Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாலு நண்பேன்டாக்களும் நல்லா இருந்த ரூமும்..! #roommate atrocities

'கிரேஸி' கண்மணிகள்!

'அது ஏன்டா எனக்கு மட்டும் இப்படி நடக்குது...' என உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? எனக்கு அடிக்கடி தோன்றுகிறது. உபயம்: என் ரூம்மேட்டாகிய காலேஜ்மேட். 'லவ் பண்ணிட்டு கூட இருக்கலாம். லவ் பண்றவன் ரூம்மேட்டா மட்டும் இருக்கக்கூடாது' என்ற சொலவடை இவனுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கலாம். இவர்களால் நீங்களும் தேர்தலுக்கு பிந்தைய தேமுதிக போல பரிதாபகரமாய் இருக்கக்கூடும். அது சரி, ரூம் மேட் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். நோ ஒர்ரீஸ் பாய்ஸ்.

இவர்களிடம் உஷாராக இருக்க, இப்போது சொல்லப்போகும் விதிகளை பின்பற்றினால்போதும். சியர் அப்.

விதி- 1...உத்தரவின்றி நோ என்ட்ரி

Huggies மாட்டிய காலத்திலிருந்தே நீங்களும் அவரும் Buddies ஆக இருந்தாலும் சரி, அவர் காதல் கதைத்துக் கொண்டிருக்கும்போது அறைக்குள்ளே நுழைந்துவிடாதீர்கள். சட்டென வால்யூம் கம்மி செய்து, உங்களை பூஜை நேரத்து கரடியாக்கிவிடுவார்கள். தட் இந்த அவமானம் உங்களுக்குத் தேவையா மொமன்ட்.

இதுவாவது அகிம்சை வழி இம்சை. ஸ்கைப் காலில் இருக்கும்போது உள்ளே நுழைந்தால், 'மச்சி வீட்டுக்குள்ள சொல்லிட்டு வரமாட்டியா... திடீர்னு ஸ்க்ரீன்ல நீ வந்தா அவ பயந்துடுவா' என்பார்கள். 'நாயே... நீ பாக்கி வைக்கிற வாடகையையும் நான்தான்டா சேர்த்துக் கட்டுறேன்' என சொல்ல நாக்கு சிவக்கும். ஆனா நாமதான் விக்ரமன் படத்துல வர்ற சாஃப்டான சித்தப்பா கேரக்டர் ஆச்சே! வாய்ப்பில்ல.

விதி- 2... பார்ட்டி அறவேக் கூடாது

சனிக்கிழமைதான். காசு இருக்கிறதுதான். ஆனால் அதற்காக இவர்களோடு 'பார்ட்டி' மட்டும் பண்ணிவிடவே கூடாது. ஃபர்ஸ்ட் ஷோ கூட்டத்திற்கே சவால்விடும் க்யூவில் நின்று போராடி 'வாங்கி' வந்திருப்பீர்கள். 'இரு மச்சி, கால் பண்றா, டூ மினிட்ஸ். பேசிட்டு வந்துடுறேன்' என போவார்கள். அவ்வளவுதான். தொடங்குவதற்கு முன்பே முடிந்துவிட்டது என அர்த்தம். வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தாலும் தனியாக பார்ட்டி பண்ணவும் மனசு வராது.'சரி கழுதை... நொறுக்குத் தீனியையாவது தின்போம்' எனத் தேடினால், அதையும் 'பேச்சுத்துணைக்கு' எடுத்துச் சென்று மைக்ரோபோன் வழியே அவளுக்கு ஊட்டிக் கொண்டிருப்பான். அடேய்!! நான் போன ஜென்மத்துல பண்ண மொத்த பாவத்துக்கும் சேர்த்து வச்சு வந்த 'வரம்' ராசா நீ!

விதி- 3...சமாதானம் செய்தல் பாவம்

வாரத்திற்கு இத்தனை தடவை சண்டை போடவேண்டும் என நமது ரூம் மேட் ரோமியோவும், அவனது உட்பி ஜூலியட்டும் கணக்கு வைத்திருப்பார்கள்போல. சரி அதுவாவது அவர்களின் பர்சனல். போய்த் தொலைகிறது. ஆனால் அந்த சமாதானப் படலத்திற்கு நம்மை இழுப்பார்கள். 'அண்ணா... அவனை நேத்து நிறைய திட்டிட்டேன், கவலையில சாப்பிடாம இருப்பான், பாத்துக்கோங்க' என அரைமணிநேரத்திற்கு ஒருக்கா போன் செய்து நம்மை சாப்பிட விடமாட்டார்கள்.

பிரியாணில பீஸ் கம்மியா இருக்குன்னு அவன் சர்வர்கிட்ட சண்டை போட்டுகிட்டு இருக்குற விஷயத்தை எப்படித் தங்கச்சி உன்கிட்ட சொல்லமுடியும்? (இது நம்ம மைண்ட் வாய்ஸ்) இந்தப் பக்கம் அவன், 'மச்சி அவளைத் திட்டிட்டேன், சமாதானப்படுத்துடா' என்பான். (நீ போட்ட சண்டைக்கு என் சட்ட ஏன்டா கிழியணும் என்பது உங்கள் மைண்ட் வாய்சாக இருக்கும்). இவர்களுக்கு பஞ்சாயத்து பண்ணிய அனுபவத்தில்,  'சொல்வதெல்லாம் உண்மை சீசன் 5-ஐ' தொகுத்து வழங்கலாம் என இருக்கிறேன்.

விதி- 4... தூக்க தியாகம் கூடாது

நடு இரவில் நீங்கள் அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென கீச்கீச் என சத்தம் வந்தால் எலியை அடிக்க கட்டையைத் தூக்கி விடாதீர்கள். ரொமான்ஸ் என்ற பெயரில் ஏதோவொரு கருமத்தை போனில் செய்துகொண்டிருப்பார்கள். அதற்கு அலைபாயுதே மாதவன் மாதிரி ரியாக்‌ஷன் வேறு. இதிலிருந்து தப்பிக்க பஞ்சு எல்லாம் பத்தாது. முண்டாசுதான் பெஸ்ட். (எப்படி கட்டவேண்டும் எனத் தெரியாதவர்கள் தேர்தல் காலத்தில் பச்சை முண்டாசை கட்டிக்கொண்டு வலம் வந்தவரை அணுகவும்). அப்படி செய்தாலும் அந்த தீயசக்தி உங்களை விடாது. எழுப்பி, 'என்ன மச்சி இப்போலாம் பேசவே மாட்ற' எனக் கேட்கும். உனக்கெல்லாம் கண்டிப்பா மிருகினஜம்போ தான்டா!

விதி- 5... நோ என்டர்டெயின்மென்ட்

Man vs. Wild ஆகட்டும், 'சமையல் மந்திரம்' ஆகட்டும். எதையும் பார்க்கவே விடமாட்டார்கள். சதா சர்வகாலமும் பாட்டு சேனல்தான். மொக்கை பாட்டில் வரும் பாடாவதி ரொமான்ஸ் சீனையும் சப்புக்கொட்டி பார்ப்பார்கள். பார்ப்பதோடு மட்டுமல்லாமல் உச்சஸ்தாயியில் விடிவி கணேஷ் குரலில் பாட்டு வேறு. 'பாட்டு பாடி உன்ன தூங்க வைக்கிறேன் பாரு' என்பார்கள்... உனக்கு விஷத்த வைக்கிறேன் பாரு.

காதலி ஒரு மொக்கை படத்தை போய் பார்க்க சொன்னாலும், தயங்காமல் பார்ப்பார்கள். துணைக்கு நாம். படத்தை ஒழுங்காக பார்க்காமல் சாட் செய்வார்கள். அந்த வெளிச்சத்தில் திகில் படத்தில் வரும் பேயைப் போல உங்கள் முகம் வெளுத்து போயிருக்கும். சொந்த மம்மியே பயப்படக்கூடிய நேரம் அது. ஸோ, இவர்களோடு நோ என்டர்டெயின்மென்ட்.

விதி- 6 தியாகி பென்சன் கிடையாது

இந்த கமிடட் ஆண்களிடம் இருக்கும் கெட்டப் பழக்கம், கமிட் ஆனாலும் மற்ற பெண்களோடும் 'கடலை' போட்டுக் கொண்டிருப்பார்கள். இதனால் காதலியை சந்திக்கச் செல்லும்போது சாட்பாக்ஸை க்ளியராக வைத்திருப்பார்கள். கேட்டால் 'அவன் ரூம்ல என் மொபைல்ல கேம் விளையாடுவான்மா. அதான் நம்ம சேப்டிக்கு' என ஒரே நிமிடத்தில் நம்மை சித்தார்த் அபிமன்யூ ஆக்கிவிடுவார்கள்.

'ஏழு கழுத வயசுல என்ன கேம்' என அப்பாவியாய் நம்மை கரித்துக் கொட்டுவாள் நண்பனின் காதலி. சில சமயம் அழிக்க மறந்துவிட்டால், 'அவன் கேர்ள்பிரண்ட்மா. அவன்கிட்ட நெட் பேலன்ஸ் இல்லனு இதுல இருந்து சாட் பண்ணான்' என்பார்கள். அந்த வெள்ளந்தியும் கால் செய்து, 'வாழ்த்துகள்ண்ணா' என்பாள். பதிலுக்கு என்ன சொல்ல....? ஆழ்ந்த இரங்கல்கள்மா! 

விதி- 7 கடன் கண்டமேனிக்கு முறிக்கும்

காலேஜ் சமயத்தில் உள்ளாடையைக் கூட  உள்ளன்போடு பண்டமாற்று செய்துகொள்ளும் நண்பன்தான். ஆனால் இந்த காதல் வியாதி வந்தபிறகு கடன் கொடுத்தலை குறைத்துக் கொள்ளுதல் நலம். நம் ஃபேவரைட் சட்டையை போட்டுக் கொண்டு காதல் வளர்க்க சென்றிருப்பார்கள். அது நல்லாருக்கு என அவனின் அவள் சொல்லிவிட்டால், பின்னர் சட்டையை நீங்கள் ஃபிளாஷ்பேக்கில்தான் பார்க்க முடியும். கோபத்தில் போனை போட்டு உடைப்பார்கள். பின் புது போன் வாங்க நம்மிடம் கடன் வாங்குவார்கள். 'அவளாலதான போனை உடைச்ச. அவளை வாங்கித் தர சொல்லு' என்றால், 'பாவம் மச்சி அவளுக்கு கஷ்டம் தரக்கூடாது' என்பான். அவனின் இந்த நல்ல மனசு காரணமாக மாசக்கடைசியில் நம் வயிற்றுக்குள் புயல், பூகம்பம் எல்லாம் நடக்கும்.

மனைவி அமைவதெல்லாம் மட்டுமில்லீங்க...ரூம் மேட்ஸ் அமைவதெல்லாம் கூட இறைவன் கொடுத்த வரம்தான்!!!

- நித்திஷ்

எடிட்டர் சாய்ஸ்