிறார்கள் கிராமத்தினர். அந்த பள்ளிக்குள் நுழைந்தேன். வடக்கு திசையில் நர்சரிப்பள்ளி, தெற்கில் ஶ்ரீவேங்கடாசலபதி கோயில், கிழக்கில் பசு மாடுகள் உள்ள கோசாலை, மேற்கில் விவசாய நிலங்கள், நடுவில் அழகிய வீடு.

கோடை விடுமுறை என்பதால் பிஞ்சுக்குழந்தைககளின் கலகல சத்தம் மிஸ்சிங். படியேறி மேலே சென்றால் நரைத்த நீளமான தாடி, நெற்றியில் சந்தனம் என கண்களில் கனிவோடு வரவேற்கிறார் பெருமாள். கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், வேளாண் விரிவாக்கத்துறையின் இயக்குநராக இருந்தவர் பேராசிரியர் ஜி.பெருமாள். 83 வயதைக் கடந்தவர். இந்த வயதிலும் தளராமல், தனது கிராமத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

அக்னி வெயிலில்  நடந்த சந்திப்பில்,  தாடியை நீவியபடியே பேசத் தொடங்கினார் பெருமாள்...
 
“நான் பிறந்தபோது எங்க ஊரில் பள்ளிக்கூடம் எதுவும் இல்லை. வீட்டில் உள்ள மாடுகளை மேய்ப்பதுதான் எனது வேலை. 9 வயதில்தான் சிறுநெல்லூர் ஆரம்பப் பள்ளி வாசலையே மிதித்தேன். அதுவரை எங்க ஊர் கணக்குப் பிள்ளை வீட்டு திண்ணைப்பள்ளியில்தான் படித்தேன்.
எஸ்.எஸ்.எல்.சி. முடித்தபிறகு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியட் வகுப்பும்,  அதைத்தொடர்ந்து கோயம்புத்தூர் வேளாண் கல்லூரியில் பி.எஸ்ஸி (விவசாயம்) -யும் முடித்தேன். 1959 ல் வேளாண்துறையில் விரிவாக்க பணியாளர் பணி கிடைத்தது. ஓராண்டு பணிக்கு பின்னர் 'ஃபார்ம் மேனேஜர்'  பணி,  கோயம்புத்தூர் கல்லூரியில் கிடைத்தது. அங்கேயே எம்.எஸ்ஸியும் முடித்தேன்.

பணியில் இருந்து கொண்டே டெல்லியில் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பிஹெச்.டி படித்து முடித்தேன். இதனால் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கத் துறையில்,  உதவிப் பேராசிரியராக பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. 1990-ல் அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வுப் படிப்பைப் படித்து முடித்து,  மீண்டும் வேளாண் பல்கலைக்கழகப் பணிக்கு வந்து விட்டேன். எவ்வித வசதியும் இல்லாத கிராமத்து மாணவர்கள் பல சிரமங்களையும், அவமானங்களையும் சந்தித்தால்தான் இந்த நிலைக்கு உயரமுடியும். அந்த சம்பவங்கள் என் வாழ்க்கையிலும் நடந்தன.” என்று பழைய நினைவுகளின் மூழ்கியவர் தொடர்ந்தார்.

“ பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, நான் பிறந்து வளர்ந்த இந்த கிராமத்திலேயே நிரந்தரமாக தங்கிட்டேன். இனி இந்த கிராமம்தான் எல்லாமே எனக்கு என்றாகிவிட்டது. ஆனால் இந்த கிராமத்தில் எவ்வித வளர்ச்சியும் இல்லை. நல்லதொரு ஆரம்பப் பள்ளி இல்லை. பிஞ்சுக்குழந்தைகள் பல கி.மீ. பேருந்தில் நசுக்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். பார்க்கவே வேதனையாக இருந்தது. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றும் பல்வேறு பிரிவினைகள். நான் படித்த கல்வியால், 'எனது கிராமத்தை கூட முன்னேற்ற முடியவில்லையே...' என்ற வருத்தம் இருந்தது. ஊரில் உள்ளவர்களும், 'இந்த ஊருக்கு பள்ளிக்கூடம் இருந்தால் நம்ம கிராமத்து  குழந்தைகள் படிப்பார்கள்' என்றார்கள். அவர்களின் யோசனைப்படி, 1995ல் சுற்றுவட்டார மக்களுக்காக நர்சரி மற்றும் பிரைமரி ஸ்கூலை தொடங்கினேன். பெரிய மாணவர்களை என்னால் சமாளிக்க முடியாது. அதனால்தான் இன்றுவரை பிரைமரி பள்ளியாகவே அதை வைத்திருக்கிறேன். எனது பென்ஷன் பணத்தையும் இந்தப்பள்ளிக்காகவே செலவிடுகிறேன்.
 
நான் பணியில் இருந்தபோது வேளாண் கல்லூரியில் படித்த எனது மாணவர்கள், பல்வேறு துறைகளில் இன்று சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் முடித்து அரசு உயர் பதவிகளிலும், தனியார் நிறுவனங்களின் முக்கிய தலைமைப் பொறுப்பிலும் இருக்கிறார்கள். எவ்வளவு உயர்ந்த நிலைக்கு சென்றாலும் இந்த கிராமத்து ஆசிரியரோடு அவர்கள் தொடர்பில் இருக்கிறார்கள். பள்ளிக்கு பக்கத்திலேயே ஶ்ரீவெங்கடாசலபதிக்கு ஆலயம் ஒன்றை எழுப்பி இருக்கிறேன். அனைத்து மக்களும் ஏற்றத்தாழ்வின்றி இங்குள்ள பெருமாளை வழிபடுகின்றார்கள்.
                                 
இங்கு செய்யும் நலப்பணிகளுக்கு,  ஒரு மாணவன் பணத்தை கொடுக்கிறான்... இன்னொரு மாணவன் பொருளை கொடுக்கிறான்… மற்றொரு  மாணவன் உதவிக்கு ஆட்களை அனுப்புகிறான். இதைவிட  ஓர் ஆசிரியருக்கு சந்தோஷம் வேறு என்ன வேண்டும்? இங்கே எனக்காக அனைத்து பிரிவு மக்களும் வேலை செய்கிறார்கள். எனது எல்லையில் சாதிகள் அறவே இல்லை. தோட்டத்தில் வேலை செய்பவர்கள், என் வீட்டு சமையலறை வரை வருவார்கள்" என்றவர், “சொந்த கிராமத்தைக்கூட முன்னேற்ற முடியாத கல்வி, ஒருவனுக்கு எதற்கு?” என்று பொட்டில் அடித்தாற்போல கேள்வியை முன் வைக்கிறார்!

உண்மைதானே!

-பா.ஜெயவேல்
படங்கள்: அ.குருஸ்தனம்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close