Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லி டூ ஆப்கானிஸ்தான்... ஒரு இளைஞனின் 'திக் திக்' பயணம்!

ஸ்டீவ்ஸ் இராட்ரிக்ஸ். விகடனின் முன்னாள் மாணவப் புகைப்பட பத்திரிக்கையாளர். சமீபத்தில் ஆப்கானிஸ்தான் சென்ற அவர், தன் பயண அனுபவத்தை நம் வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்கிறார்.

“ஆப்கானிஸ்தான் குறித்து ஒரு டாக்குமென்டரி  எடுக்க சமீபத்தில்  ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதை உடனடியாக செயல்படுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டது. பெரும் சந்தோஷம். டெல்லியில் இருந்து ஆப்கானிஸ்தான் செல்வதற்கு டிக்கெட்டுகள்  தயாராக இருந்தன. எனக்கு விமானப்பயணம் புதிதில்லை என்றாலும், ஆப்கானிஸ்தான் போன்ற நாட்டுக்கு செல்வது மகிழ்ச்சியானதாக இருந்தது. காரணம், என் வாழ்க்கையில் நான் அங்கு ஒருமுறையாவது செல்வேன் என நினைத்துக் கூட பார்த்ததில்லை. அதனால், குஷியாகவே விமானம் ஏறினேன். ஆனால் விமானம் ஏறிய பின்னர் ஒரு வகையான பதற்றம் தொற்றிக் கொண்டது.

அனுதினமும்  குண்டுவெடிப்பு நடப்பதாக வரும் செய்திகள் நினைவுக்கு வந்து போனது. வடிவேலு காமெடி எல்லாம் மண்டைக்குள் கரகரவென ஓடியது. இரண்டு மணி நேர விமானப் பயணத்துக்கு பிறகு, ஒரு வழியாக, ஆப்கானிஸ்தானில் விமானம் தரையிறங்கியது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தேன். விமான நிலையம் இன்னும் திகில் கூட்டியது. அதிக ஆள் அரவமெல்லாம் இல்லை. விமான நிலையத்தில் வரவேற்பவர்கள், வழியனுப்புபவர்கள் இருக்கும் பகுதி மிகத் தொலைவில் இருந்தது. இந்தியாவிலோ, ஐரோப்பாவிலோ இது போன்ற விமான நிலையத்தை பார்த்ததில்லை என்பதால் கொஞ்சம் திகில் கூடியது. ஒரு வழியாக கிட்டத்தட்ட 600 -700 மீட்டர் தூரம் நடந்த பிறகு வரவேற்பறை இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தேன். அவர்களை சந்தித்ததும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன்.

கார் மூலமாக தங்க வேண்டிய இடத்துக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது வழியெங்கும் விரவியிருந்த ஆப்கானிஸ்தானின் அழகு மனதைக் கொள்ளை கொண்டது. மணல் வீடுகள் அங்கே எக்கச்சக்கமாக இருந்தன. மணல் வீடுகளில் ஆங்காங்கே ஓட்டைகளும் இருந்தன. விசாரித்து பார்த்தபோது போர், துப்பாக்கிச் சூடு, குண்டு வீச்சு  போன்றவற்றின் காரணமாக பலர் சிமெண்ட் வீடுகளே கட்டுவதில்லை; மணல் வீடுகள்தான் கட்டுகின்றனர் என்பது புரிந்தது. வீடுகளின் மீது சர்வ சாதாரண துப்பாக்கிச் சூடு நடக்கும் என்றார்கள். நொந்து கொண்டே கிளம்பினேன்.

தங்க வேண்டிய இடத்துக்கு வந்த பிறகு முதலில் ஆடையை மாற்ற வேண்டும் என்றார்கள். அப்போது தான் அங்கிருந்தவர்கள் ஆடையை கவனித்தேன். நல்ல குர்தாவும், நான்கைந்து பேர் உள்ளே புகுந்துகொள்ளும் அளவுக்கு பெரிய  தொள தொள பேண்ட்டும் அணிந்திருந்தார்கள். என்னையும் அதேபோல ஒரு ஆடை அணிந்துகொள்ள சொல்லி அறிவுறுத்தினார்கள். உடனடியாக அளவுகள் எடுக்கப்பட்டன. மறுநாளே உடை தயாராகி  கைக்கு வந்தது.

வேலை நிமித்தம் அங்கே தங்கியிருந்த நாட்களில் கிடைத்த அனுபவங்கள் சுவாரஸ்யமானவை. இந்தியாவில் நாம் எந்தளவுக்கு சுதந்திரத்தை அனுபவிக்க முடிகிறது என்பதை உணர முடிந்தது. அங்கே பெண்கள், குழந்தைகள் அதிகம் பாதிப்புக்குள்ளாவதை கண்கூடாக காண முடிந்தது. ஒரு முறை எங்கள் குழு கார் பயணத்தில் இருந்தது. ஒரு ஊரில் கிராமத்தலைவர்கள் சிலரும் பேச வேண்டிய சூழ்நிலை. ஆண்கள் நாங்கள் அனைவரும் காரில் இருந்து கீழே இறங்கிப்போய் பேசினோம்.

எங்கள் குழுவில் இருந்த பெண் ஒருவர் ஹிஸாப் அணிந்து காருக்குள் அப்படியே உட்கார்ந்தார். ஏன் வெளியே வரவில்லை என அருகில் இருந்தவர்களில் கேட்டபோது கிடைத்த பதில் அதிர்ச்சிகரமாக  இருந்தது. அங்கே சில இடங்களில் ஆண்கள் முன்பு பெண்கள் வெளியில் வரவே கூடாதாம். குழந்தைத் திருமணம் அங்கே மிக அதிகம். பெண் சுதந்திரம் என்பது கொஞ்சம் கூட இல்லை. அவர்கள் தனியாக சம்பாதிக்கும் வாய்ப்புகளே அங்கே இல்லை. யாரும் பெண்களை, ஆண்கள் வேலை செய்யும் இடங்களில் சேர்த்துக் கொள்வதில்லை. குழந்தைகளின் நிலை இன்னும் மோசமாக இருந்தது. ஊரில் பல பகுதிகளிலும், பாலங்களுக்கு அடியிலும்  அனாதையாக சிறுவர்கள் திரிகிறார்கள். பல இடங்களில் உள்நாட்டு, வெளிநாட்டு என்.ஜி.ஓக்கள் தான் அங்கே 'சைல்ட் சேவ் சென்டர்' மூலமாக குழந்தைகளுக்கு உணவும், கல்வியும் அளித்து வருகிறார்கள். பல குழந்தைகளின் பெற்றோர்கள் இருவரும் தீவிரவாதத் தாக்குதல்களில் இறந்துவிட்டனர் என்பதை அங்கே குழந்தைகளிடம் விசாரித்தபோது தெரிந்து கொண்டேன்.

ஆப்கானிஸ்தானில் மது கிடைப்பது என்பது மிகக் கடினம். தடை செய்யப்பட்டிருக்கிறது. இதனாலோ என்னவோ போதை மருந்துகள் எளிதாக கிடைக்கின்றன. ரோட்டோரங்களில் சர்வ சாதாரணமாக ஹெராயின், ஓபியம் போன்றவை கிடைக்கின்றன. வெட்ட வெளிகளில் சர்வசாதாரணமான போதை மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். கல்வியறிவு என்பது அங்கே  மிகவும் மோசமான அளவில் இருக்கிறது. ஆயிரக்கணக்கிலான  மலாலாக்களின் தேவை இங்கு அவசியம், என்பதை அங்கே புரிந்து கொள்ள முடிந்தது.  

ஆப்கானிஸ்தானில் உணவுக் கலாசாரம் அருமையாக இருந்தது. பெரும்பாலும் கடினமான ஒரு ரொட்டியும், கபாபும்தான் பெரும்பாலான இடங்களில் எளிதாக கிடைக்கிறது. ஆப்கானிஸ்தான் பார்பீக் சிக்கன், ஆப்கானிஸ்தான் ஸ்பெஷல் பெப்பர் மட்டன் போன்றவை அங்கே மிகவும் பிரபலமான அசைவ உணவுகள். உணவின் தரமும், சுவையும் நன்றாக இருந்ததை உணர முடிந்தது.

நாங்கள் காபூலில் தங்கியிருந்தோம். வேலை காரணமாக ஜலாலாபாத் போகவேண்டிய சூழ்நிலை வந்தது. என்னை சுற்றியிருந்தவர்கள் அந்த பயணம் குறித்து ரொம்பவும் கவலைப்பட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். காபூல் - ஜலாலாபாத் பயணம் குறித்து கூகுளில் தேடியபோது, அதிர்ச்சிகரமான  தகவல்கள் கிடைத்தன. நீண்ட நெடிய அந்தப் பயணப்பாதையில் இறப்பு விகிதம் 9.5/10. உலகின் மிக மோசமான கொடூரமான பயணம் என்பது  இந்த சாலையில் பயணம் செய்வது தான் என்பது புரிந்து கொண்டேன்.

தாலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் அங்கே மிக அதிகம். அவர்கள் உள்நாட்டு மக்களை உள்நோக்கத்துடன் தாக்குவதில்லை. ஆனால், ஐ.நாவின் வாகனங்கள் போன்றவை வந்தால் தாக்காமல் விடுவதே கிடையாது. அந்த பயணம் குறித்த அச்சம் என்னிடம் அதிகமாகவே இருந்தது. உயிருடன் சென்று திரும்பி வந்தால் போதும் என நினைத்தேன். இன்னொரு பக்கம் இப்படியொரு த்ரில் பயணம் செய்துதான் பார்க்க வேண்டும். நம் வாழ்நாளில் கிடைக்காத அரிய வாய்ப்பு இது என்றொரு எண்ணமும் எழுந்தது. அந்த சாலைப் பயணம் ஆரம்பமானது.

மலைகள் மீது ஏறி  இறங்கிய அந்த சாலை பயணம் மிகவும் ஆபத்தானது என ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டேன். சாலைகள் மிக மோசமாக இருந்தன. ஆனால் அந்த சாலையில் ஆப்கானிஸ்தானின் அழகை ரசித்தவாறே பயணிக்கும் போது, இது தான் உலகிலேயே அழகான இடமோ என்ற எண்ணமும் தோன்றியது. அந்த அழகை நான் வெகுவாக ரசித்து கொண்டிருந்தேன். அப்போது தான் எங்களது அருகில் ஐ.நாவின் வாகனம் ஒன்று வந்தது. எல்லோரும் கலவரமானார்கள். எங்கள் காரில் இருந்தவர்கள் வண்டியை நிறுத்திவிட்டு, சில நேரம் நிற்கலாமா, இல்லை சென்றுவிடலாமா என தீவிரமாக விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். ஒருவழியாக எங்களை விட்டு ஐநா வாகனம் சென்றது. அந்த பயணத்தில் விபத்துகள், துப்பாக்கிச் சூடு எதுவும் நடக்காமல் நல்லபடியாக சென்று வந்தோம்.

ஊடகங்கள் தெரிவிப்பதுபோல அங்கே தினம் தினம் துப்பாக்கிச் சூடுகள் நடப்பது கிடையாது. மக்கள் இயல்பாக வாழ்கிறார்கள். ஆனால், எப்போது வேண்டுமானாலும் துப்பாக்கிச் சூடு நேரலாம் என்ற அச்சம் அவர்களிடம்  இருப்பதை அவர்களிடம் உரையாடியபோது, உணர முடிந்தது. ஆனால் உயிர் குறித்து அவர்கள் பெரும் கவலையெல்லாம் கொள்வதில்லை. அங்கே, தெருக்களில் ரோட்டோரங்களில் அரசாங்கத்தில் மிலிட்டரி வாகனங்கள் துப்பாக்கி லோடு ஏற்றி ரோந்திலேயே இருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் வந்த வேலை முடிந்தபிறகு  மீண்டும் டெல்லி கிளம்ப வேண்டிய தருணம் வந்தது.

ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில், பயங்கரமாக சோதனை செய்தார்கள். என் வாழ்நாளை இப்படியொரு சோதனையை நான் பார்த்ததே இல்லை. ஒரே பரிசோதனையை 18க்கும் அதிகமான இடங்களில் செய்தார்கள். ஒரு இடத்தில் எனது கைப்பைகளை எல்லாம் வாங்கி வைத்து கொண்டு, தூரமாக தனியாக நிற்கச் சொன்னார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த சமயத்தில் துணியால் மூடப்பட்ட கூண்டு மாதிரி ஒன்றிருந்ததை  ஒரு அதிகாரி திறந்து விட, பெரிய ஜெர்மன் நாய் ஒன்று வந்து எனது உடைமைகளை சோதித்தது. அந்த நாயை பார்த்த மாத்திரமே நான் பத்து அடி பின்னால் சென்றுவிட்டேன்.

பலத்த செக் அப்புக்கு பிறகு ஒருவழியாக விமானம் ஏறினேன். ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்திருந்தது. எந்த அளவுக்கு மக்கள் மோசமான ஒரு சூழ்நிலையில் இருக்கிறார்கள், என்பதை உணர முடிந்தது. அழகான வளமுள்ள ஒரு நாட்டில் தீவிரவாதம், மக்களின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டிருக்கிறது என்பதை பற்றிய சிந்தனை மண்டையில் ஓடிக்கொண்டே இருக்க... டெல்லி வந்துவிட்டது விமானம்.

டெல்லியில் இருந்து பிறகு ஃபிளைட் பிடித்து சென்னை வந்தேன். நன்றாக உறங்கி எழுந்து மறுநாள் வீட்டின் முன் வந்து விழுந்திருந்த செய்தித்தாளை பார்த்தேன். 'ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச் சூட்டுக்கு 28 பேர் பலி' என செய்தித்தாளின் ஒரு ஓரத்தில் பெட்டிச் செய்தி இருந்தது.

செய்தித்தாளை மடித்துவைத்துவிட்டு மீண்டும் என் ஆப்கானிஸ்தான் பயணத்தை மனதிற்குள் பதற்றத்துடன் ஓடவிட்டேன்.

- பு.விவேக் ஆனந்த்
படங்கள்:
ஸ்டீவ்ஸ் இராட்ரிக்ஸ்

ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட  A RAY OF HOPE டாக்குமெண்டரி வீடியோவை காண..,

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ