Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காமராஜர், தாமஸ் ஆல்வா எடிசன், ஏ.ஆர். ரஹ்மான், விராட் கோலி.... வெற்றிக் கல்வி கற்ற நாயகர்கள்! #BELOWMARKSHEROES


டித்துப் பட்டம் பெறாவிட்டாலும் வாழ்க்கையில் ஜொலிக்க முடியும், சாதிக்க முடியும், வெற்றிபெற முடியும்  என்பதற்கு முன்னுதாரணங்களாக திகழும் சாதனை நாயகர்கள் குறித்த பதிவு இது...

இதைப்போன்றே  படித்தது எட்டாம் வகுப்பு... ஆண்டு வருமானம் 290 கோடி...வருமானத்தைத் தொட்ட படிக்காத மேதைகளும் இருக்கிறார்கள்.

காமராசர்:

ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காமராசர், 1903-ல் விருதுநகரில் பிறந்தார். தனது ஆறு வயதிலேயே தந்தையை இழந்த காமராசர், பள்ளிப் படிப்பைத்  தொடர முடியாமல், துணிக்கடையில் வேலை பார்த்துவந்தார். அப்போது  டாக்டர் வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார் மற்றும் ஜோசப் போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களால் கவரப்பட்டு, சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பெரிய அளவில் பட்டப்படிப்பு எதுவும் படிக்கவில்லை என்றாலும் கூட காமராசர்,  தமிழகத்தின் முதலமைச்சர் ஆகி, சுமார் 23 ஆயிரம் பள்ளிகளைத் திறந்தார்.  மேலும் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற காமராசர்  படிக்காத மேதை, பெருந்தலைவர், கல்வித் தந்தை என்றெல்லாம் மக்களால் போற்றப்பட்டார்.
 

கண்ணதாசன்:


கவியரசர் கண்ணதாசன், காரைக்குடி அருகில் உள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதி புதூர்  உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும் படித்தார். 15-வது வயதில் கவிதை எழுதத் தொடங்கினார். இவரது இலக்கிய ஆளுமை சாகா வரம் பெற்றவை. 4,000 -க்கும் மேற்பட்ட கவிதைகள், 5,000 -க்கும் மேற்பட்ட திரைப்பாட பாடல்கள், கட்டுரைகள், நாவல்கள், சிறு காப்பியங்களைப் படைத்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவரும் படிக்காத மேதைதான்.
 

சச்சின் டெண்டுல்கர்:


'சாதனைகளின் சிகரம்' என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர்,  நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம்கொண்டதால்,  படிப்பின் மீது கவனம் செலுத்தவில்லை. அதனால், 10-ம் வகுப்பில் தேர்ச்சிபெறவில்லை.மும்பையில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் அபாரமாக விளையாடி, கிரிக்கெட் உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.  16 வயதில், இந்தியாவின் சார்பாக சர்வதேச கிரிக்கெட் போட்டிக்குத் தேர்வானார் . படிப்பில் தோல்வி அடைந்திருந்தாலும், கிரிக்கெட் விளையாட்டில்  பல வெற்றிகளைக் குவித்து,  உலக நாயகனாக வலம் வந்தார்.
 

ஏ.ஆர்.ரஹ்மான்:


'இசைப் புயல்', 'ஆஸ்கர் நாயகன்' என்று அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான், சென்னையில் பிறந்தவர். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு,  முழு நேரம்  இசையைக் கற்க ஆரம்பித்தார். எலெக்ட்ரானிக் பொருட்களின் மீது விருப்பம்கொண்ட ரஹ்மானுக்கு, கணினிப் பொறியியல் படிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. பள்ளிக் கல்வி இல்லாமல் போனாலும், தனது இசைப் புலமையால் லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் டிப்ளமோ பட்டமும் வாங்கினார். பெரிய அளவில் பட்டப் படிப்பு எதுவும்  இல்லாவிட்டாலும், இசையால் உலகளவில் பிரபலமானார், ஏ.ஆர்.ரஹ்மான். பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கெளவர டாக்டர் பட்டங்களை வழங்கி உள்ளன.

விராட் கோலி


சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகனாக இருப்பவர் விராட் கோலி. டெல்லியில்  நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். படிக்கும்போது, முழு நேரமும் கிரிக்கெட் மீதே கவனம் செலுத்தியதால், 12-ம் வகுப்பு படிப்பை முடித்ததும், படிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு, கிரிக்கெட் ஆட ஆரம்பித்தார். படிப்பில் சுமாரான விராட் கோலி, 2008-ல் U19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு கேப்டனாகத் தேர்வாகி, கோப்பையை வென்று இந்தியாவிற்குப் பெருமை தேடித்தந்தார்.
 

மேரிகோம்:


மணிப்பூர் மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்தில், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். கூலி வேலை செய்துவந்த பெற்றோருடன் வேலைக்குச் செல்வார். பள்ளிப் படிப்பில் சுமாராக  இருந்த மேரிகோம், முதலில் 10-ம் வகுப்பில் தோல்வியடைந்தார்.  தன் விடா முயற்சியால், சிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாக உருவெடுத்து, ஒலிம்பிக் பதக்கத்தை வென்று, நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்.
 

தாமஸ் ஆல்வா எடிசன்:


கண்டுபிடிப்புகளின் நாயகன், உலகுக்கு ஒளி தந்த தெய்வம் தாமஸ் ஆல்வா எடிசன். அமெரிக்காவில் பிறந்தவர். முதல் வகுப்பு படிக்கும்போதே, 'மூளைக் கோளாறு உள்ளவன்' என்று ஆசிரியரால் வீட்டுக்கு அனுப்பப்பட்டவர். பிறகு, தன் தாயிடம் படிப்பு  கற்றார்.  தான் பார்க்கும் எதையும் சோதித்து அறியும் ஆர்வம் சிறுவயதிலேயே இருந்தது. ஏழு வயதில் ரிச்சர்டு பார்க்கர், தாமஸ் பைன், சர் ஐசக் நியூட்டன் ஆகியோரின் புத்தகங்களை  11 வயதுக்குள் கற்றுத் தேர்ந்தார். 12-ம் வயதில், பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, கண்டுபிடிப்புகளைத் தொடங்கினார். இவர், தன் வாழ்நாளில் கண்டறிந்த விஷயங்கள் மொத்தம் 1,300. இதில் மின்சார பல்பு, எலெக்ட்ரிக் ஜெனரேட்டர், டெலிகிராப் சிஸ்டம், எலெக்ட்ரிக் ஃபேன், ரேடியோ வால்வு, தொலைபேசி, ஸ்பீக்கர், கிராமபோன், மூவி கேமரா ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை. அறிவியல், கணிதப் பாடங்கள் என்று எதையும் முறையாகக் கற்காமலேயே அறிவியலாளராக ஜொலித்தார் தாமஸ் ஆல்வா எடிசன்.
 

ரைட் சகோதரர்கள்:


'படைப்புக்குத் தேவை ஆக்க உணர்வு ஒரு சதவிகிதம், விடா முயற்சி 99 சதவிகிதம்' என,  உலக  மேதை தாமஸ் ஆல்வா எடிஸன் கூறுகிறார். பட்டம் பெறாத எடிசனைப் போன்ற படைப்பாளிகளின் அணியில் இடம்பெற்றவர்கள்தான் ஆர்வில், வில்பர் ரைட் சகோதரர்கள். தங்களது விடா முயற்சியால் பறக்கும் விமானத்தைக் கண்டுபிடித்தனர். பல நூற்றாண்டுகளாக கண்டுவந்த மனிதனின் பறக்கும் கனவை , நனவாக்கிய இந்த ரைட் சகோதரர்களும் பள்ளிப் படிப்பில் தோல்வி அடைந்தவர்கள்தான்.
 

ஸ்டீவ் ஜாப்ஸ்:


அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ், படிப்பில் ஆர்வம் இல்லாதவர். கல்லூரியில் சேர்ந்த ஆறு மாதங்களிலேயே, இந்தப் படிப்பு பயன் தராது என கல்லூரிக்கு குட்பை சொன்னவர். இவர்தான் பின்னாட்களில் ஆப்பிள் என்கிற நிறுவனத்தை உருவாக்கினார். கணினி மற்றும் மொபைல் சாதன உற்பத்தியில் உலகெங்கும் கொடிகட்டிப் பறக்கிறது இந்த ஆப்பிள் நிறுவனம்.

 

மைக்கேல் டெல்:


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பிறந்த மைக்கேல் டெல், சிறுவயதில் இருந்தே தொழில்நுட்பம் மற்றும் gadgets-ல் ஆர்வமாக இருந்தார். இவரை மருத்துவராக்க விரும்பி, கல்லூரியில் சேர்த்தனர். ஆனால், முதலாம் ஆண்டிலேயே கல்லூரிக்குப் போகாமல் சொந்தத் தொழிலில் ஈடுபட்டார். அதுவே தற்போது, 'டெல் இன்க்' என்ற பெயரில் பிரமாண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது. உலகில் மிகப் பெரிய கணினி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக , இந்த டெல் கம்பெனியை உருவாக்கிய மைக்கேல் டெல்,  கல்லூரிப் படிப்பை விரும்பாதவர்.

-என்.மல்லிகார்ஜுனா

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ