Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

1 மணி நேரத்தில் 1,000 கி.மீ.... அசரடிக்கும் 'ஹைப்பர்லூப்' பயணம்!

ன்னியாகுமரியில் இருந்து, சென்னைக்கு வருவதற்காக ஒருநாள் முழுக்க ரயில், பஸ் என நாம் செய்யும் பயணங்கள் எல்லாம் வருங்காலத்தில் பழங்கதை ஆகக்கூடும். அதற்குக் காரணமாக இதுதான் இருக்கும் என டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர், எலான் மஸ்க் சொல்வது, 'ஹைப்பர்லூப்'. மிகவும் புதுமையான, சிந்தனைகளுக்கு சொந்தக்காரரான மஸ்க்கின் சிந்தனையில் உதித்த தொழில்நுட்பம்தான் இந்த ஹைப்பர்லூப். 2012 -ம் ஆண்டு கலிபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மஸ்க், நிலம், நீர், விமானம், விண்வெளிப் பயணம் ஆகிய நான்கு போக்குவரத்து முறைகள் இல்லாமல், ஐந்தாவதாக புதிய முறை ஒன்றைப் பற்றி யோசனை செய்து கொண்டிருப்பதாகக் கூறினார். அது வானிலை மாற்றங்கள், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை எல்லாம் எளிதில் எதிர்கொள்ளும் வகையிலும், 1200 கி.மீ வேகத்திலும் செல்லும் எனவும் கூறினார். இப்படி அடுத்தடுத்து ஆச்சரியங்களை விதைத்த, அந்த தொழில்நுட்பத்திற்கு 'ஹைப்பர்லூப்' எனப் பெயரும் வைத்தார் மஸ்க். ஒரு வெற்றிடம் கொண்ட, குழாய்க்குள் கேப்சூல் மூலம் பயணம் செய்யும் முறைதான் இந்த 'ஹைப்பர்லூப்'.

இதற்கான தேவை என்ன?

"தேவைதான் கண்டுபிடிப்பின் தாய்" என்பது டெக்னாலஜி உலகின் வேதவாக்கு என்றே சொல்லலாம். மனிதர்களின் தேவையைப் பொறுத்தே, புதுப்புது தொழில்நுட்பங்கள் வெற்றிபெறுகின்றன. தற்போது ஒவ்வொரு மனிதருக்கும் நேரம் என்பது மிகவும் விலை மதிப்பில்லாத ஒன்றாகிவிட்டது. அத்துடன் 100 கி.மீட்டருக்குத் தேவையான ரயில்பாதை அமைப்பதற்கான செலவு, மனித உழைப்பு ஆகியவற்றை நினைத்துப் பாருங்கள். இந்த இரண்டு தேவைகளுக்கும் தீர்வாக அமைவதில்தான் இருக்கிறது ஹைப்பர்லூப்பின் வெற்றி.ரயில் பாதை அமைப்பதற்கான செலவு, காலம் ஆகியவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்த்தார் மஸ்க். உடனே 2013-ம் ஆண்டு ஹைப்பர்லூப்பின் தொழில்நுட்பத்தைப் பற்றி தனது பிளாக்கில் வெளியிட்டார். 

எப்படி இருக்கும் இந்த ஹைப்பர்லூப்?

ரயில் பாலங்கள் போலவே, இதற்கென பிரத்யேக தூண்கள் அமைக்கப்பட்டு, வளையங்கள் அமைக்கப்படும். அந்த வளையத்திற்குள் பயணத்திற்கான கேப்சூல்கள் பொருத்தப்பட்டு, அவை செலுத்தப்படும். கேப்சூலின் உள்ளே பயணிகள் அமர்ந்திருப்பர். இதற்கான கட்டுமான செலவும், பயண செலவும் மற்ற வழிகளை விடவும் மிகவும் குறைவு என்பது சிறப்பு. அத்துடன் இது சூரிய சக்தியில் இயங்குவதால், மின்சார மற்றும் எரிபொருள் செலவும் மிச்சம். சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்காது. இந்த ஹைப்பர்லூப் என்பது ஒரே ஒரு தொழில்நுட்பம் கிடையாது. ஏர் ஹாக்கி எனப்படும் விளையாட்டின் தத்துவம் , கன்கார்ட் எனப்படும் விமானத்தின் வடிவமைப்பு, ரெயில் கன் எனப்படும் மின் துப்பாக்கி ஒன்றின் செயல்பாடு என காக்டெயில் கலவைதான் இது. மஸ்க்கின்  மற்றொரு நிறுவனமான, ஸ்பேஸ் எக்ஸ் இந்த தொழில்நுட்பத்தை சோதிப்பதற்கான வேலைகளை துவங்கிவிட்டது.

எப்படி செயல்படும்?

ஏர் ஹாக்கி என்பது கேரம் போர்டு போன்ற பெரிய மேஜை மீது, சிறிய தட்டு ஒன்றை வைத்து விளையாடும் விளையாட்டு. அந்த மேஜையின் மேற்புறத்தில் ஏராளமான காற்றுத் துளைகள் இருக்கும். அந்த மேஜையின் கீழே, இயந்திரத்தின் உதவியுடன் காற்று உள்செலுத்தப்படும். இதனால் அந்த மேஜைக்கும், தட்டுக்கும் இடையேயான உராய்வு குறைந்து, இடைவெளி ஏற்பட்டு எளிதாக வழுக்கி செல்லும். இதே போல ஹைப்பர்லூப்பின் கேப்சூல்களில் அழுத்தம் பாதியாக குறைக்கப்படும். பின்னர் காந்த சக்தி மூலம் கேப்சூலை உயர்த்தி, அந்த கேப்சூலுக்கும் தரைக்கும் இடையேயான உராய்வு குறைக்கப்படும். இதன் மூலம் கேப்சூல் வேகமாக செல்வதற்கான தகுதியைப் பெறும்.

அடுத்தது கன்கார்ட் விமானம். இது மிகவும் வேகமாக பறக்ககூடிய விமானங்களில் ஒன்றாகும். வானில் பறக்கும் போது, காற்றுத் தடையைக் குறைப்பதற்காக விமானத்தின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். உதாரணமாக விமானத்தின் முனை மிகவும் கூர்மையாகவும், உடல் பகுதி ஏரோ டைனமிக்ஸ்க்காக மிகவும் நேர்த்தியாகவும் இருக்கும். அதே போலவே கேப்சூலும் வடிவமைக்கப்பட்டு உள்ளதால், கேப்சூலின் வேகம் காற்றினால் பாதிக்கப்படாத வகையில் இருக்கும்.

அடுத்தது ரெயில் கன்(railgun) தொழில்நுட்பம். மின்சக்தியை எடுத்துச்செல்லும் ஒரு உலோகத்தை, இரு காந்தங்களுக்கு இடையில் வைத்தால், அந்த உலோகம் நகரும் என்பது ரெயில் கன்னின் தத்துவம். இதுதான் ஹைப்ப்ர்லூப் கேப்சூலின் உந்துசக்தியைக் கொடுப்பது. கேப்சூல் மின்சக்தியை எடுத்து செல்லும். கேப்சூலை சுற்றி இருக்கும் லூப்பில் காந்த சக்தி இருக்கும். இதனால் கேப்சூல் முன்னோக்கி செல்லும். ஆனால் இந்த மின்சக்தியால் பயணிகளுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. இதற்கான மின்சக்தி சூரியஒளி மூலம் பெறப்படும்.

எவ்வளவு செலவு ஆகும்?

இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு, போக்குவரத்தை வடிவமைப்பது மிகவும் சுலபம் என்கிறார் மஸ்க். ரயில்களைப் போல தண்டவாளம், இன்ஜின்கள், எரிபொருள் என எதுவும் வேண்டாம். 100 மீட்டருக்கு ஒரு தூண் அமைத்தால் போதும். உதாரணமாக புல்லட் ரயில் அமைக்க, ஒரு கி.மீட்டருக்கு 140 கோடி ரூபாய் தேவைப்படும். ஆனால் ஹைப்பர்லூப்பிற்கு அதில் பாதி செலவு செய்தால் போதும். வேகமும் அதிகமாக இருப்பதால், ஒரு நாளைக்கு பலமுறை இயக்கப்படும். இதனால் நிறைய மக்கள் பயணிக்க முடியும்.

தற்போது இந்த தொழில்நுட்பத்தை டெஸ்லா மட்டுமில்லாமல், பல நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு செயல்படுத்தி வருகின்றன. இன்னும் சில ஆண்டுகளில், இந்த தொழில்நுட்பம் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- ம. சக்கர ராஜன்,

(மாணவப் பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close