Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இப்படித்தான் பேசணும்னு இல்ல... இப்படிலாம் பேசுனா நல்லா இருக்கும்ல! #ChatEthics

உசேன் போல்ட்டுடன் கூட போட்டி போட்டு விடலாம். ஆனால் மனதுக்கு பிடித்தவர்களுடன் உரையாடலை தொடங்குவதும், அதை சுவாரசியமாக மெயின்டெய்ன் செய்வதும் அவ்வளவு கஷ்டம். 'அய்யய்யோ இப்படி பேசிருக்கக்கூடாதோ?, எப்படி பேசினாலும் ரெட் கார்ட் விழுதே!' என புலம்பித் தவிக்கும் ஹார்ட் நம் எல்லாருக்குமே வாய்த்திருக்கிறது. அந்த ஹார்ட் பீட் பதற்றத்தை குறைத்து ரிலாக்‌ஷாக உரையாடலை நிகழ்த்த சில டிப்ஸ். அட்வைஸ் எல்லாம் இல்ல ஜி!

* பிடித்தவர்களிடம் என்ன சொல்லி பேச்சைத் தொடங்குவது என எல்லாருக்கும் தயக்கம் இருக்கும்தான். அதற்காக ஏனோதானோவென்று பேச்சை தொடங்காதீர்கள். முக்கியமாக 'Hi' மட்டும் அனுப்புவது மகா பாவம். எம்.எல்.எம்முக்கு ஆள் பிடிப்பவர்களில் தொடங்கி அல்பேனியா நாட்டு ஸ்பேம் மெசேஜ் வரை எல்லாமே 'Hi'என்பதில்தான் தொடங்கும். உப்பு சப்பில்லாமல் தொடங்கும் உரையாடலை யாருமே விரும்புவதில்லை.

* சரி, 'Hi 'மட்டும் அனுப்பக்கூடாது. அப்போ கூட சேர்த்து 'ஹவ் ஆர் யூ?, வாட் டூயிங்?' போன்ற கேள்விகளை அனுப்பிட்டா போச்சு' என்றெல்லாம் யோசிக்காதீர்கள். அதெல்லாம் கூகுள் கண்டுபிடித்த காலத்து க்ளிஷே. ஏதாவது காம்ப்ளிமென்ட்டோடு தொடங்குங்கள். ஆனால் கவனம். கொஞ்சம் மிஸ்ஸானாலும் அது வழிவதைப் போல ஆகிவிடும். எனவே உருவம் சார்ந்த பாராட்டுகளை தவிர்த்து கருத்து சார்ந்த பாராட்டுகளை தெரிவியுங்கள். அது விவாதத்திற்கு வழி வகுக்கும்.

* 'நான், என்னைப் பற்றி' - இந்த சுயபுராண பெருமைகளை முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள். இருவருக்கும் பொதுவான விஷயங்களை பேசுங்கள். ஆரோக்கியமான விவாதங்கள் நல்லது. ஆனால் அதிலும் 'நான் சொல்றதுதான் சரி' என்ற மனநிலையை தவிருங்கள். 'இது என்னோட கருத்து, அது உன்னோட கருத்து' என ஈகோ இல்லாமல் விவாதத்தை முடித்தால் குட்புக்கில் பெயர் வரும்.

* பெர்சனல் சாட் கிராமத்து ஆலமரம் அல்ல. எனவே மற்றவர்களைப் பற்றி புரளி பேசுவதை தவிருங்கள். அதேபோல் 'அவ அப்படித்தான், இவன் எப்பயுமே இப்படித்தான்' போன்ற ஜட்ஜ்மென்டல் கருத்துகள் கூடவே கூடாது. அது எதிர்ப்பக்கம் இருப்பவர் உங்கள் மீது வைத்திருக்கும் பாசிட்டிவ் இமேஜை ரொம்பவே பாதிக்கும். பாசிட்டிவ் விஷயங்களையே பேசுங்கள்.

* உரையாடலை வளர்க்க வேண்டியது அவசியம்தான். அதற்காக, 'சாப்பிடியா?, எப்படிப் போகுது?' போன்ற நோக்கியா 1100 காலத்து டயலாக்குகளை தவிர்க்கவும். இந்த மாதிரியான கேள்விகளை கேட்பதற்கு அமைதியாய் இருந்துவிட்டு டாபிக் கிடைத்தவுடன் பேச்சைத் தொடங்குவது நலம்.

* ஒரு முறை மெசேஜ் அனுப்பி பதில் வராவிட்டால் பொறுமையாக காத்திருங்கள். ''மெசேஜ் படிச்சும் ரிப்ளை வரலையே, என்னாச்சு, பிடிக்கலையோ?'' என்றெல்லாம் பதறாதீர்கள். அவர்களுக்கு வேறு முக்கியமான வேலைகள் கூட இருக்கலாம். அதற்குள் என்னாச்சு?, ஏன் ரிப்ளை இல்ல? என வரிசையாக அனுப்பி இம்சிக்காதீர்கள். நச்சரிப்புகளை யாருமே விரும்புவதில்லை. கடைசி வரை பதில் வரவில்லையென்றால் வேறு ஏதாவது டாபிக்கை புதிதாக தொடங்கி பேச முயற்சி செய்யுங்கள்.

* சில சமயம் நீங்கள் பக்கம் பக்கமாக மெசேஜ்கள் அனுப்பினாலும் அந்தப்பக்கமிருந்து ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதில் வரும். ஒன்று, அதன் டாபிக் அவர்களுக்கு பிடிக்கவில்லை. அல்லது நீங்கள் அனுப்புவது அவர்களுக்கு தொந்தரவாக இருக்கும். சரியான காரணத்தை யூகித்து அதற்கேற்றார் போல நடந்துகொள்ளுங்கள்.

* எனக்கு எல்லாமே தெரியுமே என்ற ஜம்பத்தில் வகைதொகையில்லாமல் எதையாவது சொல்லி மாட்டிக்கொள்ளாதீர்கள். பின்னால் இதனாலேயே சங்கடங்கள் ஏற்படலாம். எனவே தெரியாத விஷயங்களை ஓபனாக ஒப்புக்கொள்ளுங்கள். தெரிந்தது போல ஈயம் பூசுவது, முட்டுக் கொடுப்பது போன்றவை வேண்டாம். தெரியாது எனச் சொல்வதன் மூலம் உரையாடல் நீள வாய்ப்பிருக்கிறது.

* முக்கியமாக, உரையாடலை முடிப்பது நீங்களாக இருக்கவேண்டும். வீணாய் இழுப்பதற்கு பதில் குட்நைட் சொல்லிவிட்டால் உங்கள் மீது நல்ல இம்ப்ரஷன் உருவாகும். வெறுமனே 'Bye'சொல்லாமல் ஏதாவது காம்ப்ளிமென்ட் சொல்லி அன்றைய நாளின் உரையாடலை முடியுங்கள். மறுநாள் ப்ரெஷ்ஷாக தொடங்க உதவியாய் இருக்கும். 

 -நித்திஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ