Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கடவுளுடன் உரையாடியிருந்தால் தக்காளி விலை தடுமாற வைத்திருக்காது!

நீங்கள் என்றாவது கடவுளிடம் உரையாடி இருக்கிறீர்களா...? ஆலயங்களில் நாம் கடவுளிடம், நமது வேண்டுகோள்களை முன் வைத்து நாம் முணுமுணுப்பதை சொல்லவில்லை. அது உரையாடல்கள் ஆகாது. உரையாடல் என்றால் நம் எதிர் தரப்பும் பேச வேண்டும். இப்போது சொல்லுங்கள், நீங்கள் என்றாவது கடவுளிடம் உரையாடி இருக்கிறீர்களா...? இல்லைதானே... ஆனால், உலகிலேயே மிகவும் சுலபமான காரியம், கடவுளிடம் உரையாடுவதுதான். கடவுளிடம் நாம் உண்மையாக உரையாடி இருந்தால், நம் உணவு தட்டில் எப்போதும் தக்காளி இருந்திருக்கும். ஆம் கடவுளுக்கும் தக்காளிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

கடவுளுடனான உரையாடல்:

நான் வார்த்தை வர்ணனைகளுக்காக சொல்லவில்லை. உண்மையில் தக்காளி விலையேற்றத்திற்கும் கடவுளிடம் உரையாடுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தயவு செய்து நீங்கள் இதை 'வறட்சி, புயலை கடவுள் உண்டாக்குகிறார் . அதனால், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்கிறது' என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்ளாதீர்கள். அதற்கெல்லாம் நிச்சயம் கடவுள் காரணமில்லை. அது அனைத்தும் மனிதனின் பிழைகள்; பேராசையின் விளைவுகள். நான் சொல்வது கடவுளுடன், நேரடியான தனி மனித உரையாடல். அது நிகழ்ந்திருந்தால் நிச்சயம் தக்காளி விலை ஏறி இருக்காது. சரி குழப்பாமல், நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.

கடவுளிடன் உரையாடுவதென்பது ஆலயங்களில் பல ஆண்டு காலம் தவம் இருப்பது அல்ல. அதனால் ஒருபோதும், உரையாடல் நிகழாது. ஆனால், நாம் ‘நான்’, ‘என்னால்’ என்ற அகந்தையை இழக்கும்போது சுலபமாக கடவுளிடம் உரையாட முடியும். அந்த அகந்தையை, வியர்வையைத் தவிர எந்த அமிலத்தாலும் கரைக்கமுடியாது. ஆம் வியர்வையையும் கடவுளை மகிழ்விக்கும் செயலுக்காக சிந்துவோமானால், நிச்சயம் கடவுள் நம்முடன் உரையாடுவார்.

கடவுளும், தக்காளியும்:

சரி, கடவுள் எப்போது மகிழ்வார்...? கடவுளின் சுயநலமற்ற படைப்புகளிடம் நாம் அளவு கடந்த நேசம், காதல் கொள்ளும் போது, அந்த படைப்புகளை நாம் மகிழ்விக்கும்போது கடவுள் பெரு மகிழ்ச்சிக் கொள்வார். அந்த படைப்பின் ஊடாகவே நம்முடன் பேசுவார். சரி சுயநலமற்ற கடவுளின் படைப்பு என்ன...? நிச்சயம் இயற்கைதான். மரம், செடி, கொடி இவை அனைத்தும் கடவுளின் தன்னலமற்ற படைப்புகள். நாம் கோடாரிகள் கொண்டு வெட்டினாலும், அந்த படைப்புகள் நமக்கு நன்மையை மட்டுமே தருமே அன்றி, நிச்சயம் கெடுதல் செய்யாது. அந்த படைப்புகளை நாம் மகிழ்விக்கும்போது,  அதன் மூலமாக கடவுள் நம்முடன் உறவாடுவார்.

எப்படி இயற்கையை மகிழ்விப்பது...? மரம், செடி கொடிகளை அளவற்ற அன்பு கொண்டு வளர்ப்பது. அந்த படைப்புகளின் மகிழ்ச்சிக்காக வியர்வை சிந்துவது. அதாவது, நம் வீட்டில் பூஜையறையில் உள்ள கடவுளுக்கு நிகரான மரியாதையை, நம் வீட்டு தோட்டத்திற்கும் அளித்து, நம் வியர்வையை அபிஷேகமாக சிந்தும்போது நிச்சயம் இயற்கை மகிழும். கடவுள், அந்த மரம், செடிகள் தரும் பலனான காய்,கனிகள் மூலமாக நம்முடன் உரையாடுவார்.

சின்ன அறைகளில் உரையாடுவதை கடவுள் விரும்புவதில்லை. கடவுளுடனான உண்மையான உரையாடல்கள் என்பது, நம் வீட்டு தோட்டதில்தான் நிகழ வேண்டும். தினமும் நாம் ஒரு அரை மணி நேரம் வியர்வை சிந்தி, வீட்டுத் தோட்டத்தில் மரம், செடி கொடிகளை வளர்ப்பதுதான் கடவுளுடனான உரையாடல். ஆம், கடவுள் சொற்களை விட செயல்களையே விரும்புகிறார்.



நம் வீட்டுத் தோட்டத்தில் நமக்கு தேவையான காய்கறி விதைகளை தூவி, அதற்கு தண்ணீர் பாய்ச்சி, கொஞ்சம் வியர்வை சிந்தி, அதனை வளர்த்தெடுத்தால், நிச்சயம் கடவுள் நம்முடன் உரையாடி இருப்பார். ஆம் அந்த மகசூல் தான் கடவுளின் உரையாடல்.

இதை நிகழ்த்த ஏக்கர் கணக்கில் இடம் தேவையில்லை, சில சதுர அடி நிலங்கள் இருந்தாலே போதும். ஆம். கடவுளிடம் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. நாம் அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருந்தால், நம்வீட்டு பால்கனியிலேயே இந்த உரையாடல்களை நிகழ்த்தலாம்.

கடவுளுடனான உரையாடல் மட்டும் இந்த செய்கையால் நிகழவில்லை, உன்னதமான உடற்பயற்சி தினமும் நிகழ்கிறது. ஆரோக்கியம் கிடைக்கிறது, உடலும், ஆன்மாவும் இன்புறுகிறது. அதுவும் குடும்பமாக உழைக்கும் போது குடும்பத்திற்குள் இருக்கும் இறுக்கம் தளர்ந்து மகிழ்ச்சி பிறக்கிறது.  வாழ்க்கை சுவாரஸ்யமானதாகவும் ஆகிறது.அது மட்டுமல்ல, நமக்கு தேவையான காய்கறிகள் அனைத்தும் கிடைக்கிறது. ஆம், தக்காளி விலை எவ்வளவு உயர்ந்தாலும், கடவுளுடனான உரையாடல் மூலம், நம் வீட்டு சாப்பாட்டு மேஜையில் எப்போதும் ஆரோக்யமான தக்காளி இருக்கும்.

இனியாவது, தினமும் கடவுளுடன் உரையாடுவோம்.

- மு. நியாஸ் அகமது

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close