Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2015-ம் ஆண்டு, இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியல்!

இந்தப் பட்டியலை நாங்கள் தயாரிக்கும்போது, அனைவரும் எதிர்பார்த்த வகையில் மாருதி சுஸூகியின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. அதாவது, அதிகம் விற்பனையான 10 கார்களில் முதல் 4 இடங்களைப் பிடித்துள்ளதுடன், மொத்தமுள்ள 10 கார்களில் 5 கார்கள் மாருதிதான்! இவர்களைத் தொடர்ந்து, இந்தியாவின் சிறந்த கார் ஏற்றுமதியாளர் எனப்பெயர் பெற்ற ஹூண்டாய், 3 கார்களுடன் இந்த பட்டியலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. மற்றபடி ஹோண்டா, மஹிந்திராவின் பெயர் சொல்லும் பிள்ளைகளான சிட்டி மற்றும் பொலேரோ ஆகியவை பட்டியலை நிறைவு செய்கின்றன.

மாருதி சுஸூகி ஆல்ட்டோ: 2.72 லட்சம் கார்கள்

ஒவ்வொரு வருடமும் இந்த எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே வருவதற்கான காரணம் சரியான விலை, எரிபொருள் சிக்கனம், குறைவான பராமரிப்புச் செலவுகள் என இது முதன்முறையாக கார் வாங்குபவர்களை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதால்தான். மேலும், இவ்வருடத்தில் இந்தியாவில் அதிகளவில் விற்பனையான கார் என்ற பெருமையை, மாருதி 800-இடமிருந்து தன்வசப்படுத்தியது ஆல்ட்டோ. ரெனோ க்விட் தரும் போட்டியைச் சமாளிப்பதற்காக, புதிய முன்பக்கம் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் என மேம்படுத்தப்பட்ட ஆல்ட்டோ 800 காரை, இந்த வருடத்தில் மாருதி சுஸூகி அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸூகி டிஸையர்: 2.33 லட்சம் கார்கள்

ஆல்ட்டோ மினி கார்களின் தலைவர் என்றால், டிஸையர்தான் காம்பேக்ட் செடான் செக்மென்ட்டின் முதல்வர். கடந்தாண்டு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் சிக்கனம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தோற்றத்தில் களமிறங்கியது இந்த கார். போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது பெர்ஃபாமென்ஸ், வசதிகள், மைலேஜ், சர்வீஸ் நெட்வொர்க் என அசத்தும் டிஸையர், 2015-ல் மாதத்துக்கு சராசரியாக 19ஆயிரம் கார்கள் விற்பனையானதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்: 2.07 லட்சம் கார்கள்

இந்தியாவுக்குப் பிடித்த ஹேட்ச்பேக் ஸ்விஃப்ட் என்றால் அது மிகையில்லை. இடவசதியில் ஏமாற்றினாலும், ஓட்டுவதற்குச் சிறந்த காராக இருப்பதுடன், மாருதி கார்களுக்கே உரிய பலங்களுடன் திகழும் ஸ்விஃப்ட், தற்போது பெலினோவின் வரவால் சற்று ஆட்டம் கண்டிருக்கிறது. ஆனால் அதுவும் மாருதி சுஸூகிக்குத்தான் லாபம் என்பதால் இந்தச் சிக்கல் அவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை.

மாருதி சுஸூகி வேகன்-ஆர்: 1.70 லட்சம் கார்கள்

உயரமான கார் என்பதால், இடவசதியில் ஈர்க்கிறது வேகன்-ஆர். மேலும் LPG, CNG போன்ற மாற்று எரிபொருளில் காரைப் பயன்படுத்தலாம் என்பதால், பட்ஜெட் குடும்பஸ்தர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தவிர AMT கியர்பாக்ஸ் மற்றும் ஸ்டிங்ரே மாடலின் வரவால் வேகன்-ஆர் புத்துணர்ச்சி பெற்றுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.

ஹூண்டாய் எலீட் ஐ20: 1.30 லட்சம் கார்கள்

ப்ரீமியம் ஹேட்ச்பேக் ஒன்று, இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருப்பது எதிர்பாராத நிகழ்வு. சிறப்பம்சங்கள், ஸ்டைல், விலைக்கேற்ற தரம் ஆகியவற்றால் இதனைச் சாதித்திருக்கிறது ஹூண்டாய் எலீட் ஐ20. ஆனால் இப்போது 2016-ல் பெலினோ விற்பனையில் இதனை வீழ்த்தியிருப்பதால், சுதாரித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஹூண்டாய்க்குத் தற்போது ஏற்பட்டுள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10: 1.24 லட்சம் கார்கள்

கச்சிதமான அளவுகள் மற்றும் பாகங்கள் [லைட்டான ஸ்டீயரிங், பவர்ஃபுல் இன்ஜின்] காரணமாக ஓட்டுவதற்கு எளிதான காராகவும், ஒரு ஹூண்டாய் காருக்கான பலங்களுடனும் பவனி வருகிறது ஹூண்டாய் கிராண்ட் ஐ10, மேலும் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் மாருதியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தியதில் பெரும் பங்கு, இந்த காரையே சாரும். அதன் உச்சம்தான், ஜூன் 2016 மாத விற்பனையில், ஸ்விஃப்ட்டை கிராண்ட் ஐ10 ஊதித் தள்ளியது சிறந்த உதாரணம். அடுத்த வருடம் புதிய ஸ்விஃப்ட் களமிறங்குவதால், கிராண்ட் ஐ10 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலைத் தயாரிப்பதில் தற்போது தீவிரம் காட்டி வருகிறது ஹூண்டாய்.

மஹிந்திரா பொலேரோ: 88 ஆயிரம் கார்கள்

ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸாவின் வருகைக்கு முன்பாக, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யுவி என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரரான பொலேரோ, அறிமுகமாகி 15 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், அந்தப் பெருமையை ஓரளவேனும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தற்போதைய நவீன கார்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்த எஸ்யுவி விற்பனையாவதற்கான காரணம், கிராமப்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் இருக்கும் மக்கள் மத்தியில், பொலேரோவுக்கு இருக்கும் நம்பகத்தன்மைதான்.

மாருதி சுஸூகி செலெரியோ: 83 ஆயிரம் கார்கள்

இந்தியக் குடும்பங்களுக்கு AMT கியர்பாக்ஸ் என ஒன்று இருக்கிறது என்பதை உணர்த்திய கார் செலெரியோ. சரியான பொஷிசனிங்தான் இந்த காரின் வெற்றிக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதிலுள்ள டீசல் இன்ஜின், அதிக சத்தம் போட்டாலும் மைலேஜில் கில்லி. ஆனால் டியாகோவின் வருகை, இந்த காரின் விற்பனையை பாதித்திருக்கிறது என்பது தெளிவாகப் புரிகிறது.

ஹோண்டா சிட்டி: 82 ஆயிரம் கார்கள்

மிட் சைஸ் செடான்களில் முதலிடத்தைப் பிடித்திருக்கும் ஹோண்டா சிட்டி, [டிஸைன், பெட்ரோல் இன்ஜின் பெர்ஃபாமென்ஸ், ரீசேல் மதிப்பு, நம்பகத்தன்மை] போன்ற விஷயங்களில், 1998-ல் கார் அறிமுகமானது தொடங்கி இப்போது வரை போட்டியாளர்களைச் சொல்லி அடித்திருக்கிறது. i-DTEC டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க துணை புரிந்துள்ளது.

ஹூண்டாய் இயான்: 72 ஆயிரம் கார்கள்

குறைவான விலையில் கிடைக்கும் கார் தரமானதாகவும் இருக்கும் என்பதை ஆணித்தரமாக நிரூபித்த கார் இயான். ஏனெனில், காரின் தோற்றம் மற்றும் இன்டீரியர் ஆகியவை, அதிக விலையுள்ள கார்களுக்கு இணையாக இருக்கிறது. மேலும் கார் அறிமுகமாகி 5 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், பழைய கார் போன்ற உணர்வை ஏற்படுத்தாததால், விற்பனையில் ஜெயித்திருக்கிறது இயான். ஆனால் க்விட், ரெடி-கோ ஆகிய புதிய கார்கள் தரும் போட்டியைச் சமாளிக்க, ஆல்ட்டோவைப் போல மேம்படுத்தப்பட்ட இயானும் இந்த வருடத்தில் களமிறங்க இருக்கிறது.

-ராகுல் சிவகுரு

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ