Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'திஸ் யமஹா இஸ் மை பிரதர், திஸ் ஸ்விப்ட் இஸ் மை சித்தப்பா...! - செல்ஃபி அட்ராசிட்டிஸ்

'இந்த ஆண்டு அதிக செல்ஃபிக்களில் இடம்பெற்ற ப்ராப்பர்ட்டி இதுதான்' என விருது விழாவே நடத்தலாம் போல. அந்த அளவிற்கு செல்ஃபிக்களில் பிராண்ட் ப்ரோமோஷன் செய்கிறார்கள் நம்மாட்கள். கலா மாஸ்டரின் டான்ஸ் ஷோவில் கூட இத்தனை ப்ராப்பர்ட்டி வந்தது இல்லையேய்யா! பெரும்பாலான செல்ஃபிக்களில் இடம் பெற்றிருப்பவை இந்த பட்டியலில் இருக்கும் பொருட்கள்தான்.

கலர் கலர் கூலர்ஸ்:

'மெட்ராஸ் ஐ' வந்தால் மட்டுமே கண்ணாடி போடுவது மறைந்து, இப்போது அர்த்தசாமத்தில் கூட கூலர்ஸ் உடனேயே சுற்றுகிறார்கள். சரி, அது முகத்திற்கு பொருத்தமானதாக இருந்தால் கூட பரவாயில்லை. மூஞ்சி தம்மாத்தூண்டாகவும், கூலர்ஸ் ஆம்னி பஸ் ரியர் வியூ மிரர் போலவும் இருக்கும் கொடுமையை எல்லாம் எந்த கல்லில் செதுக்க? இதில் தெறி ஸ்டைலில் கலர், கலர், கண்ணாடிகள் வேறு. இந்த கூலர்ஸ் செல்ஃபிக்களை பார்த்தாலே கண் வலி வந்துவிடும் போல.

வாயில்லா அப்பிராணிகள்:

'வாவ் ஸோ க்யூட்' எனக் கொஞ்சும் ஜெனிலியா வகையறாக்களை கூட மன்னித்துவிடலாம். கொஞ்சுகிறேன் பேர்வழி, என அவற்றை தூக்கி, நசுக்கி, பிதுக்கி போட்டோ எடுப்பதெல்லாம் பாவம் மை ஆன்ட்டி. இதில் சிலர் உச்சந்தலையில் எல்லாம் நாய்க்குட்டியை உட்கார வைத்து செல்ஃபி எடுக்கிறார்கள். இறங்க வழி தெரியாமல் அவை மரண பயத்தில் மிதப்பதை பார்க்க சக்தி கொடுங்கள் ஆண்டவரே!

மோட்டார் வெறியர்கள்:

பைக், கார் எல்லாம் எல்லாருக்கும் பிரியம்தான். ஆனால் 'திஸ் யமஹா இஸ் மை பிரதர், திஸ் ஸ்விப்ட் இஸ் மை சித்தப்பா' போன்ற போட்டோ கேப்ஷன்கள் எல்லாம் கொஞ்சம் ஓவர் ஸ்வாமி. ஊருக்குள் சுற்றும் பென்ஸ், ஜாகுவாரை விரட்டுவதற்கென்றே ஒரு க்ரூப் திரிகிறது. விரட்டிச் சென்று அவற்றின் அருகே நின்று போஸ் கொடுக்கிறார்கள். தப்பு ஜி... ரொம்பத் தப்பு.

சாப்பிடுவீகளா இல்லையா?

மதுரை கோனார் கடைக்கோ, குற்றாலம் பார்டர் கடைக்கோ போனால் என்ன செய்வீர்கள்? பரோட்டாவை பிச்சுப் போட்டு சால்னாவில் முக்கி அள்ளி அப்பிவிடுவீர்கள்தானே? ஆனால் விதவிதமாய் உணவு வகைகளை ஆர்டர் செய்து அவற்றை சாப்பிடாமல், செல்ஃபி எடுத்து டைம் வேஸ்ட் செய்யும் கும்பல் ஒன்று இருக்கிறது. அதற்காக பால்சாதம் தயிர்சாதமாய் மாறும்வரை வளைத்து வளைத்து போட்டோ எடுப்பதெல்லாம்...

ஐ.டி கார்ட் ஐயாக்கள்:

'நாங்க ரொம்ப ப்ரொபஷனலாக்கும்' என பதிய வைக்க ட்ரை பண்ணும் கோஷ்டி இது. எல்லா போட்டோக்களிலும், வேலை பார்க்கும் நிறுவனத்தின் ஐ.டி. கார்டை போட்டுக்கொண்டுதான் போஸ் கொடுப்பார்கள். எம்.என்.சியாமாம். அதுசரி, ஷாப்பிங் மால்ல எல்லாம் எதுக்குய்யா ஐ.டி கார்ட்? உங்க கடமை உணர்ச்சில புல்டோசரை விட்டு ஏத்த.

நாங்க சாதிச்சுட்டோம்:

'எங்க ஏரியால நடந்த லெமன் இன் தி ஸ்பூன் காம்ப்படிஷன்ல நான்தான் ஃபர்ஸ்ட்', 'மான் கராத்தேல நான் பிளாக் பெல்ட்' என பதக்கமும் கையுமாய் செல்ஃபியில் காட்சி தருவார்கள். நம்பலன்னா பாருங்க, அதுக்கான சர்ட்டிபிகேட்' என தூக்கி வீசுவார்கள். எவ்வளவு முக்குனாலும் தங்கப்பதக்கம்தான் ராஜா!

மஞ்சள் பொம்மை:

பெருநகர் செல்ஃபிக்கள் பலவற்றில் இந்த மஞ்சள் கோட்டு மைனர் இடம் பெற்றிருப்பார். அதான் ஜி, மெக்டொனால்ட்ஸ் வாசல்ல ஒரு மஞ்சள் பொம்மை இருக்குமே. அதன் மண்டையில் பேன் பார்ப்பது, மடியில் படுத்து உருள்வது, என இவர்கள் பண்ணும் அட்ராசிட்டியில்,  என்றாவது உயிர் வந்து மொத்து மொத்தென மொத்தப் போகிறது.

நம்மாட்கள்:

இந்தப் பட்டியலில் அதி முக்கியமான ப்ராப்பர்ட்டி இதுதான். பாரீன் செல்பவர்கள் தொடங்கி பாண்டிச்சேரி ட்ரிப் செல்பவர்கள் வரை அனைவரிடமும் 'தூது' அனுப்புவார்கள். அவர்களை வரவேற்க ஆளுக்கு முன்னால் சென்று, வாங்கி வந்து பாட்டிலும் கையுமாய் போட்டோ எடுத்தால்தான் நம்மாட்களுக்கு நிம்மதியே. ஆனால் போதையில் அந்த போட்டோவை அவர்களே டெலிட் செய்துவிடுவார்கள், என்பதுதான் சோகம்.

- நித்திஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ