Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முன்னர் ஆரியா.. இப்போது ஹெக்ஸா! #SUV #TataHexa

2016-ம் ஆண்டை டியாகோ ஹேட்ச்பேக் மூலம் வெற்றிகரமாகத் துவங்கி இருக்கும் டாடா, பண்டிகைக் காலமான அக்டோபரில் ஹெக்ஸா எஸ்யூவியைக் களமிறக்க முடிவு செய்துள்ளது. ஹெக்ஸாவை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கு முன்பாகவே, அதனை 2015 ஜெனிவா ஆட்டோ ஷோ மற்றும் கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016-ல் டாடா காட்சிபடுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் விலை அதிகமான காராக இருக்கப்போகும் இதன் அடிப்படை வடிவம் ஆரியாவை நினைவுபடுத்தினாலும், க்ராஸ் ஓவர்/எஸ்யுவி போன்ற டிஸைன், முற்றிலுமாக மேம்படுத்தப்பட்ட 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் [156bhp பவர் - 40kgm டார்க் - 6 ஸ்பீடு மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்], அதிகப்படியான தொழில்நுட்பம் [ரேஞ்ச் ரோவர் கார்களில் இருப்பது போன்ற மல்ட்டி டிரைவ் மோடுகள், 4 வீல் டிரைவ் சிஸ்டம்] என இதன் முக்கிய போட்டியாளர்களான மஹிந்திரா XUV 5OO மற்றும் டொயோட்டா இனோவா க்ரிஸ்டா ஆகிய கார்களை அசூர பலத்தோடு எதிர்கொள்ள இருக்கிறது ஹெக்ஸா.

கிட்டத்தட்ட மூன்று வேரியன்ட்டில் வரப்போகும் இந்த காரின் ஆரம்ப விலை, XUV-யைப் போல 13 லட்ச ரூபாயாக (எக்ஸ் ஷோரும்) இருக்கலாம் எனத் தெரிகிறது. MID உடனான இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர், 5 இன்ச் Harman டச் ஸ்கிரீன் சிஸ்டம், JBL ஆடியோ சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, லெதர் சீட்கள், க்ரூஸ் கன்ட்ரோல், ESP, TCS, ABS, EBD, 6 காற்றுப்பைகள், 19 இன்ச் அலாய் வீல்கள் என ஹெக்ஸாவின் பிரீமியம் பொசிஷனிங்குக்கு ஏற்ப அதிக சிறப்பம்சங்கள் காரில் இடம்பிடித்துள்ளன. ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வரும் கார்களில், Rotary Controller வாயிலாக ஆஃப் ரோடு செட்டிங்கை மேற்கொள்ளலாம். மற்ற மாடல்களில் இந்த Rotary Controller வாயிலாக டிரைவிங் மோடுகளை செலக்ட் செய்ய முடியும் என்பது ப்ளஸ்.

தற்போது விற்பனையில் இருக்கும் ஆரியா தயாரிக்கப்படும் அதே X2 ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு ஹெக்ஸா தயாரிக்கப்பட்டிருந்தாலும், ஆரியாவை விட லக்ஸுரியான கேபின் மற்றும் முற்றிலுமாக மேம்படுத்தப்பட்ட டிஸைன் எனக் கிட்டத்தட்ட ஒரு புதிய காருக்கான அம்சங்களைக் கொண்டிருக்கிறது ஹெக்ஸா. தற்போது டாடாவின் விலை உயர்ந்த காரான ஆரியா, சிறப்பான தயாரிப்பாக இருந்தும் விற்பனையில் வெற்றி பெறாமல் போனதற்கு, அதன் எம்பிவி போன்ற தோற்றம் மற்றும் அதிக விலையே காரணம். எனவே அதிக சிறப்பம்சங்கங்கள் மற்றும் தொழில்நுட்பத்தால் நிரம்பப்பட்டு, அடுத்த கட்டத்திற்குச் சென்றிருக்கும் ஹெக்ஸாவின் விலையை டாடா கச்சிதமாக நிர்ணயிக்கும் என நம்பலாம்.
 

-ராகுல் சிவகுரு

எடிட்டர் சாய்ஸ்

MUST READ