Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாமனாரும் இன்னொரு தந்தைதான்! #மாமனார்கள் தின ஸ்பெஷல்


 

மாமியார் கதைகளும், மாப்பிள்ளைக் கதைகளும் நிரம்பிய நம் வாழ்வில், மாமனார்கள் குறித்து அதிகம் பேசப்படுகிறதா என்றால் கேள்விக்குறிதான். ‘இன்னைக்கு என்ன அதுக்கு...' என்கிறீர்களா? தினம் தினம் ஏதோ ஒரு தினமாக இருக்க,  'மாமனார் தினம்' ஜுலை 30ம் தேதி (இன்றுதான்) மாமனார் தினம்  கொண்டாடப்படுவது குறித்த எந்த வரலாறும் பெரிதாக கிடைக்கவில்லை என்றாலும், அப்படி ஒரு நாள் கொண்டாடப்படுவதே மகிழ்ச்சியானதுதானே!

இந்த உலகத்தில் மாமனார்கள் எல்லோரும் பெரிய மகான்கள்தான். அதனால்தான், பெரும்பாலான ஆண் மகன்கள் பந்தா காட்டும் ஒரே ஒரு இடமாக மாமனார் வீடு இன்றும் திகழ்கிறது. இந்த உலகத்தில் மாமனார்கள் பெரும்பாலும் துறவிகள்தான். அதனால்தான் மகனுக்கும்-மருமகளுக்கும், மகளுக்கும்-மருமகனுக்கும் இடையில் சிக்கி, பல தருணங்களில் விடை தெரியாத புதிராகவே இருந்துவிடுகிறார்கள்.

குடும்ப பந்தத்தில் கணவன்-மனைவி உறவைத் தாண்டி, அங்கு மாமியார் உறவுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. "மாமியார் வரச்சொல்லியிருக்காங்க, மாமியார் வீட்டுக்கு போகணும், மாமியார் வீட்டுல இருந்து பேசுறேன், மாமியார் கொடுத்து அனுப்பியது, என் மாமியாருக்கு ரொம்பப் பிடிச்சது" என நாமும் மாமியார் புராணங்களைத்தான் இதுவரையில் பேசி வந்திருக்கிறோம். மாமனார் ஏனோ கடைசி இடத்திலேயே இருப்பார். வாய்ப்புகள் அற்ற, வாய் இல்லா பூச்சியாகத்தான் அவர் பார்க்கப்படுகிறார். அதிலும் குறிப்பாக கணவன்மார்கள், மாமனார் வீட்டிற்கு வரும்பொழுது மட்டும், அவர்களுடைய குரல் அவருக்கே தெரியாமல் சற்று ஏறிவிடுகிறது, அதிகம் ஒலித்துவிடுகிறது. பாவம் மாமனார்கள், பல இடங்களில் டம்மியாகவே பார்க்கப்படுகிறார்கள்.

மனைவிக்கு, கணவனின் அம்மா - அதாவது - மாமியார் கடுமையாக இருந்தாலும், பெரும்பாலும் மாமனார் - மாப்பிள்ளை உறவு ஜென்டிலாகவே இருப்பதைக் காணலாம். 

சில வீடுகளில் கணவன்கள் குடித்துவிட்டு வந்து சமாளிக்கும்போது, மனைவிமார்கள் நம்பாமல் சத்தியம் கேட்க, "நான் வேணுனா.. உங்க அப்பா மேல சத்தியம் பண்ணட்டுமா"? என்று கணவன் சமாளிக்கும் தருணங்களில்... "டேய் மாமா, எங்க அப்பா பாவம். நீ குடி, இல்ல எப்படியோ போ, தயவு செஞ்சு எங்க அப்பாவ விட்டுடு". என்று மனைவியின் கெஞ்சலில்.. நமக்கே தெரியாமல் நமது மாமனார் நம்மை காப்பாற்றுகிறார் என்பது நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும்.

இந்தத் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் மட்டும் சொல்லி வச்ச மாதிரி எல்லா மாமனார்களும் ஒரே மாதிரியாகத்தான் இருப்பார்கள். முக்கியமாகத் தலை தீபாவளி, தலை பொங்கல் என்றால் சொல்லவே வேண்டாம். அப்போது மாமனாரின் முகத்தைப் பார்ப்பதும் ஒன்றுதான்,  புரியாத படத்தைப் பார்ப்பதும் ஒன்றுதான். ஒன்றுமே புரியாது. மாமனார் எவ்வளவு கம்பீரமானவராக இருந்தாலும், பண்டிகை நேரம் முடிவதற்குள் அவரின் குரல் தழுதழுத்துவிடும். சில வீடுகளில், ஒரு சில மருமகன்கள்.. மாமனாரை வேண்டும் என்றே மொட்டையடிப்பதும் கூட வழக்கம். "பாவம் சார் அவர், விட்டுருங்களேன்" என்று சொந்தக்காரர்கள் சொல்லும் வரை விடாதவர்களும் உண்டு.

நம்மவர்கள் பெரும்பாலும் மாமனார் வீட்டிற்குப் போனால் மட்டும், காலையில் எப்போதுமே லேட்டாகத்தான் தூங்கி எழுவார்கள். எழுந்தது முதல் மனதில் எந்தச் சிந்தனையும் அற்றவர்களாகவே இருப்பார்கள். அந்நாட்களில் எந்த பொறுப்புகளும் நம்மவர்களை நிச்சயம் துரத்துவதில்லை. எல்லாம் மாமனார் பார்த்துக்கொள்வார் என்ற மெத்தனம்தான் பலர் மனதிலும் குடிகொள்கிறது.  ஆனால், ஒட்டுமொத்த குடும்பத்தையும் சுமந்து, நம் அனைவருக்கும் சேர்த்து அன்றைய தினம் நம்முடைய மாமனார் ஓடி,  நான்-வெஜ் வாங்கி வருவதிலிருந்து, குட்டீஸை கவனித்துக் கொள்வது வரை பல விஷயங்களில் அவர் தன் ஈடுபாட்டைக் காண்பிப்பதை ஏனோ கவனிப்பதில்லை. அந்த உணர்ச்சி மிக்க தருணங்களை,  அப்போது மட்டுமல்ல, எப்போதும் சிலர் உணர்வதில்லை.

எல்லாக் குடும்பங்களிலும் மாமியார் முன்பு ஒரே மாதிரியான இயல்பாக இருக்கும் நாம், மாமனார் முன்பு மட்டும் நம்முடைய இயல்பு நிலை சற்று மாறி விடுகிறது. நாமும் கொஞ்சம் நல்லவனாய், வல்லவனாய் நடித்து விடுகிறோம். நம்முடைய நடிப்பையும், மாமனார் அறிவார். நம்முடைய இதே நிலையை, கடந்த காலங்களில் கடந்து சென்றவர் அவர். அவருக்குத் தெரியும் எது இயல்பு நிலை, இயல்பற்ற நிலை என்பது. அதுதான் முதிர்ச்சி.

முன்பெல்லாம் குடும்ப உறவில் பிரச்னை என்றால், பிரச்னை குறித்து ஆராயமல் தனது மருமகன் குறித்தோ, மருமகள் குறித்தோதான் குறை கூறி வந்தார்கள். ஆனால் இப்போது காலம் மாறிப்போச்சு. பெரும்பாலான மாமனார்கள், தன் மகளைக் காட்டிலும்.. மருகனுக்கும், மகனைக் காட்டிலும்.. மருமகளுக்குமே ஆதரவாக பேசுகிறார்கள்.

"மாப்பிள்ளைகள் மீது மாமனார்கள் காட்டுவது பாசம் அல்ல, அது ஒரு பரிதாபம். அந்த அனுதாப அலை ஏன் என்பது, திருமணம் ஆனா சில மாதங்கள் கழித்துத்தான் நமக்குப் புரியும்" என்று பட்டிமன்றங்களில் பேசுவது எல்லாம் நகைச்சுவைக்கு மட்டும்தான்.

மாமனார் என்ற பந்தத்தில், "என்னங்க மாமா" என்று வாய்மணக்க, அன்பாக அழைக்கும் மருமகள் / மருமகன் இருக்கிறார்கள் என்றால், அவர்களைத் தன் மகளாக, மகனாக நினைக்க இங்கு ஒட்டுமொத்த மாமனார்களும் ஆயத்தமாகத்தான் இருக்கிறார்கள். நமது அன்றாட செயல்களைக் காட்டிலும், சிறு சிறு வார்த்தைகளில்தான் நமது உறவு முறையின் பலமும், அதன் ஆயுளும் பலப்படுத்தப்படுகிறது. 

எல்லா மாமியார்களும் மருமகள் வடிவில், ஒரு நல்ல வேலையாளைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்று படித்தவர்கள் மத்தியில், இப்போது சொல்லப்படுவதுண்டு. ஆனால், எல்லா மாமனார்களும், மருமகள் வடிவில் ஒரு நல்ல மகளைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்பது, நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.

சில வீடுகளில் கம்பீரமாக இருக்கும் மாமனார்கள், மாப்பிள்ளைக்கு / மருமகளுக்கு ஒன்று என்றால் உள்ளுக்குள் துடித்து விடுவார்கள். அவர்கள் கம்பீரம் எல்லாம் கலைந்து, அழ ஆரம்பித்து விடுவார்கள்.
அப்பாக்கள் எல்லோரும் மாமனார் ஆக முடியும். ஆனால், ஒரு சில மாமனார்கள் அப்பாவாகவும் ஆகிறார்கள். அந்த வகையில் மாமனார்களை அப்பாக்களாகப் பெற்ற ஒவ்வொரு மருமகனும்-மருகளும் பாக்கியசாலிகள்!

மாமனார்கள் ஒவ்வொருவருக்கும்.. இனிய மாமனார்கள் தின நல்வாழ்த்துக்கள்!

ரா.வளன்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ