Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்போதெல்லாம் 25000, 50000.. இப்போதோ 2 கோடி 3 கோடி! #மொய்விருந்து சுவாரஸ்யங்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி தொடங்கி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு, ஆவணம், ஆலங்குடி வரைக்கும், ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் களை கட்டுகிறது மொய் விருந்து. மொய் விருந்து என்றவுடன், சின்னக்கவுண்டர் படத்தில் சுகன்யாவின் மேல் பரிதாபப்பட்டு, விருந்து சாப்பிட்டு விட்டு விஜயகாந்த் இலைக்குக் கீழே பணம் வைத்துச் செல்வாரே அதுதானே என்று கேட்பீர்கள். அதுவல்ல மொய் விருந்து. ஜாதி, மதம் கடந்து, அனைத்து மக்களையும் ஒற்றை இழையில் இணைக்கும் பொருளாதார பந்தம் இது. கமகமக்கிற கறி விருந்து, கோடிகளில் பண பரிவர்த்தனை என பல்வேறு சுவாரஸ்யங்கள் இதற்குள் இருக்கின்றன. 

திருமணம், காதுகுத்து போன்ற சுப காரியங்களாகட்டும், மரணம் போன்ற துக்க சம்பவங்கள் ஆகட்டும்... சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பார்கள். அவர்களை மீட்கும் வகையில் நிகழ்வுக்கு வருபவர்கள் தங்களால் இயன்ற தொகையை அக்குடும்பத்தினருக்கு மொய்யாக எழுதுவது வழக்கம். இந்த மனிதாபிமானத்தில் இருந்து துளிர்த்தது தான் மொய்விருந்து. கடந்த 20 ஆண்டுகளில் இந்த மொய் விருந்து பல்வேறு பரிமாணங்களை எடுத்து விட்டது. சுபகாரியங்களில் மட்டுமே நடத்தப்பட்ட மொய்விருந்து, இன்று தனி உருவெடுத்து மொய்விருந்து விழாவாகவே நடக்கிறது. 

பேராவூரணியில் மட்டும், 20க்கும் மேற்பட்ட மொய்விருந்து விழா மண்டபங்கள் இருக்கின்றன. டிமாண்ட் காரணமாக தியேட்டரை எல்லாம் இடித்து மண்டபமாக்கி விட்டார்கள். ஆனி மத்தியிலேயே மொய் விருந்து சீசன் தொடங்கி விடும். முன்பெல்லாம் ஒவ்வொருவராகத் தான் மொய்விருந்து நடத்துவார்கள். செலவைக் குறைப்பதற்காக இப்போது பத்து பேர், இருபது பேரெல்லாம் சேர்ந்து நடக்கிறார்கள். 

வீட்டுக்கு வீடு ஒரு நோட்டு பராமரிப்பார்கள். அதற்கு "மொய் நோட்டு" என்று பெயர். அதில் யாரெல்லாம் நமக்கு மொய் செய்துள்ளார்கள், யாருக்கெல்லாம் நாம் மொய் செய்திருக்கிறோம் என்ற தகவல் பதிவு செய்யப்பட்டிருக்கும். மொய் விருந்து நடத்துபவர்கள், மண்டபத்தை முடிவு செய்தபிறகு, அழைப்பிதழ் அடிப்பார்கள். அதில் "விருந்துண்டு, மொய் பெய்து விழாவைச் சிறப்பிக்குமாறு" அச்சிடப்பட்டிருக்கும். அதை வீடுகள்தோறும் கொடுப்பார்கள். அந்த அழைப்பிதழையும், வீட்டில் இருக்கும் மொய் நோட்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். :மொய்" தொடர்பு இருக்குமானால் அந்த அழைப்பிதழில் "இவ்வளவு மொய்" என்று எழுதி வைத்துக் கொள்வார்கள்.

மொய் விருந்து நாளன்று, காலை 8 மணிக்கெல்லாம் மண்டபம் களைகட்டும். மண்டபத்தின் ஒரு பகுதியில், வரிசையாக சட்டியும், நோட்டுமாக அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு மேல், ஒரு அட்டையில், அது யாருக்கான மொய் என்ற விபரம் எழுதப்பட்டிருக்கும். இன்னொரு பக்கம், விருந்து தயாராகும். கறி விருந்து. 

பேராவூரணி மொய்விருந்து மட்டன் குழம்பை ஒருமுறை சாப்பிட்டவர்கள் அந்த ருசிக்கு அடிமையாகி விடுவார்கள். தனியா வாசனை கமகமக்க, சமையல் நடக்கும் போதே வாசனை பசியைக் கிளப்பி விட்டுவிடும். 

மொய் விருந்து நடக்கும் மண்டபத்திற்கு வருபவர்கள், யாருக்கு மொய் எழுத வேண்டுமோ அந்த இடத்திற்கு செல்வார்கள். மொய் எழுவதில் சில கணக்கீடுகள் உண்டு. ஒருவர் எவ்வளவு மொய் செய்தருக்கிறாரோ அதை மட்டும் செய்தால் போதாது. அந்த மொய்யை எழுதி, "புது நடை" என்ற பெயரில் கூடுதலாக ஒரு தொகையை எழுத வேண்டும். அதற்கும் கணக்குகள் உண்டு. அவரின் மொய்ப்பணம் எத்தனை வருடங்கள் நம்மிடம் இருந்தது என்பதைப் பார்த்து கணக்கிட்டு கூடுதலாக எழுத வேண்டும்.

அந்தக் காலத்தில் 25 ரூபாய், 50 ரூபாய் மொய் இருந்தது. இப்போது குறைந்தபட்சமே 100 ரூபாய் தான். 

உதாரணத்துக்கு, ஒருவர் நமக்கு 100 ரூபாய் மொய் எழுதியிருக்கிறார். 5 ஆண்டுகள் கழித்து அவர் மொய் விருந்து நடத்துகிறார் என்றால் கூடுதலாக 100 ரூபாய் "புதுநடை" எழுத வேண்டும். அதற்குக் குறைவாக எழுதினால், பொதுவிடத்தில் அதைக் குறிப்பிட்டு அவமரியாதையாகப் பேசுவார்கள். பெயரோடு மொய் தொகையையும் நோட்டில் எழுதி விட்டு சட்டியில் போட்டுக் கொள்வார்கள். மொய் எழுதியவுடன் விருந்து. 3 மணிக்கெல்லாம் மண்டபம் காலியாகி விடும். சரியாக 12 மணிக்குள் மொய் எழுதிவிடுவது மரியாதை. அதற்கு மேல் போனால், "பின் வரவு" ஆகிவிடும். பின் வரவில் மொய் எழுதுவது மரியாதை அல்ல.


சரி... ஒருவர் போட்ட மொய்யை நாம் அவருடைய மொய்விருந்தில் போடவில்லை என்றால் என்னவாகும்..?

இரண்டு நாள் கழித்து, வீட்டுக்கு ஒரு ஆள் வரும். "அண்ணன் மொய்ப்பணம் கேட்டார்" என்பார்கள். அப்போதாவது கொடுத்து விட வேண்டும். இல்லையென்றால் அடுத்த சில நாட்களில் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டு அவமானப்படுத்தி விடுவார்கள். மொய்க்குப் பயந்து ஊரை விட்டு ஓடியவக்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள் எல்லாம் உண்டு.  

ஒருகாலத்தில் ஒருவர் 25 ஆயிரமோ, 50 ஆயிரமோ மொய் பிடித்தால் பெரிது. இப்போதெல்லாம் 2 கோடி, 3 கோடி மொய் பிடிக்கிறார்கள். முக்கிய நேரங்களில் பணத்துக்குச் சிரமப்படுபவர்களுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்ட மொய், இப்போது முற்றிலும் வணிகமயமாகி விட்டது. முக்கியமாக, மொய்க்கு வரியில்லை என்பதால் பலர் கருப்பை வெள்ளையாக்க இந்த நுட்பத்தைப் பயன்படுத்துவதாக ஒரு குற்றச்சாட்டு உலவுகிறது. 

தவிர, மொய் விருந்து விழாக்களில் விருந்தோம்பல் தன்மையே இல்லாமல் போய்விட்டது. அழைப்பிதழ்களை வீட்டுக்குள் வீசியெறிந்து விட்டுச் செல்வது, மொய்விருந்து விழாவில் அடித்துப் பிடித்துக்கொண்டு சாப்பிட இடம் பிடிப்பது, கறி குறைந்தால் சண்டை போடுவது என நிறைய வரம்பு மீறல்கள். முன்பெல்லாம் அகப்பைகளில் குழம்பு ஊற்றுவார்கள். இப்போது பிரச்னை வருகிறது என்று கப் கறி போடத் தொடங்கி விட்டார்கள். சரியான அளவீட்டில் கப்களில் கறியை வைத்து ஒரு இலைக்கு ஒரு கப் என்ற விதத்தில் பறிமாறுகிறார்கள். 
பாரம்பரியமாக மொய் பந்தத்தை கட்டிக்காப்பாற்றிய பலர் இப்போது அதில் இருந்து முற்றிலும் விலகி விட்டார்கள். ஓரிருவர் மொய் நடத்திய காலம் போய் இப்போது, பத்து, பதினைந்து பேர் சேர்ந்து மொய் விருந்து நடத்துவதால், எல்லோருக்கும் சேர்த்து மொய்போட பணமில்லாமல் தவிக்கிறார்கள். 

நம்பகத்தன்மை உள்ள யாரும் மொய் விருந்து நடத்தலாம். தகுதிக்கு தகுந்த வரவு. வாங்கிய மொய்யை ஒழுங்காக திரும்பிச் செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் நட்பை இழந்தவர்கள், உறவை இழந்தவர்கள், அரிவாள் வெட்டு வரை வந்து உடல் உறுப்புகளை இழந்தவர்கள் உண்டு. 

மொய் விருந்து ஏற்படுத்திய நன்மைகளையும் குறிப்பிட்டாக வேண்டும். இரண்டு மாத காலம் சூடான சுவையான மதிய விருந்து நிச்சயம். யார் வேண்டுமானாலும் விருந்து சாப்பிடலாம். சமையலர்கள், பரிமாறுபவர்கள், மொய் எழுதுபவர்கள், கணக்குப் பிள்ளைகள் என நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை மொய்விருந்து உருவாக்கியிருக்கிறது. ஜவுளி தொடங்கி மளிகைச் சாமான்கள் வரை வணிகம் தழைக்கிறது. அழைப்பிதழ் அடிக்கும் அச்சகங்கள், பிளக்ஸ் போர்டு அடிக்கும் பிரிண்டர்களுக்கு கொண்டாட்டம். டாஸ்மாக்கிலும் வியாபாரம் களைகட்டுகிறது.  

ஆனி மாத மத்தியில் தொடங்கி, ஆவணி மத்தி வரைக்கும் நடக்கும் மொய் விருந்தில் நூறு கோடிக்கு மேல் பணம் புழங்குகிறது. பிடிக்கும் மொய் பணத்தை தகுந்த வகையில் முதலீடு செய்தவர்கள் தப்பித்தார்கள். மொத்தமாக பணத்தைப் பார்த்ததும் கை குளிர எடுத்து செலவு செய்தவர்கள் சிக்கினார்கள். ஒவ்வொரு வருடமும் மொய் பிடிப்பவர்கள் ஆடி மாதத்தை ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். மொய் போட வேண்டியவர்கள், ஆடி மாதம் வந்தாலே மிரள்வார்கள்.  

வெ.நீலகண்டன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

சிவாஜி குறித்து எம்.ஜி.ஆரின் சிலாகிப்பு! #HBDSivaji #NadigarThilagam
placeholder

ல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

உங்க ஏரியா எப்படி இருக்கு? உள்ளாட்சி சர்வே முடிவுகள்..!

MUST READ