Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீங்கள் கடைசியாக எப்போது மழையில் நனைந்தீர்கள்?

நீங்கள் கடைசியாக எப்போது மழையில் நனைந்தீர்கள்? கடைசியாக எப்போது ஒரு செடிக்கான விதையை மண்ணில் விதைத்தீர்கள்? கடைசியாக எந்த ஞாயிற்றுக் கிழமை ஆசுவாசமாய் சமைத்து சாப்பிட்டுவிட்டு குட்டித் தூக்கம் போட்டீர்கள்? கடைசியாக என்று குடும்பத்துடன் மொட்டைமாடி நிலவொளியில் பேசி மகிழ்ந்தீர்கள்? கடைசியாக என்று வேப்பமரத்தடி நிழலில் இளைப்பாறினீர்கள்? கேள்விகளுக்கும் இதைத் தொடரும் பல நூறு கேள்விகளுக்கும் நம்மிடையே இருக்கும் பதில் ஞாபகமில்லை என்பதுதான்.

அந்தளவிற்கு நம்முடைய வாழ்க்கையை செல்போன்களும், சமூக வலைதளங்களும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. காலையில் எழுந்து, பேப்பரில் அன்றைய செய்திகளைப் படித்துவிட்டு, சில இட்லிகளைப் பிய்த்து வயிற்றுக்குள் போட்டுவிட்டு, கையில் ஒரு தயிர் சாதத்தையோ, பிரியாணியையோ கட்டிக் கொண்டு வேலைக்குச் சென்றதெல்லாம் இனி கதைகளில் மட்டுமே சாத்தியம்.

ரோட்டில் நடந்து போகும், காரில், பேருந்தில், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் எல்லோருக்குமே வங்கியில் கணக்கிருக்கிறதோ இல்லையோ ஃபேஸ்புக்கில் கண்டிப்பாக ஒரு அக்கவுன்ட் இருந்தே தீரும். இங்கு எல்லோருமே நாட்டாமைகள், எல்லோருமே நியாயவாதிகள், எல்லோருமே தீர்க்கதரிசிகள், எல்லோருமே கருத்துக் கணிப்பாளர்கள்.

நான்கிற்கு நான்கு அடி சிறைக்குள் அடைப்பட்டு கிடக்கும் கைதிகளை விட,  இன்றைக்கு நாமெல்லோருமே கணினியின் ஊடே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கற்பனை உலகிற்குள்தான் சிக்கிக் கொண்டிருக்கின்றோம். 

பொய்கள், புரளிகள், எதிர்மறைக் கருத்துகள், எல்லாவற்றுக்கும் சண்டை என நிலைத்தகவல்களால் ஏற்படும் மோதல்களை பார்த்தால்,  வடிவேலு  பட காமெடியைப் போல, ‘தம்பி இது ரத்த பூமி’ என்றுதான் தினம்தினம் சமூக வலைதளத்தின் பொழுது விடிகிறது.

எளிமையாக வாழ்வினை அணுகாமல், அதைச் சிக்கலாக்கிக் கொள்ளும் வகையிலான நட்புகளும், தோழமைகளும்தான் இன்றைய டிஜிட்டல் உலகில் அதிகம். 'சமூக வலைதளங்களால் எத்தனையோ நன்மைகளும் நடக்கின்றன என்பது உங்களுக்கு தெரியாதா' என்று கேட்கலாம் நீங்கள். அவையெல்லாம் ஒரு சோற்றுப் பதமாக அங்கொன்றும், இங்கொன்றுமாய் நடைபெறுபவை. நூற்றுக்கு 90 சதவீதம் இவற்றால் தீமைகள்தான் அதிகம்.

பக்கத்து வீட்டினருடன் அன்பாய் பழகிய நாட்களையும், தீபாவளி, பொங்கல் என்று குடும்பத்துடன் செலவழிக்கப்பட்ட விஷேச விடுமுறை தினங்களையெல்லாம் நாம் பழங்கதையாக்கி பலநாட்கள் ஆகிவிட்டன. கிட்டதட்ட எல்லோருமே இன்று அவரவருக்கான தனிமை உலகொன்றில்தான் தினசரி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றோம். எல்லோருடைய முகமும் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்கின்ற ஆசையில், எத்தனையோவிதமான கோமாளித்தனங்களையெல்லாம் செய்கின்றோம்.

ஃபேஸ்புக்கும், ட்விட்டரும், பிரிஸ்மாவும், வாட்ஸப்பும் நம்மை வெறும் தலையாட்டிப் பொம்மைகளாய் மாற்றி வைத்திருக்கின்றன. கெளரவமான பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் கூட இந்த விளையாட்டுத் தனங்களில் இருந்து தப்புவதே இல்லை. மழை நேரத்தில் சொட்டச் சொட்ட நனைந்துவிட்டு, அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டே, சூடாக பஜ்ஜியும், காப்பியும் சாப்பிட்ட நாட்கள் இனி திரும்பி வரப் போவதே இல்லை. கடைசிவரையில் ‘ஐ அம் என்ஜாயிங் ரெயின்’ என்ற ஸ்டேட்டஸ்கள் மட்டுமே  மழை நாளை, இறந்துபோன வைக்கோல் அடைக்கப்பட்ட கன்றுக்குட்டியாய் உலகின் முன்னே நிற்கவைக்கப் போகின்றது.

பக்கத்து வீட்டினருடன் கதை பேசி பொழுதைக் கழித்த அம்மாக்களும், காக்கா கதையும், முல்லா கதையும் சொன்ன பாட்டிமார்களும், சைக்கிளில் உட்கார வைத்து ஊர் சுற்றிக் காட்டிய மாமாக்களும், கிணற்றில் கயிறு கட்டி நீச்சல் பழகித் தந்த சித்தப்பாக்களும், மருதாணி அரைத்து கையில் வட்டவட்டமாய் இட்டு விட்டு அழகு பார்த்த அக்காக்களும் இனி கதை மாந்தர்களாகதான் இருப்பார்கள்.

சோஷியல் மீடியா அவசியமானது மட்டுமே...அத்தியாவசியம் அல்லவே அல்ல. இதை உணர்ந்தால் வாழ்க்கை, கை நிறைய நிரம்பி வழிந்த தேன்மிட்டாயாய் இனிக்கும். அல்லாது போனால், அலுமினியத் தாளில் சுற்றிய, என்றாவது ஒருநாள் மட்டுமே சாப்பிடத் தோதான சாக்லெட்டாக மட்டுமே வாழ்க்கை மாறிப் போகும்...திரும்பிப் பார்க்கும் போது அதுவும் கரைந்தோடி வழிந்து போயிருக்கும்...! 

மறுபடியும் முதல் பத்தியை படியுங்கள்.


- ப.விஜயலக்‌ஷ்மி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close