Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவண்டா!' - கிராமத்துப் பெரியவர் கலகல!

"கிராமங்கள் தான் இந்தியாவின் உயிர்நாடி" என்றார் மகாத்மா.

உலக நாடுகள் இந்தியாவை  விவசாய நாடாக பார்க்க இந்த கிராமங்களே  காரணம். ஆனால் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் மக்கள் தொகை பெருக்கத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாய் நம் கிராமங்களின் இயல்பை தொலைத்து வருகிறோம் . விவசாய நிலங்கள் எல்லாம் கான்கிரீட் காடுகளாய் மாறி வருகின்றன .நாகரிக
வளர்ச்சி என்ற பெயரில் தம் இயல்பையும் இயற்கையையும் தொலைத்து விடாத கிராமங்களும் இருக்கத்தான் செய்கின்றன . அப்படி ஒரு கிராமத்திற்கு சமீபத்தில் சென்று வந்தேன்.

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுக்காவில் அமைந்திருக்கிறது பெரிய குளம் கிராமம். கிராமம் என்றால் முழுக்க முழுக்க  பகுதியில் அமைந்திருக்கும் மலை கிராமம் . மின்சாரம் , மருத்துவமனை , என எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாத மலைக்கிராமம் . பெரிய குளம் மட்டுமல்லாது . மலையை சுற்றிலும் அமைந்திருக்கும் கிராமங்களில் மட்டும் ஏறத்தாழ 5000 பேர் வசிக்கின்றனர் . சமீபத்தில்தான் மண்சாலை சிறிது  தொலைவிற்கு போடப்பட்டு உள்ளது . ஆனாலும் பெரும்பாலான மக்கள் வழக்கமான ஒத்தயடிப்பாதையையே பயன்படுத்தி வருகின்றனர் . ஒரு அரசு ஆரம்பப்பள்ளியும் செயல் பட்டு வருகிறது .

மருத்துவமனைக்கு செல்ல , அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்க என ஒவ்வொரு முறையும் மலையிலிருந்து கீழே இறங்கி வந்து தான்  வாங்க வேண்டும். பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தையே நம்பி இருக்கின்றனர் . நாங்கள் சென்றிருந்த போது எல்லோரும் வார  சந்தைக்கு போக தயாராகி கொண்டிருந்தனர். கிராமத்தின் நடுவில் இருக்கும் சிறிய நெற்களம் அது . விளைவித்த பயிர்கள் , பழங்கள் , காய்கறிகள்,  என ஒவ்வொருவரும் தங்கள்  விற்பனை பொருட்களை ஒன்று சேர்த்து கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் குழந்தைகள் நானும் வருவேன் என்று அடம் பிடிக்க  அந்த பகுதியே அத்தனை பரபரப்பாய் இருந்தது. இப்படி ஒவ்வொரு வாரமும் சந்தைக்கு போய் விற்பனை செய்து விட்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்களாம்.

அத்தனை பரபரப்புக்கு இடையிலும் நெற்களத்தின் கான்கிரீட் திட்டில் அமர்ந்து கொண்டு ஆயாசமாய் பீடி பிடித்து கொண்டிருந்தார்  அந்த பெரியவர்.  அவரை சுற்றி கைப்பிடி வைத்த சின்ன சாக்கு பைகளில் ஆட்டுக்குட்டிகள் தலையை வெளியே நீட்டிக்கொண்டு இருந்தன .  அவரிடம் பேச்சு கொடுத்தேன்.
    
ஐயா , எத்தனை வருஷமா இங்க இருக்கிங்க ..?

"நா பொறந்ததுலர்ந்து இங்கதான்யா இருக்கேன்"

விவசாயம் பாக்குறீங்களா.. பரவால்லயா இந்த வருஷம் ..?

"என்னத்தப்பா  சொல்றது., முன்ன மாதிரிலாம் இல்ல. ஏதோ வயித்துக்கு இல்லாங்காம இருக்கு. வயசும் ஆகிருச்சு உங்கள மாதிரி இளவட்டமாட்டம் ஓடியாடவா முடியும். என்ன மிஞ்ச போனா இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் விவசாயமெல்லாம். இங்க இருக்க பசங்கல்லாம் சித்தாள்  வேலைக்கு , கார்மெண்ட்ஸ் கம்பெனிக்குனு போயிட்டு இருக்கானுங்க. இருக்க கொஞ்ச நஞ்ச பேரும் ஆடு மாடு மேய்க்குறது, இருக்க நிலத்துல பயிர் பண்றதுனு இருக்கோம்."

( இன்னொரு பீடியை பற்ற வைத்து கொண்டார் )

இதென்ன பைல ஆட்டுக்குட்டி , ஆஸ்பத்திரிக்கு மருத்துவம் பாக்க போறிங்களா ..?

அமைதியாக இருக்கிறார் . "இல்லப்பா , இத்தனை நாளா புள்ளைங்களாட்டம் கூடவே  இருந்ததுங்க . கொஞ்சம் பணக்கஷ்டம். அதான் சந்தையில விக்கலாம்னு கொண்டு போறேன் . எப்போவும் இவங்களுக்கெல்லாம் முன்னாடியே கிளம்பி போயிட்டு வந்துருவேன் .
இன்னைக்கு இதுங்கள பைலை போட்டு வைச்சுக்கிட்டு மலையை விட்டு இறங்கவே மனசு வரல" என சொல்லிவிட்டு மீண்டும் ஆட்டுக்குட்டிகளையே பார்க்கிறார் .

மின்சாரமும் இல்ல, எங்கயும் போய்  வரதுனா ரோடு வசதியும் இல்ல ஆடு மேய்க்கிற நேரம் தவிர்த்து மீதி ஓய்வு நேரம் என்ன பண்ணுவீங்க..?

"காலைலேர்ந்து சாயந்திரம் வரைக்கும் மேய்ச்சலுக்கே  போய்டும்ப்பா . கொஞ்சம் அசந்தாலும் நரிங்க சுத்தி வளைச்சுக்கும் . காலையில எழுந்ததுலேர்ந்து ராத்திரி வரைக்கும் இதுங்க தான் எல்லாமே. சோறு தின்னா கூட பக்கம் வந்து நின்னுகிட்டு கேக்கும்ங்க, இப்போக்கூட விக்குறதுக்கு மனசே இல்லப்பா .   ராத்திரியிலே சாப்பிட்டுட்டு தூங்க வேண்டியது தான் . மாசத்துல ஒரு நாள் மேலே  மலைல இருக்க சித்தேஸ்வரனை போய்ப் பாத்து வருவேன் . மனசுக்கு நிம்மதியா இருக்கும். எனக்கு ஓய்வுனெல்லாம் ஒண்ணும் கெடையாது. நான் ஓய்வுக்கே ஓய்வு குடுத்துட்டேன்ல” (சிரிக்கிறார்)

கடைசியாக , உங்க பேரு என்னங்கய்யா என்றேன் .'பேர வைச்சு என்னப்பா பண்ண போற
பாத்து போய் வா .."  என அனுப்பி வைத்தார்.  கொஞ்ச தூரம் சென்று விட்டு திரும்பி பார்த்தேன் .

ஆட்டுக்குட்டிகளிடம் பேச துவங்கி  இருந்தார்.

- க.பாலாஜி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ