Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நேற்று குடிமகன்களின் புகலிடம் இன்று குளம்...சபாஷ் சப் கலெக்டர்! #WhereIsMyGreenWorld

தாமிர பரணியின் நதிக்கரையில் அமைந்துள்ள எழில் கொஞ்சும் ஊர், சேரன்மகாதேவி. கோயில்கள் நிறைந்த ஊர் என்பதால் கும்பகோணத்திற்கு அடுத்ததாக சேரன்மகாதேவியைதான், டெம்பிள் சிட்டி என அழைப்பார்கள். இவ்வூர் இன்னொரு வரலாற்று முக்கியத்துவமும் கொண்டது. தாமிரபரணி ஆற்றின் முதல் கால்வாயான 'கனடியன் கால்வாய்' (Canadian Canal) சேரன்மகாதேவியில்தான் உள்ளது.

ஏறத்தாழ 20 வருடங்களுக்கு முன்பு வரை கனடியன் கால்வாயில் இருந்து வரும் நீரைப் பல்வேறு குளங்களில் சேமித்து வைத்துதான் உபயோகித்து வந்தனர் சேரன்மகாதேவி மக்கள் . முக்கியமாக குடிநீருக்கும் அவர்கள் இந்த நீரைத்தான் சார்ந்து இருந்தனர். தொழில்நுட்பத்தால், நம் வீடு தேடி குழாய்களில் தண்ணீர் வர ஆரம்பித்ததும், இந்த நீரின் மதிப்பு குறைந்து விட்டது. அதோடு, அவற்றைச் சேமிக்க பயன்படுத்திய குளங்களும் மறக்கப்பட்டன. அப்படி ஒரு குளம்தான், மிளகு பிள்ளையார் கோயில் குளம்

மிளகுபிள்ளையார் எனும் பிள்ளையார் கோயிலின் அருகே அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்ற குளம், ஒரு நூற்றாண்டிற்கு முன் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 20 வருடங்களுக்கு முன், சேரன்மகாதேவி ஊரிலுள்ள அனைவருக்கும், அதாவது ஏறத்தாழ 2000 குடும்பங்களுக்கும் குடிநீர் இக்குளத்தில் இருந்துதான் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 20 ஏக்கர் நிலத்திற்கும் பாசன வசதிக்கான நீரையும் அளித்துள்ளது.

இத்தகைய நீர்நிலையின் சுகாதாரம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கைகழுவப்பட்டது. பிறகு, படிப்படியாக இது 'குடி'மகன்களின் சரணாலயமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம்.

கொஞ்சம்கூட உபயோகிக்க முடியாத நிலையில் முகம் சுளிக்கக்கூடிய வகையில் காணப்பட்ட  இந்த குளம், தற்போது பளிச்சிட ஆரம்பித்திருக்கிறது. அதற்கு காரணம், சேரன்மகாதேவி சப் கலெக்டர் விஷ்ணு. இவரது தலைமையில், கடந்த ஒருவாரமாக நடந்த தூர்வாரும் பணி முடிந்து தற்போது  அழகுமிளிர தோற்றமளிக்கிறது மிளகு பிள்ளையார் கோயில் குளம்.

குளத்திலும், குளத்தைச் சுற்றிலும் வளர்ந்து கிடந்த தேவையற்ற மரங்களும், செடிகளும் சுத்தமாக அப்புறப் படுத்தப்பட்டு, தற்போது குளத்தைச் சுற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.  இத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் அடுத்த கட்டமாக, மூன்று அடுக்குகள் மண் அடித்து சுத்தமான நீரை நிலத்தடிக்குள் புகுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்கிறார் விஷ்ணு. மீண்டும் குளம் பாழ்படாமல் இருக்க குளத்தைச் சுற்றி சுவர் அமைக்கும் திட்டமும் உள்ளதாம்.

குளத்தை காக்கும் எண்ணம் தோன்றியது எப்படி என சப் கலெக்டர் விஷ்ணுவிடம் கேட்டோம். " மிளகு பிள்ளையார் கோயில் குளம் மிகவும் தொன்மையானது. இது பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அதற்கான சான்றாக இங்கு ஒரு கல்வெட்டு கூட உள்ளது. பழமையின் மீது எனக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். அதை பாதுகாப்பது நம் கடமை.  இந்த குளத்தை தவறாக பயன்படுத்திவருவது என் காதுக்கு வந்தது. இந்த பாழடைந்த குளத்தினால் பல விதத்தில் நோய் அபாயங்களும் உள்ளன. டெங்கு, காலரா போன்றவை பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால் இதை பாதுகாக்க திட்டமிட்டேன்.

என்னுடன் சிலரை சேர்த்துக்கொண்டு களம் இறங்கினேன். முதற்கட்ட சுத்தப்படுத்துதலின்போது சுமார் 1,500 மது பாட்டில்கள் இங்கு கரையோரத்திலும், குளத்தினுள்ளும் கிடந்தன. அதைப்பார்த்தபோது மனிதர்கள் இயற்கைவளங்களை எந்தளவுக்கு மதிக்கிறார்கள் என வேதனை பிறந்தது. அந்த பாட்டில்களை அப்புறப்படுத்துவது பெரும் சிரமமாக இருந்தது. இருப்பினும் செய்துமுடிக்கவேண்டும் என உறுதியாக களம் இறங்கினோம். வெற்றிகண்டோம்", என்றார்.

தொடர்ந்து பேசிய விஷ்ணு, " இங்கு 1863ல் கட்டப்பட்டுள்ள ஒரு பங்களா உள்ளது. அது பாழடைந்து உள்ளது. அதையும் சீரமைத்து அதை ஒரு அருங்காட்சியகமாக மாற்றுவது எங்களின் அடுத்த திட்டம். இங்கு ஆங்கிலேயர் காலத்தில் உள்ள அரிய வரைபடங்கள், கல்வெட்டுக்கள் என அந்த அருங்காட்சியகத்தில் பல பொருட்கள் இடம்பெறும். இதன்மூலம் நம் வரலாற்றை நாம் அறிந்துகொள்ளமுடியும்” என்றார்.

"நம் ஊர் மக்களுக்கு பொழுதுபோக்க ஒரு இடம் கிடையாது. இப்போது குளத்தைச் சீரமைத்து, இருக்கைகள் போட்டு ஆங்காங்கே மரங்களை நட்டு ஒரு பூங்கா போல் மாற்றினால், இந்த இடத்தின் தொன்மையோடு சுற்றுச்சூழலும் காக்கப்படும். மக்களுக்கும் பொழுதுபோக்கு இடமாக பயன்படும். மேலும், அருங்காட்சியகம் இந்த ஊருக்கு ஒரு வரலாற்று பெருமையையும் தேடித் தரும்!” என மெல்லிதாக புன்னகைக்கிறார் விஷ்ணு.

குளத்தை துாய்மைப்படுத்தும் பணியில் சப் கலெக்டர் விஷ்ணுவுடன் துணைநின்றது, பேராசிரியர் விஸ்வநாதன் மற்றும் வெவ்வேறு கல்லுாரிகளை சேர்ந்த 30 கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சப் கலெக்டரின் இந்த பணியை சேரன்மகாதேவி மக்கள் புகழ்ந்துபேசுகிறார்கள்.

வாங்கும் ஊதியத்துக்கு உழைத்தால் போதும் என்ற மனப்பான்மை கொண்ட அரசு ஊழியர்கள் மத்தியில் தான் பணியாற்றும் இடத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில்  தன் உழைப்பைச் செலவிடும் விஷ்ணுவுக்கு ஒரு சல்யூட் போடலாம்!

ந .ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close