Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தப்பில்லாம திருக்குறள் சொன்னால் பத்து ரூபா...!

கையில் மஞ்சப்பை....பை நிறைய புத்தகங்கள்...தோளில் தன் துணையான சால்வை... வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை என்ற தோற்றத்தோடு கம்பீர குரலோடு மதுரை மாவட்டம் வளையங்குளம் பகுதிகளில் சுற்றி வருகிறார்... மாணவர்கள் செல்லமாகக் கூப்பிடும் நமது திருக்குறள் தாத்தா... 70 வயதிலும் தனது தமிழ் ஆர்வத்தால் தமிழுக்காக எண்ணற்ற சமுதாயப் பணிகளைச் செய்து வருகிறார்.

வளையங்குளத்தில் கரும்பலகை அமைத்து தினமும் எழுதிட்டு வருகிறார். இரண்டு, மூன்று ஆண்டுகளாக அல்ல 17 ஆண்டுகளாக...

"என் பெயர் கிருஷ்ணன். எனக்கு சின்ன வயசுல இருந்தே பெரியார், அண்ணா, அம்பேத்கார் போன்ற புரட்சியாளர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். இவர்களைப் படிக்க இலக்கியத்தின் மீது ஆர்வம் வந்தது. ஆனா நான் பள்ளிகூடம் போய் படிக்கல. அதனால எனக்கு பள்ளி மாணவர்களை ரொம்ப பிடிக்கும். பள்ளி மாணவர்களுக்கும், மத்தவங்களுக்கும் தமிழ் ஆர்வத்தை தூண்டுவதற்கு உலகப் பொதுமறையான திருக்குறளை 1999 வருஷத்திலிருந்து இன்னைக்கு வரைக்கும் அதோ அந்தக் கரும்பலையில் எழுதறேன். பெரிய பெரிய இலக்கியங்களை கொடுக்குறதைக் காட்டிலும் இரண்டு அடிகள் இருக்கும் திருக்குறள அவங்களுக்கு போதிக்கலாம்னு முடிவுசெய்தேன். சாதாரணமாக எழுதி போட்டா யாரும் படிக்க மாட்டார்கள்..அதனால் பரிசு கொடுக்க ஆரம்பித்தேன். அப்படியாச்சும் அதைப் பார்த்து திருக்குறள் பற்றிய தெரிந்துகொள்வார்கள் என நினைத்தேன். கூலிக்கு வேலைதான் செய்யறேன்.. அதில் கிடைக்கிற சம்பளத்தில்தான் இப்படி பரிசுகள் கொடுப்பேன். "திருக்குறள் வளர்ச்சி கழகம் ஒன்றை 1999ல் துவக்கினேன். எனது ஆர்வத்தைப் பார்த்து நிறைய உறுப்பினர்கள் அந்தக் கழகத்தில் இணைந்து உதவினார்கள். அதன் மூலம் திருவள்ளுவர் தினத்தன்று போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவோம். பள்ளிகளில் என்னை தலைமையேற்று ஏதேனும் விழாக்கள் நடத்தித் தர அழைப்பார்கள். அப்படி அந்தப் பள்ளிகளுக்குச் செல்லும்போது திருக்குறள் புத்தகங்களை இலவசமாக பள்ளி மாணவர்களுக்கு கொடுப்பேன்." என்று கூறுகிறார் திருக்குறள் தாத்தா கிருஷ்ணன்.

 

திருக்குறள் தாத்தாவோடு விளையாடிக்கொண்டே அவரைச் சுற்றுகிறார்கள் மாணவர்கள். அதில் ஒரு மாணவர்,

"தினமும் பள்ளிக்கு சீக்கிரமாகவே வந்துடுவோம்... தாத்தா எழுதுனதும் குறள் விளக்கம் எழுதி, அவர் கொடுக்கிற பரிசை வாங்குவோம். அதை வகுப்புல ஃப்ரெண்ட்ஸ் காட்டுவோம். இன்னைக்கு நீ வாங்கிட்டியா நாளைக்கு நான் வாங்குவேன்னு போட்டி போட்டு திருக்குறள் படிப்போம்... பிழை இல்லாமல் குறள் சொன்னா தாத்தா பத்து ரூபாய் பரிசு தருவாங்க... அதுக்காக பள்ளிக்கூடம் பாடங்கள படிச்சதும், தினமும் ஒரு திருக்குறள் படிப்போம்... எங்களுக்கு எங்க ஊரு "திருவள்ளுவர்" இந்த தாத்தாதான். அதுனாலதான் "திருக்குறள் தாத்தா"னு தான் செல்லமா கூப்பிடுவோம்" என சொல்லி முடித்து ஒரு திருக்குறளை பிழையில்லாமல் சொல்லிக் காட்டி அசத்தினான்.

மாணவர்களை மட்டுமல்ல, பெரியவர்களை கவர்ந்திருக்கிறார் திருக்குறள் தாத்தா. வளையங்குளம் ஊர்த் தலைவர் பிச்சை, "திருக்குறள் பத்தி எங்களுக்குத் தெரியாது. கிருஷ்ணன் மூலமாதான் நாலு விஷயம் தெரிஞ்சுகிட்டேன். நானும் திருக்குறள் வளர்ச்சி குழுவில் ஒரு உறுப்பினர்தான். இந்த வயசுலயும் திருக்குறள் மேல இவருக்கு உள்ள காதல் எங்களுக்கு ஆச்சரியரியமா இருக்கு.

திருக்குறள் தாத்தாவின் பயணம் தொய்வில்லாமல் தொடரட்டும்.

- சே.சின்னதுரை

படங்கள்: வெ.வித்யா காயத்ரி
(மாணவப்பத்திரிகையாளர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ