Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாட்டாவே பாடுறாங்க... கற்பித்தலில் புதுமையை பின்பற்றும் அரசு தொடக்கப்பள்ளி!

‘நான் எல்லா பாடத்தையும் நல்லாத்தான் படிச்சிருந்தேன். ஆனா, பரீட்சை எழுதப்போகும் போது மறந்திடுச்சு’ என மாணவர்கள் பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். இதற்குக் காரணம், பாடத்தைப் புரிந்து கொள்ளாமலே படிப்பதும், கேள்விக்கான பதில்களை அப்படியே மனப்பாடம் செய்வதும்தான்.

இதற்குத் தீர்வாக, ஒவ்வொரு பாடத்துக்கும் மெட்டுப் போட்டு, பாட்டாய்ப் பாடி, அனைத்து மாணவர்களையும் பாடவைத்து, பாடங்களை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள வைத்திருக்கிறார், ஓர் அரசு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயராகவன்.

ஈரோட்டுக்கு அருகில்  இருக்கும் ஒரு சிறிய கிராமம், உத்தண்டிபாளையம். மெயின் ரோட்டிலிருந்து அரை
கிலோமீட்டர் தூரம் நடந்தால், இயற்கை வளம் சூழ்ந்த பகுதியில், ஊரின் தொடக்கத்திலேயே  இருக்கிறது அரசு தொடக்கப்பள்ளி.

ஆசிரியர் பள்ளிக்குள் நுழைந்ததும், மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று,  " வணக்கமய்யா...!" என இருகரம் கூப்பி வணங்குகிறார்கள். காலையில் பள்ளித் தொடங்கியதுமே, அன்றைய தேதி, கிழமை, வருடம் என்ன என்பதைச் சொல்கிறார்கள். அடுத்து, காலை முதல் இரவு தூங்கச்செல்வது வரையிலான பழக்க வழக்கங்களைப் பாட்டாகப் பாடுகிறார்கள் சில மழலைகள். அதில் அதிகாலை எழுவது, பல் துலக்குவது, பொது இடங்களைக் கழிப்பறையாகப் பயன்படுத்தாமல் இருப்பது தொடங்கி, சுத்தமாக சோப்புப் போட்டுக் குளிப்பது, துவைத்த துணிகளை உடுத்துவது, உணவு உண்பது, பள்ளிக்குச் சரியான நேரத்துக்கு வருவது, மாலையில் விளையாடுவது என அனைத்து நல்ல பழக்கங்களையும் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது அந்தப் பாடல். பாடும் பாட்டுக்குப் பின்பாட்டுப் பாடுகிறது, அமர்ந்திருக்கும் மழலைப்பட்டாளம். இந்தப் பள்ளியில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் கிராமத்து மக்களும் கேட்கும் வகையில், ஒலிபெருக்கி அமைத்திருக்கிறார்கள்.

தலைமை ஆசிரியர், ஐந்தாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள, ‘வண்ணத்துப் பூச்சிகளும் தேனும்’ என்கிற பாடத்துக்கு, அதற்கென பிரத்யேகமாய் உடையணிந்து வந்த நான்காம், ஐந்தாம் வகுப்பு மாணவர்களைப் பாடச் சொல்கிறார். அவர்கள், அந்தப் பாட்டோடு கொஞ்சம் பொதுஅறிவு கலந்து தருகிறார்கள். அதற்கு, அனைத்து மாணவர்களும் கோரஸ் கொடுக்கிறார்கள். அடுத்து, வில்லுப்பாட்டு தொடங்குகிறது.

தரிகட தரிகட த்தா
தரிகட தரிகட த்தா
பாடல் ஒண்ணு பாடப்போறமே
பாடல் ஒண்ணு பாடப்போறமே
வில்லுப்பாட்டு ஒண்ணு பாடப்போறமே

நாம் வாழும் உலகில் விந்தைமிகு இயந்திரம்
தெரியுமா கூறு தம்பி
தெரியுமா கூறு தம்பி

டி.வி பெட்டிஅண்ணே
டி.வி பெட்டி
இல்ல இல்ல அதுக்குமேல

கம்ப்யூட்டர் அண்ணே
கம்ப்யூட்டர்

இல்ல இல்ல அதுக்குமேல

நீயும் நானும் நம்ம உடலும்
நம்ம உடலா?

ஆச்சர்யமும் வியப்பும் நிறைந்த நம்ம உடல்தான்
இந்த உடலுக்கு மிக முக்கியம்
ரொம்ப ரொம்ப முக்கியம்
கற்பனைக்கு ஆதாரம்
அறிவுக்கு ஆதாரம்
நினைவுக்கு ஆதாரம்
செயலுக்கு ஆதாரம்

என்னண்ணே புதிர் போடுறீங்க...

தமிழ்ல சொன்னாக்கா மூளை மூளை
இங்கிலீஷ்ல சொன்னாக்கா ப்ரெயின் ப்ரெயின்....

எனப்போகிறது அந்தப் பாடல்.

மனித உடல் உறுப்புகளின் பயன்பாட்டையும், அதைப் பாதுகாக்கும் முறையையும் பாடலாகவே தருகிறார்கள்.

மாணவர்களுக்கு, இசையின் மீது அதிக ஆர்வம் இருப்பதை அறிந்த தலைமை ஆசிரியர், அவர்களுக்கு இசை கற்றுக்கொடுக்க  ஏற்பாடு செய்தபோது, பாடங்களைப் பாட்டாக அமைத்துத் தரலாமே எனும் யோசனை தோன்ற, தன்னோடு பணியாற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் பாடங்களைப் பாடல்களாக்கியுள்ளார்.

‘‘எங்கள் பள்ளியில், மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, பொதுவான பழக்க வழக்கங்களைக் கற்றுத்தரும் பாடல்களை மட்டும் கற்றுக்கொடுத்திருக்கிறோம். நான்காம், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுஅறிவோடு பாடங்களையும் பாட்டுக்களாய் மாற்றித் தருகிறோம். மாணவர்கள் மிக எளிதாக பாடங்களை நினைவில் வைத்துக்கொள்கிறார்கள். யாரிடம் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லத்தெரிகிறது. இதனால், எல்லாப் பாடங்களையும் மாணவர்களின் மனதில் பதியவைக்க முடிகிறது’’ என்கிறார், பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயராகவன்.

ஆசிரியை சசிகலா, ‘‘ஒரு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், நல்லொழுக்கத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களின் முதல் நோக்கம். இன்று, பள்ளிக்கு வரும் அத்தனை மாணவர்களும் பொது இடங்களைக் கழிப்பறையாகப் பயன்படுத்துவதில்லை. தினமும் குளித்து, சுத்தமான ஆடைகளை உடுத்தி வரும் அளவுக்கு மாற்றியிருக்கிறோம். தனியார் பள்ளிகளே அசந்துபோகும் அளவுக்கு எங்கள் தலைமை ஆசிரியர் இந்த மாணவர்களை உருவாக்கி வைத்திருக்கிறார்’’ என்றார்.

இந்தப் பள்ளி, கற்றல் மற்றும் கற்பித்தல் அடைவுத்திறனில் சிறந்த பள்ளியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ஓர் அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள், சிறந்த மாணவர்களை உருவாக்க எடுத்துக்கொண்ட முயற்சியைப் பாராட்டுவோம்!

- வீ.மாணிக்கவாசகம்,

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

எடிட்டர் சாய்ஸ்