Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுரை மீனாட்சியின் திவ்ய தரிசனத்துக்கு உதவும் ஆப்! #Pinakin

 

ப்போதாவது சுற்றுலா சென்று, அங்கு டூரிஸ்ட் கைடு இல்லாமல் கஷ்டப்பட்டதுண்டா? பிரபல சுற்றுலாத் தலங்களுக்கு சென்று, அதன் சிறப்புகளைப் பற்றி தெரிந்துகொள்ள வழியில்லாமல் வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்துத் திரும்பிய அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டது உண்டா? இந்த இரண்டு விஷயங்களையும் நம்மில் பலபேர் அனுபவித்திருப்போம் அல்லவா? இந்த சிக்கலுக்குத் தீர்வாக, டெக்னாலஜி துணைகொண்டு புதிய இலவச ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார் ஸ்ரீகாந்த் . தற்போது மதுரை மீனாட்சியம்மன் கோவில் பற்றிய சிறப்புகளை விரிவாக எடுத்துக் கூறும் வகையில் ‘பினாக்கின்’ (pinakin) என்ற ஆப்பை தனது அசூரோ டெக்னாலஜி நிறுவனத்தின் மூலம் வடிவமைத்துள்ளார். மதுரை மீனாட்சி கோவில்பற்றி விளக்க, ஒவ்வொரு அத்தியாயமாக, விரிவான ஆடியோக்கள் 'ஆப்’பில் எளிமையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் கோவில் தலவரலாறு, புராணக்கதைகள், கோவில் திறக்கும் நேரம், உள்ளே எடுத்து செல்லக் கூடியவை, கூடாதவை எல்லாம் செய்திகளாக கொடுக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஸ்ரீகாந்த், “நான் குடும்பத்துடன் ஒருமுறை வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்றிருந்தேன். நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ‘டூரிஸ்ட் கைடு’ ஒருவரை ஏற்பாடு செய்து கொள்வது வழக்கம். ஆனால் எங்களுக்கு பல இடங்களுக்கு கைடு கிடைக்கவே இல்லை. சுற்றுலாத் தலங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள நான் மிகுந்த  ஆர்வம் கொண்டிருந்தேன். ஆனால், கைடு இல்லாததால் பல இடங்களில் மிகவும் சிரமப்பட்டேன். அப்போதுதான் இந்தப் பிரச்னைக்கு டெக்னாலஜி உதவி கொண்டு ஏதாவது செய்யலாம் என யோசித்தேன். அதன் விளைவுதான் இந்த ‘பினாக்கின்’ ஆப். சிவனின் வில்லின் பெயர்தான் இந்த பினாக்கின். நாங்கள் 6 பேர் சேர்ந்து இதனை உருவாக்கினோம்.

தமிழ்நாட்டில் கோவில்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அதுவும் கலைநயத்துடன் கூடிய, பழமையான கோவில்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு. ஆனால் நமக்கு எல்லா கோவில்களைப் பற்றியும் முழுமையாகத் தெரியுமா? தெரியாது என்பதுதான் பெரும்பாலானோரின் பதில். எனவே தமிழ்நாட்டில் உள்ள கோவில்களைப்  பற்றி முழுமையாக விளக்கும் வகையில் இந்த ஆப்பை தற்போது வடிவமைத்துள்ளேன். தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் ஒரு கைடு இல்லாமலே, அந்த இடத்தைப் பற்றி முழுமையாக எடுத்துக் கூறுவதுதான். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் இரண்டிலும் இதனை பயன்படுத்த முடியும்.

கர்நாடகாவில் தசரா என்ற பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்த பண்டிகை. 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள். துர்கை அம்மன், மகிஷாசுரனை வதம் செய்த நாளை தசராவாக கொண்டாடுவதாக கர்நாடகாவில் கூறுவார்கள். ஆனால் அதே பண்டிகை,  மகாராஷ்ட்ராவில், ராமன், இராவணனை வதம் செய்ததற்காக பட்டாசு எல்லாம்  வெடித்து கோலாகலமாகக் கொண்டாடப்படும். ஒரே பண்டிகை, இருவேறு மாநிலங்களில் இரண்டு விதமாக கொண்டாடப்படுகிறது. அதே போல தீபாவளியும், இங்கு ஒரு காரணத்திற்காகவும், வட இந்தியாவில் மற்றொரு காரணத்திற்காகவும் கொண்டாடப்படுகிறது. இந்த வித்தியாசங்களுக்கும் ஏற்றவாறே இந்த ஆப்பை வடிவமைத்துள்ளேன். 

அதாவது, மதுரை மீனாட்சியம்மன் கோவில் பற்றிய செய்தி, ஆங்கிலத்தில் ஒரு மாதிரியும், தமிழில் ஒரு மாதிரியும் இருக்கும். காரணம் வெளிநாட்டவர்கள் நமது கோவில்களைப் பார்க்கும்போது, அதன் கட்டிடக்கலை சிறப்புகள் பற்றி தெரிந்துகொள்ள அதிகம் விரும்புவார்கள். நமது மக்கள் கோவில் தொடர்பான புராணங்களை அதிகம் விரும்புவார்கள். எனவே இருவருக்கும் ஏற்றவாறு, இருவேறு விதமாக ஆப்பை வடிவமைத்திருக்கிறேன். ஆப் குறித்த அறிவுப்புப் பலகைகளை கோவில்களில் வைத்துள்ளோம். அத்துடன் ஆப்பை இன்ஸ்டால் செய்வதற்கான விளக்கமும் கோவில், வாயில்களில் வைத்துள்ளோம். எனவே கோவிலுக்குள், ஒவ்வொரு இடமாக சென்று நிதானமாக ஆப் மூலம் அதுபற்றிய ஆடியோக்களைக் கேட்டு, முழுமையாக் கோவிலை சுற்றிப்பார்க்கலாம். மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரைக் குளம் சென்றால், அதுபற்றித் தெரியாதவர்களுக்கு அது வெறும் குளம்தான். ஆனால் அங்குதான் திருவள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றினார் என்பது பலபேருக்குத் தெரியாது. இப்படி கோவிலினுள் ஒவ்வொரு இடமாக விரிவாக ஆடியோவில், விளக்கியிருக்கிறோம். ஒருமுறை ஆப்பை இன்ஸ்டால் செய்துவிட்டால், பிறகு இணையவசதி தேவையில்லை.  இணையம் இல்லாமலே இதனைப் பயன்படுத்த முடியும்.

சுற்றுலா செல்பவர்களுக்கு உதவுவதற்காக எத்தனையோ ஆப்கள் இருக்கின்றன. ஆனால் மூன்று மொழிகளில் இயங்கும், டூரிஸ்ட் கைடு ஆப் ஒன்று வெளியாகியிருப்பது, இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. அதுவும் முழுமையாகக் கோவில்களுக்கு என ஒரு ஆப் இல்லவே இல்லை. இப்படி ஒரு ஆப் உருவாக்கும் திட்டம் வந்ததுமே, இந்து அறநிலையத் துறையிடம் சென்று இதுபற்றி எடுத்துக் கூறினேன். அவர்களும் தொழில்நுட்பத்தை மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால், நல்ல ஆர்வம் காட்டினர். மதுரை மீனாட்சியம்மன் கோவில், உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால் அதனை முதலில் தேர்வு செய்தேன். அந்தக் கோவிலைப் பற்றி எல்லாத் தகவல்களையும் சேகரித்து விட்டு, அதனை கோவில் நிர்வாகத்தினரிடமே காட்டி ஒப்புதல் வாங்கினோம். எனவே தகவல்கள் அனைத்தும் மிகவும் சரியானவை. இதற்காக மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகத்தினரும், கோவில் அறக்கட்டளை தலைவர் திரு.கண்ணனும் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். இனி இதன் அடுத்தகட்டமாக, மேலும் கோவில்களை இதில் சேர்ப்பேன். மீனாட்சியம்மன் கோவில் என்பது மிகவும் பெரியது. எனவே அதைப் பற்றி அனைத்துத் தகவல்களையும் ஒரே தடவையில் சொல்லிவிடவும் முடியாது. அத்துடன் ஆப்பை ஒருமுறை பயன்படுத்தி, கோவிலை சுற்றிப்பார்த்தால், அதன்பிறகு உங்களுக்கு இதில் எந்தப் புதுத் தகவல்களும் இருக்காது. எனவே கோவிலைப் பற்றி கூடுதல் தகவல்களை சேர்த்துக் கொண்டே இருப்பது அடுத்த திட்டம்” என்றார்.

- ஞா.சுதாகர்,

சு.முரளி (மாணவப் பத்திரிகையாளர்)


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close