Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகா ஸ்வேதாதேவி: பெண்ணியத்தின் நிஜ அடையாளம்!

பெண்ணியம்...இதன் அர்த்தம் இங்கே பெண்களுக்கே சரியாகத் தெரியாது.  உண்மையில், எது பெண்ணியம் என்பதை தன்னுடைய பேனாவால் சரியாகப் பதிவு செய்த ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர், நம்மிடையே இருந்தார். அவர்தான் ‘மகா ஸ்வேதாதேவி’. மேற்கு வங்காளத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மகா ஸ்வேதாதேவி,  பெண்பால் எழுத்தாளர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர். அடித்தட்டு மக்களின் உணர்வுபூர்வமான போராட்டங்களை ஒன்றுவிடாமல் பதிவு செய்த நட்சத்திர எழுத்தாளர்... வார்த்தைகளின் நாயகி... சமூக நல சேவையாளர்.

’பல மில்லியன் நிலவுகள் கடந்து போயின. பல மில்லியன் கிரகண வருடங்கள் கடந்து போயின. பல கோடி ஒளி ஆண்டுகளுக்குப் பின்பு, அவளுடைய கண்கள் திறந்தன. திரவுபதி, வானத்தையும், நிலவையும் பார்த்தாள். அவளுடைய அடிவயிற்றில், ஏதோ ஒன்று பாராங்கல்லாய் கனத்தது. அவளுடைய கால்களுக்கு அடியில் பிசுபிசுப்பான ரத்தம்' -  தன்னுடைய கதையான 'திரவுபதி' யில் ஸ்வேதாதேவி வடித்திருந்தது, ஒருத்தியின் வேதனையை அல்ல. சமூகக் கட்டமைப்புகளாலும், பாலியல் சிந்தாந்தங்களாலும் உடல் சிதைக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணின் வலியையும்தான்.

''பெண்ணியம் என்பது, சுயம் சார்ந்த பிரச்னைகளைப் பார்வையிடுவதல்ல. நம்மைச் சுற்றி அடிமட்ட நிலையில் போராடும் பெண்களுக்கான உரிமைகளை மீட்டுக் கொடுப்பது. ஆதிவாசிகளாகவும், பூர்வகுடிக்களாகவும், வாழ்வின் எளிய நிலையிலும் இருக்கும் பெண்கள் எத்தனையோ சோதனைகளைக் கடந்தும், இன்றும் தங்களுடைய வாழ்வாதாரத்தினைக் காப்பாற்றிக் கொள்ள போராடிக் கொண்டிருக்கின்றார்களே, அதுதான் பெண்ணியம்'' என்று தனது உள்ளத்திலிருந்து வெளியான ஒவ்வொரு எழுத்திலும் பதிவு செய்தவர் மகா ஸ்வேதா தேவி. எழுத்தின் ராணியாக வலம் வந்த, இந்தியாவின் உயரிய ஞானபீட விருது உள்ளிட்ட பல்வேறு வாழ்நாள் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான மகா ஸ்வேதாதேவி,  இன்று நம்மிடையே இல்லை.

தன் 90வது வயதில்,  கடந்த ஜூலை 28 ம் தேதியன்று, தன்னுடைய எழுத்துக்களுடன் மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டார் மகா ஸ்வேதா தேவி. மேற்கு வங்காளத்தில், பூர்வக்குடிகளாய் சிக்கி துயரில் வீழ்ந்து கதறிய மக்களுக்காக, வாழ்நாள் முழுவதும் போராட்டத்தினை விதைத்தவர். எழுத்தாளுமைகளும், கவிஞர்களும் நிறைந்த குடும்பத்திலிருந்த வந்தவர். 1940களில் கம்யூனிச சிந்தாந்தங்களால் ஈர்க்கப்பட்ட மகாஸ்வேதாதேவி, வறுமையிலும், அத்தியாவசிய தேவைகளைக் கூடப் பெற முடியாமல் தவித்த மேற்கு வங்கத்தின் தென்னகப் பகுதிகளில் வசித்து வந்த ஆதிவாசிப் பழங்குடியினரின் நலனுக்காக பாடுபட ஆரம்பித்தார்.

தன்னுடைய நிஜ வாழ்க்கையில், கண்டுகொண்ட எளிய மனிதர்களின் வலிகளை, கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய புத்தகங்களில் கதை மாந்தர்களாக வடித்து, அவர்களுடைய வலியையும், வேதனையையும் பதிவு செய்தார் ஸ்வேதா தேவி. வாழ்க்கையில் கடந்து போகும் ஒவ்வொரு சம்பவத்தையும், வார்த்தைகளில் அப்படியே குணம் மாறாமல் வெளிப்படுத்தத் தெரிந்த மகத்தான எழுத்தாளுமைகளில் மகா ஸ்வேதாதேவியும் ஒருவர்.

அவருடைய துணிச்சலான படைப்பாக்கங்களில் ஒன்று, ‘மார்பகங்களின் கதை' (breast story). இப்படியெல்லாம் கூட பெண்களின் மீதான சுமைகள் இருக்கக் கூடுமா என்று வலியை இதயத்தின் உள்ளூடே இறக்கும் கதைகள் இந்தப் புத்தகத்தில் ஸ்வேதாதேவியால் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் எல்லாக் கதைகளுமே பெண்களின் மார்பகங்கள் மீதான சமூகத்தின் கேலிக்கூத்தான பார்வையை கட்டமைப்பதாக அமைந்திருக்கும். எடுத்துக்காட்டாக இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள  ‘மார்பகம் கொடுப்பவள்’ (breast giver), என்ற கதையின் நாயகி, குடும்பத்தின் வறுமைச் சூழலால் பல வருடங்கள் செவிலித் தாயாக இருந்து பல குழந்தைகளுக்கு பாலூட்டி வளர்த்து, ஒருநாள் மார்பகப் புற்றுநோயால் இறந்து போகும் ஜசோதாவின் கதை இது. உடலாலும், மனதாலும் களைத்துப்போன ஒரு பெண்ணின் கதையான இது ஒருநிமிடமேனும் நம்மை உள்ளம் குலைய வைக்கும்.

’என்னுடைய கத்தியால் கீறப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்ட ஒவ்வொரு வார்த்தைகளும் மனித உரிமைகளுக்காகவும், மனிதர்களுக்குமானது. எழுத்து என்னுடைய உண்மையான உலகம். அதில்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்’ மகா ஸ்வேதாதேவின் வாழ்நாள் வாசகங்கள் இவைதான்.

இப்போதும் அவர் தன்னுடைய வலிமை நிறைந்த படைப்புகளால், நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கத்தான் போகின்றார். ஒரு நூற்றாண்டின் உணர்வுகளாக, தலைமுறைகளின் குரலாக நம்மிடையே நிலைத்து நிற்கப் போகும் மகா ஸ்வேதாதேவி, ’கனவென்பது ஒவ்வொரு மனிதருக்குமான அடிப்படை உரிமை...அதை யாராலும் பறிக்க முடியாது’ என்பதை இலக்கிய உலகில், புரட்சி செய்ய நினைக்கும் ஒவ்வொரு எளியவர்களுக்கும் நினைவூட்டிக் கொண்டே இருப்பார்.!

- ப.விஜயலக்‌ஷ்மி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close