Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

7 வது சம்பளக் கமிஷன்: ஊதிய உயர்வு ஊழியர்களுக்கு ஏன் மகிழ்ச்சி அளிக்கவில்லை?

ழாவது ஊதியக்குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் ஒரு கோடி பேர் பயன்பெறுவார்கள். அவர்களது சம்பளத் தொகை 23.55 சதவிகிதம் உயரும். அடிப்படை சம்பளம் 14.27 சதவிகிதம் உயர்த்தப்பட வேண்டுமென ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளது.  இதில் 50 லட்சம் ஊழியர்களும், 58 லட்சம் பென்சன் பெறுபவர்களும் பயன் அடைவார்கள். இந்த ஊதிய உயர்வு, 2016 ஜனவரி 1-ம் தேதியிலிருந்து கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள குறைந்தபட்ச ஊதியமான ரூ.7000-ஐ, இரண்டு மடங்குக்கும் கூடுதலாக உயர்த்த வேண்டும் என ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளது. அதாவது குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் ஆகும்.

மேலும், இந்த ஊதிய உயர்வினால் மத்திய அரசுக்கு ஒரு வருடத்துக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் செலவாகும். இது இந்தியாவின் ஜி.டி.பி.யில் 0.7 சதவிகிதம் ஆகும்.

இந்த ஊதிய உயர்வால் பொருளாதார வளர்ச்சிக்கு எந்தவிதமான பாதிப்பும் வாரது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மேலும், அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும்போது வீடு, கார் விற்பனையும் உயரும். வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரிக்கும். சம்பள உயர்வு கிடைக்கும் போதெல்லாம் பெரும்பாலானவர்கள் அந்த பணத்தை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வார்கள். இதன் மூலமாக கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியில் இருந்த ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசு பொறுப்பு ஏற்றதிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற நலத்திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றுவதற்கு மானியங்களை குறைக்க வேண்டுமென அரசு கூறுகிறது. மானிய சுமையை குறைப்பதற்காக, ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்குமாறு தினமும் விளம்பரப்படுத்தி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் மூத்த குடிமக்களின் ரயில் டிக்கெட் மானியத்தை விட்டுத் தருமாறும் கேட்டுக்கொண்டுள்ள மத்திய அரசு,  தனது ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தியுள்ளது.

இது மிக அதிகமான சம்பள உயர்வு என பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால், இந்த சம்பள உயர்வால் கடைநிலை ஊழியர்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை என்று கூறுகிறார், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளத்தின் தமிழ் மாநில பிரிவின் பொது செயலாளர் துரைப்பாண்டியன்.

"மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வானது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும். ஆனால், சில நேரங்களில் இது 10-12 ஆண்டுகள் கூட ஆகலாம். எங்களின் போரட்டத்துக்கு பிறகுதான் இந்த சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு முறை சம்பளத்தை உயர்த்தும் போதும் விலைவாசி உயர்வை சம்பள உயர்வுக்கு ஒரு காரணியாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால், ஊதியக் குழு, அரசின் பதிவுகளில் உள்ள விலைவாசி உயர்வைவிட மிகக் குறைந்த அளவில் கணக்கிட்டுள்ளார்கள். நாங்கள் அடிப்படை சம்பளம் ரூ.26 ஆயிரம் கேட்டோம். ஆனால், ஊதியக் குழு ரூ.18 ஆயிரத்தை பரிந்துரை செய்துள்ளது. இது மிகவும் குறைவான அளவு ஆகும்.

மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஊதியக் குழு பரிந்துரை செய்த ஊதியம் மிகவும் குறைவு என்று கூறினோம். அதன் பிறகு அது மாற்றி அமைக்கப்படும் என கடந்த ஏழு மாதங்களாக பல கூட்டங்களை மத்திய அரசு நடத்திய பின்பு, குழு பரிந்துரை செய்துள்ள சம்பளமே கொடுக்கப்பட்டுள்ளது. அதே சம்பளத்தை கொடுப்பதற்கு எதற்கு கால அவகாசம் எடுத்துக் கொண்டார்கள் எனத் தெரியவில்லை. மேலும், மத்திய அரசு ஊழியர்களில் 90 சதவிகிதம் பேர் குரூப் சி, டி நிலை பணியாளர்கள். மீதமுள்ள 10 சதவிகிதம் பேர்தான் ஏ, பி குரூப் நிலையில் இருப்பவர்கள். இந்த சம்பள உயர்வினால் பயன் பெறுபவர்கள் ஏ, பி குரூப்பில் இருப்பவர்கள்தான். குறைந்தபட்ச சம்பளம் வாங்குபவர்களில் பலர், கிளார்க் பணியில் இருப்பவர்கள். இவர்களுக்கு எப்படி ரூ.18 ஆயிரம் சம்பளம் போதும் என்பது தெரியவில்லை. எனவே, மத்திய அரசு ஊழியர்கள், திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் செய்வோம்'' என்று தெரிவித்தார்.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் மத்திய அரசின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளமானது மிகவும் குறைவு என்று கூறுகிறார் சி.பி.எம் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ்.

''ஒட்டு மொத்த செலவுகளில் 5 சதவிகித தொகையை, அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு மத்திய அரசு செலவு செய்கிறது. அரசு, தனது வருமானத்தை அதிகப்படுத்தாமல் அதிகம் செலவு செய்கிறோம் எனச் சொல்லக்கூடாது. இது தவறான கருத்து. மேலும் மத்திய அரசில் 20 சதவிகிதம் அளவுக்கு காலியிடங்கள் உள்ளன. இதை சேர்த்துதான் இந்த ரூ.1.02 லட்சம் கோடி ஆகும். அதாவது ஒரு கோடி பேருக்கு ஒரு லட்சம் கோடியை செலவு செய்கிறது.

மத்திய அரசு வசூல் செய்ய வேண்டிய வராக்கடன் தொகையை வசூல் செய்தாலே,  நாட்டில் உள்ள பல பிரச்னைகள் குறையும். இந்த வராக்கடனை தள்ளுபடி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு கொண்டு வந்தாலே மானியச் சுமை அதிக அளவில் குறையும்.  அரசு பொதுமக்களுக்காக வழங்கும் மானியங்களின் தொகையும் மிகக் குறைவுதான். அதாவது உணவு, எரிவாயு, உரம் ஆகியவற்றில்தான் மானியம் வழங்குகிறார்கள். இதில் உணவு, எரிவாயு மானியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு வருகின்றன. உரமானியமும் வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டது. இதெல்லாம் இவர்களுக்கு பிரச்னையே கிடையாது.

இந்த ஊதிய உயர்வு மத்திய அரசு ஊழியர்களின் நலனுக்காக வழங்கவில்லை. தற்போது நிலவும் சில பிரச்னைகளினால் குறிப்பிட்ட சில துறைகளின் வளர்ச்சி குறைந்துள்ளது. அதை ஊக்குவிப்பதற்காகத்தான் இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட் துறைகளுக்காகத்தான். வருமானம் சிறிய அளவு உயரும் போது இ.எம்.ஐ.யில் வீடு வாங்குவது, கார் வாங்குவது, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் போன்றவைகளை வாங்குவார்கள். இதனால் சில துறைகள் வளர்ச்சி அடையும் என அரசு நம்புகிறது. ஊழியர்களின் நலனை மனதில் வைத்து அரசு எதையும் செய்யவில்லை'' என்று முடித்தார்.

" தனியார் நிறுவனங்களிலும் சம்பள உயர்வு என்பது இருக்கும். ஆனால், அது வெளியே தெரிவதில்லை. 45 லட்சம் ஊழியர்கள் வேலை பார்க்கும் துறை என்பதால் இந்த ஊதிய உயர்வு பெரிய விஷயமாக வெளியில் தெரிகிறது. ஊதிய உயர்வினால் விலை உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு,  குறைவுதான். ஊதியம் உயரவில்லை எனில் அரசு பணிக்கு வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும். இதனால் அரசு வேலைகள் முடங்கும் என்பதை புரிந்து கொள்வது அவசியம். ஊதிய உயர்வுக்கும் மானிய சுமைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை" என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

இந்த சம்பள உயர்வை வைத்துக் கொண்டு எந்தவிதமான பொருளையும் வாங்க முடியாது.  மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தியதுமே, அன்றாட பொருட்களின் விலை உயருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதே சமயம் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்ந்தால் விலைவாசி ஏன் உயருகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.


பொதுவாக மத்திய அரசு,  ஊதியக்குழு பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்த அடுத்த சில மாதங்களில், மாநில அரசும் தங்களது ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கும் என்பதால், 7-வது ஊதியக்குழு பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள விவகாரம் மாநில அரசு ஊழியர்களிடையேயும் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

- இரா. ரூபாவதி

எடிட்டர் சாய்ஸ்