Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்கள் குழந்தைகளை பாடகராக்குவது எப்படி? - ஆலோசனைகள் சொல்கிறார் சுதா ரகுநாதன்!

பாட்டு, நடனத்தில் தங்கள் குழந்தைகள் ஜொலிக்க வேண்டும் என்று நினைக்கின்ற பெற்றோர்களுக்கு, குழந்தைகளை அந்தத் துறையில் எப்படி மோல்ட் செய்ய வேண்டும் என்ற தன் அனுபவத்தை ஆலோசனையாக சொல்கிறார் கர்நாட இசைப் பாடகி சுதா ரகுநாதன்.

"குழந்தைகளுக்கு இயல்பிலேயே இசை மீது விருப்பம் இருக்கும். அதன் காரணமாகவே ரேடியோ/ டி.வி/விழாவில்  பாடல்கள் ஒலி, ஒளிபரப்பாகும்போது அதைக் கேட்டு தானாகவே பாடத் தொடங்குவார்கள். அப்போது அவர்களுக்குள் பாடுகிற ரசனை  இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். பொதுவாக பாடுகிற பயிற்சியை குழந்தைகளுக்கு 4 அல்லது 5 வயதில் தரலாம். குழந்தைகள் ஆர்வத்தோடு பாடினாலும், ஒரே இடத்தில் சில மணி நேரங்கள் அமருவதற்கு பொறுமை வேண்டும். அப்போதுதான் அவர்கள் கவனமாக பயிற்சிப் பெற முடியும்" என்றவர் பாடும் திறன் உள்ள குழந்தைகளுக்கு எப்படி பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பதையும் விவரித்தார்.

''ஒரு விளையாட்டுக்கு அல்லது பயிற்சிக்கு முன்பாக,  முன் தயாரிப்புகள் எனப்படும் வார்ம்-அப் பயிற்சிகள் தரப்படுவது போல பாடுவதற்கும் அடிப்படை பயிற்சிகள் தர வேண்டும். அடிப்படை பயிற்சியை குழந்தைகள் கவனமாகப் பிடித்துக்கொள்வதற்கு மூன்று வருடம் ஆகும். இதை அலங்கார வரிசை என்று சொல்வோம். இது குழந்தைகளுக்கு 'போர்' அடிப்பது போல இருக்கும். சில நேரங்களில் குழந்தைகளுக்கு போரடிக்கக்கூடாது என்பதற்காக பாரதியார் பாடல்கள் போன்று சிறிய பாடல்களை சொல்லிக்கொடுப்பார்கள். ஆனால் பொறுமையாக இருக்க வேண்டும்.

ஒரு தொழிலாக இதைக் கொண்டு போக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அடிப்படை இசைப்பயிற்சி மிக அவசியம். அடிப்படைப் பயிற்சி முடிந்தவுடன் வர்ணம் தொடங்கும். இந்த பயிற்சியில் குரல் வளம் வலுப்படும். தாளமும் சரியாக நிற்கும். அதன் பின்னர்தான் கீர்த்தனை பயிற்சிகள் தொடங்கும். இதில்தான் தமிழ்பாடல்கள், தியாகராயர் பாடல்கள், தேவாரம், திவ்யபிரபந்தம் போன்ற பாடல்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும். கீர்த்தனை வரை கற்றுக்கொள்ள 5 ஆண்டுகள் ஆகும்" என்றவர் பயிற்சி கொடுக்கும் ஆசிரியர்களுக்கு சில விஷயங்களை எடுத்துச் சொன்னார்.



'' சிறிய வயதில் பயிற்சி எடுக்கும் குழந்தைகளுக்கு பெரிதாக குரல் பாதிக்கப்படாது. முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. ஸ்ருதி என்றும், குரல் கட்டை என்றும் சொல்லப்படுவதில் குழந்தைகள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை பயிற்சி கொடுப்பவர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். நல்ல குரல் வளம் உள்ள குழந்தைகள் 6 கட்டையில் பாடுவார்கள். குரல் உடையும் போது அரை கட்டை குறைய ஆரம்பிக்கும். சில ஆண் குழந்தைகளுக்கு குரல் உடையும் முன்பு பெண் குரல் போல இருக்கும். குரல் உடையும் போது 2 கட்டை வரை குறையும். பயிற்சி கொடுப்பவர்கள் குழந்தைகளின் குரல்கட்டையை கவனிக்க வேண்டும்.

எந்த குழந்தைக்கு எந்த கட்டை இயல்பாக வருகிறதோ அந்த கட்டையில்தான் பாட அனுமதிக்க வேண்டும். சக்தியை மீறி பாட முயற்சிக்கும் போது குரல் கட்டை பாதிக்கப்படும். குரல் வளை பாதிக்கப்படும். தொண்டையில் புண் வருவதற்கு, குரல் வளம் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதே போல உணவுக் கட்டுப்பாடும் குழந்தைகளுக்கு தேவை. அதிகம் கத்திப் பேசுவதோ, உரக்கப் பேசுவதோக் கூடாது. அதிக புளிப்பு , காரம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. பயிற்சி வகுப்புகள் போக வீட்டிலேயே இசைக் கருவிகளை வைத்து பயிற்சி செய்ய வேண்டும். பொதுவாக காலை 5 மணிக்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் பாடல் பயிற்சிகளை தொடர்ந்து சிரத்தையாக எடுத்து வந்தால், சிறந்த பாடகராக வெற்றிப் பெற முடியும்" என்று முத்தாய்ப்பாக சொல்லி முடித்தார் சுதா ரகுநாதன்.

- கே.பாலசுப்பிரமணி

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close