Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஸான் GT-R காரின் புக்கிங் தொடங்கியது!

ஜப்பானைச் சேர்ந்த நிஸான் நிறுவனம், தான் தயாரிக்கும் GT-R சூப்பர் காரை, வரும் பண்டிகை காலத்தில் இந்தியாவில் களமிறக்க உள்ளது. இந்த காரின் புக்கிங் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்ட நிலையில், இதனை வாங்கும் விருப்பமுள்ளவர்கள் டெபாஸிட் தொகையான 25 லட்சம் ரூபாயைச் செலுத்தி காரை புக் செய்யலாம். CBU முறையில் இந்த கார் இறக்குமதி செய்ப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருப்பதால், அமெரிக்காவில் 7 கலர்களில் சுமார் 74 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படும் GT-R, வரிகளுடன் இங்கு வரும்போது 1.5 - 2 கோடி ரூபாய் விலையைக் கொண்டிருக்கும்.

Skyline ஆகப் பிறந்து, GT-R ஆக இந்த கார் உருமாறி, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. மார்ச் 2016-ல் நடந்த நியூயார்க் மோட்டார் ஷோவில் காட்சிபடுத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட GT-R Premium Edition மாடலையே நிஸான் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதை இங்கு சொல்லியாக வேண்டும். இதில் கூடுதல் பவருடன் இன்ஜின், காரின் தோற்றத்தில் கணிசமான மாற்றங்கள் மற்றும் முன்னேற்றப்பட்ட கேபின் காரணமாக, GT-R ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. 0 - 100 கிமீ வேகத்தை 3 விநாடிகளுக்கு உள்ளாகவே எட்டிப் பிடிக்கக் கூடிய திறன் கொண்ட இந்த காரின் வெளிப்புறத்தில், ஏர் வென்ட்கள் உடனான பம்பர்கள், மாற்றியமைக்கப்பட்ட க்ரோம் க்ரில் - பானெட் - ஹெட்லைட், புதிய அலாய் வீல்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இவை எல்லாம் சேர்ந்து அதிக வேகங்களில் GT-Rன் கையாளுமை மற்றும் ஏரோடைனமிக்ஸை (0.26 Drag) சிறப்பாக்கும் என நிஸான் கூறியுள்ளது.

காரின் உட்புறத்தில், முற்றிலும் புதிய டேஷ்போர்டு - ஸ்டீயரிங் வீல் - 8.0 இன்ச் டச் ஸ்கிரின் சிஸ்டம் - லெதர் இருக்கைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் சென்டர் கன்சோலில் இருந்த ஸ்விட்ச்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது (27-ல் இருந்து 11) வரவேற்கத்தக்க அம்சமாகும். GT-R காரில் இருந்த 3.8 லிட்டர் VR38DETT சீரிஸ் ட்வின் டர்போ V6 இன்ஜின், 570bhp மற்றும் 63.7kgm டார்க்கை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. அதிக பவரைத் தாங்கும் விதமாக, காரின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் - சஸ்பென்ஷன் செட்-அப் - டைட்டானியம் எக்ஸாஸ்ட் சிஸ்டம் - காரின் கட்டுமானம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இவை எல்லாம் சேர்ந்து, திருப்பங்களில் அதிக வேகங்களில் செல்வதற்கான நம்பிக்கையையும், காரின் நிலைத்தன்மையும் அதிகரிக்கும் என நிஸான் தெரிவித்துள்ளது. ரேஸ் டிராக் மற்றும் ட்ராக் ரேஸ் ஆகிய இரண்டிலும் அற்புதமாகச் செயல்படக்கூடிய GT-R, அதிகபட்சமாக 315கிமீ வேகம் செல்லக்கூடியது. உலகளவில் இருக்கும் கார் ஆர்வலர்களால் இந்த கார் GodZilla என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சரியான ட்யூனரிடம் இந்த கார் சென்றால், 1000bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய பவர்ஃபுல் பட்டாசாக இந்த காரை மாற்ற முடியும் என்பது மிகப்பெரிய பலம். ஆக மொத்தத்தில், பல கார் ஆர்வலர்களின் ரூம் சுவற்றில் போஸ்டராக அலங்கரித்த GT-R, இந்திய சாலைகளை ஆட்சி புரியும் காலம் நெருங்கிவிட்டது.
 

-ராகுல் சிவகுரு

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ