Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெளத்ரம் முதல் பார்ட் டைம் வரை...! - போஸ்டர் பல்லேலக்கா!

பஞ்சாயத்து போர்டு மோட்டார் ரூம் முதல், பப்ளிக் பாத்ரூம் சுவர் வரை நாம் பிஸினஸ்மேன்கள் ஆவதற்குப் பலப்பல 'பளபள' ஐடியாக்களோடு காத்திருக்கின்றன. இவற்றில் பெரும்பான்மையானவை, மூல வியாதியையே 'டைப்ஸ் ஆஃப் மூலம்' என ரகம் பிரித்து கடை விரிக்கும் போஸ்டர்கள்தான் . சொன்னபடி அவற்றை எல்லாம் குணமாக்குவார்களா என்பதெல்லாம் வேறு விஷயம். ஆனால் இந்த மூலம் பெளத்ரம் போஸ்டர்களுக்கு பக்கத்திலேயே 'புது ப்ராஜெக்ட் - பத்தாயிரம் மட்டுமே முதலீடு', '****** கம்பெனியின் முகவராகி மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதியுங்கள்!' என வார்த்தைகளிலேயே வாசனையைத் தூவித் தூண்டில் போட்டுக்கொண்டிருப்பார்கள். அப்படி நிஜமாகவே இருக்குமா எனக் கொடுத்திருக்கும் போன் நம்பருக்கு அழைத்து விசாரித்துப் பார்த்து கால் சார்ஜ் பத்து ரூபாய் நட்டமாவதோடு நிறுத்திக்கொண்டால் சர்வம் நலம். இல்லைனா...  

* தினமும் நான்குமணி நேரம் மட்டுமே பார்ட் டைம் வேலை பார்த்துச் சம்பாதிக்கலாம். வேலைக்குச் செல்வோர், குடும்பத் தலைவிகள், கல்லூரி மாணவர்கள் தொடர்பு கொள்ளவும்'னு பஸ் ஸ்டாண்ட் பக்கம் திரும்பும் பக்கமெல்லாம் போஸ்டர்களாக ஒட்டியிருப்பார்கள். பார்ட் டைம் வேலைக்கே பத்தாயிரம் சம்பளம் கொடுத்தா இன்னும் ஏன் எம்ப்ளாய்மென்ட் ஆபீஸில் 85 லட்சம் பேர் பதிஞ்சிட்டு வெட்டியா வீட்டில் உட்கார்ந்துட்டு இருக்காய்ங்களாம்?

* கம்ப்யூட்டரும், மொபைல் போனும் மட்டும் இருந்தால் போதும். கைநாட்டு வைப்பவர்கள்கூடக் கைநிறைய சம்பாதிக்கலாம், எனப் பெரிய எழுத்தில் விளம்பரம் செய்வார்கள். கைநாட்டு வைக்கிறவங்க எப்படிய்யா நீங்க எழுதியிருக்கிறதை வாசிப்பாங்க? பெருசாச் சிக்கவைக்க ப்ளான் போடுறாய்ங்கனு இப்பவே புரிஞ்சுட்டுக் கழண்டுக்கணும்.

* ஈமு கோழி வளர்ப்புத் தொழில் நொடித்து நொண்டியடித்துவிட்டதால், அடுத்து நெருப்புக்கோழி வளர்க்கலாம், நீர்க்கோழி வளர்க்கலாம்.. என விதவிதமான வித்தியாச ஐடியாக்களை ரூம் போட்டு யோசித்து அரங்கேற்றுவார்கள். கோழின்னு பெயரைப் பார்த்தாலே பறந்துடுங்க!

* வெறும் காப்பி பேஸ்ட் செய்யும் வேலைக்கு நீங்கள் நினைத்துப் பார்க்காத சம்பளம் எனப் பார்த்ததுமே பல்பு எரிய வைக்கும் ஐடியாக்களோடு நம்மை வலைவீசிப் பிடிக்கக் கால்நடையாகவே சுற்றி போஸ்டர் ஒட்டிக்கொண்டு திரிவார்கள். ஃபேஸ்புக், ட்விட்டரில் இருக்கும் காப்பி பேஸ்ட் கண்ணாயிரங்களை இவர்களிடம் பிடித்துக் கொடுத்தால், கமிஷன் தொகையிலேயே நாம் செழிப்பாக வாழலாம் எனத் தோன்றும். 

* 'முதலீடே தேவையில்லை. நீங்களும் ஆகலாம் முதலாளி!' என ரைமிங்கோடு டிசைன் டிசைனாக கலர் போஸ்டர் அடித்து ஓவர்நைட்டில் ஒட்டுமொத்த ஏரியாவிலும் ஒட்டிவிடுவார்கள். தொடர்புகொண்டால், ஏதோ பெயரே தெரியாத 'பிரபல' நிறுவனத்தின் லோக்கல் கிளை அலுவலகத்துக்குக் கட்டடம் கட்ட இடம் தந்தால் கோடிகோடியாய்ப் பணம் புரளும் கம்பெனியில் உங்களையும் பார்ட்னராக சேர்த்துக்கொள்வதாகச் சொல்வார்கள். நம்பி நான்கைந்து பேப்பர்களில் கையெழுத்துப் போட்டால் நீங்களும் ஆகலாம் கடனாளி!

* 'இன்றே இணைவீர்.. கோவிந்தா சிட்ஃபண்ட்ஸ்!' எனக் கைகொள்ளாமல் பணம் வைத்திருக்கும் ஒருவர் நிற்பது போன்ற போட்டோவுடன் கலக்கலாக ஒட்டப்படும் போஸ்டர்கள் அடுத்த வருடம் வேறு பெயரில் ஒட்டப்பட்டிருக்கும். சிட்ஃபண்ட் இல்லை. சீட்ஃபண்டுனு சொல்லவே இல்லையேப்பா!

* இப்போலாம் டெக்னாலஜி முன்னேறி வால் போஸ்டர்களுக்குப் பதிலாக வாட்ஸ்-அப்லேயும், ஹைக்லேயும் போட்டோவை அனுப்பி வாட்ஸ்-அப் சாட்லேயே வெட்டியாய் இருக்கும் ஆட்களை வளைத்துப்போட்டுக்கொண்டு இருக்கிறார்களாம். சூதானமா இருங்க மக்கா!

* வேலையில்லாமல் இருப்பவர்களுக்கான அரிய வாய்ப்பு! பயன்படுத்திக்கொள்ளுங்கள்! என ஒரு போஸ்டரில் போன் நம்பர் கொடுத்து அழைக்கச் சொல்வார்கள். கடைசியில் அந்த வேலையே போஸ்டர் ஒட்டும் வேலையாக இருக்கும். அதிசயம் ஆனால் உண்மை!

- விக்கி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ