Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்பீடா போனா டிஸ்ப்ளே கலர் மாறும்- KTMன் அடுத்த அதிரடி பைக்!


இந்திய இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் கேடிஎம் டியூக் 200/390 பைக்குகள், அடுத்த கட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது. இணையதளங்களில் 2017-ம் ஆண்டுக்கான டியூக் 200/390 பைக்குகளின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. 2017-ம் ஆண்டுக்கான டியூக் 200/390 பைக்குகள், 1290 சூப்பர் டியூக் R பைக்கைப் போலத்தான் இருக்கும் என்பது படங்களின் வாயிலாக உறுதியாகியுள்ளது. நமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இதில் “Colour LCD Instrument Cluster” பொருத்தப்படலாம் எனவும்,, இதன் TFT டிஸ்பிளேவில் ஓட்டுனரின் மொபைலை இணைக்கும் வசதி இருக்கும் எனவும் தெரிகிறது. மேலும் பைக்கின் வேகத்திற்கு ஏற்ப டிஸ்பிளேவின் நிறம் மாறும் என்பதுடன், GPS கருவியாகவும் அதனைப் பயன்படுத்தலாம் என்பது ப்ளஸ். 

பழைய பைக்குடன் ஒப்பிடும்போது, புதிய டியூக்கின் பெட்ரோல் டேங்க் மெட்டலால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆக இதில் மேக்னட்டிக் டேங்க் பேக்குகளைப் பொருத்திக்கொள்வது சுலபம். பைக்கின் சைலன்சர் யுரோ-IV மாசு விதிகளுக்கு ஏற்ப பெரிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய டியூக்கின் எடை, தற்போது இருக்கும் பைக்கைவிட 4 முதல் 5 கிலோ அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பைக் வெளியிடும் புகை கணிசமாகக் குறையும். 

ஸ்பை படங்களின் வாயிலாக, இதில் “Two Piece Trellis Frame” இடம்பெற்றுள்ளது தெளிவாகியுள்ளது. மேம்படுத்தப்பட்ட WP சஸ்பென்ஷன் விளைவாக, மேடு பள்ளங்களிலும் வளைவுகளிலும் பைக்கை மிகச் சரியாகச் செலுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு. 2017-ல் வர இருக்கும் விதிகளுக்கு ஏற்ப, டியூக் 200-ல் ஏபிஎஸ் சிஸ்டம் பொருத்தப்படலாம் என்றும் தெரிகிறது. 

பழைய பைக்குடன் ஒப்பிடும்போது, புதிய டியூக்கின் பவர் மற்றும் டார்க்கில் எந்த மாற்றமும் இல்லாதது மைனஸ். ஆனால் பைக்கின் ஆக்ஸிலரேஷனை சிறப்பாக்கும் வகையில், ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படும் டியுக்கில் “Throttle-by-Wire” தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அதேபோல இந்தியாவிலும் ”Ride-by-Wire” தொழில்நுட்பத்தால் பைக் இயக்கப்படுவது போல இருந்தால், அது BS-4 மாசு விதிகளுக்கான ஒப்புதலைப் பெறுவதற்கு உதவிகரமாக இருக்கும்.


2017 டியூக் 200/390 பற்றியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, EICMA-2016ல் வெளிவரும். அதுவரை விஜய் பாணியில் சொல்வதென்றால், ''ஐ அம் வெயிட்டிங்'' ஆக இருங்கள் மக்களே.!

- ராகுல் சிவகுரு 
- அ.முகமது யூசுப் (மாணவர் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ