Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த நாள்... கேர்ள்ஸ் அவனைக் கட்டிப்பிடிக்க ஆரம்பிச்ச நாள்...!

கரடி பொம்மைகள் என்றாலே குழந்தைகளுக்கு எப்போதும் ஓர் அலாதிப் பிரியம் உண்டு. பெரியவர்களும்கூட வீட்டு ஷோகேஷில் அழகுக்காக வாங்கிக் குவித்து வைத்திருப்பார்கள். அதிலும், குறிப்பாகப் பெண்களுக்கு டெடி பியர் என்றால் உயிர். யாருமின்றித் தனியாக இருக்கும் சூழல்களில் பாதுகாப்பான ஜீவனாகக் கரடி பொம்மையைக் கட்டியணைத்துக்கொள்வார்கள். அப்படி, எல்லா வீடுகளிலும் அன்பாக 'வளர்க்கப்படும்' ஒரு உயிரினமாகவே ஆகிவிட்ட டெடிபியர்களின் தினமாம் இன்று. அதனாலேயே தெரிந்தோ தெரியாமலோ பல ஆண்களின் எதிரியாகிவிட்ட அந்த அதிர்ஷ்டசாலி கரடி பொம்மைகளுக்கு ஹேப்பி பொறந்த டே சொல்லியே ஆகணும். ஆங். #HappyTeddyBearDay

முதலில், அந்தக் கரடி பொம்மைகளுக்கு 'டெடி பியர்' எனப் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

கரடி பொம்மை முதன்முதலில் அமெரிக்காவில்தான் அறிமுகம் ஆனது. அமெரிக்க அதிபராக இருந்த தியடோர் ரூஸ்வெல்ட் வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டவர். அவர் ஒருமுறை காயத்துடன் உலாவிய சின்னக் கரடிக்குட்டி ஒன்றைக் கண்டார். அதைக் கண்டதும், அவருடன் வந்தவர்கள் கரடியைச் சுடுவதற்கு வலியுறுத்தினர். ஆனால், தியடோர் ரூஸ்வெல்ட் அதைச் சுடாமல் 'பொழைச்சுப்போ'னு விட்டுவிட்டார். இந்தச் செய்தி பத்திரிகையில் கரடிக்குட்டிப் படத்துடன் வெளியாகிப் பரவியது. தியடோர் ரூஸ்வெல்ட்டுக்கு ‘டெடி’ என ஒரு செல்லப் பெயர் உண்டு. அந்த நேரத்தில் கரடியையும், தியடோர் ரூஸ்வெல்ட்டையும் சேர்த்து வரைந்த கார்ட்டூன் படத்துக்கு ‘டெடி பியர்’ எனப் பெயர் சூட்டியிருந்தனர். இதை வைத்து கல்லா கட்டலாம் என நினைத்த பொம்மை நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த கரடி பொம்மைகளுக்கு 'டெடி பியர்' எனப் பெயர் சூட்டி மிகுந்த வரவேற்பைப் பெற்றன. எப்படியெல்லாம் வராய்ங்க! 

இப்படி ஆரம்பிச்ச பொம்மைகளோட வரலாறெல்லாம் இருக்கட்டும். டெடி பியர்களை வெச்சுக்கிட்டு இந்தப் பெண்கள் செய்யும் அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. 

தூங்கும்போது பக்கத்திலேயே படுக்கவைக்க டபுள் பர்த் கட்டிலிலேதான் படுப்பேன் என அடம்பிடித்தும், தரையிலே படுத்தாலும் பக்கத்தில் ஒரு பாயைப் போட்டு அதில் பொம்மையைப் படுக்கவைத்துத் தாலாட்டுப் பாடித் தூங்கவைக்கும் அக்கப்போர்களையும் அரங்கேற்றும் இந்த கேர்ள்ஸ்களின் அழிச்சாட்டியங்கள் ரொம்பவே ஓவர்தான்.

பிறந்தநாளுக்குப் பரிசாக என்ன வேணும்னு கேட்டால் டெடி பியரைக் கேட்கும் அம்மணிகளே... எல்லா வருசமும் அதையே வாங்கி பொம்மைக் கடையா வைக்கப் போறீங்க? இல்லை மொசுமொசுனு பஞ்சு மாதிரி இருக்கிறதால தலையணையாக்கித் தலைமாட்டுக்கு வெச்சுத் தூங்குறீங்களா?

ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் போட்டோ போடும்போதும் டெடிபியரைத் தூக்கி மடியில் வெச்சுக்கிட்டே போஸ் கொடுத்திருக்கீங்களே... 'அந்தக் கரடி பொம்மை என்ன விலை'ன்னு கேட்டு யாராவது கலாய்ச்சாத் தாங்கிக்கிற அளவுக்குத் தங்கமான மனசு இருக்கா உங்களுக்கு?

டெடி பியருக்கு வாய் இருக்கிறது என்பதற்காக நீங்கள் வைக்கும் ரசத்தையும், புதினாச் சட்னியையும்கூடச் சோற்றில் பிசைந்து ஊட்டிவிட்டுக் கொடுமைப்படுத்துறீங்களே... கடுப்பாகித் துப்பிருச்சுனா என்ன பண்ணுவீங்க. யோசிங்க மக்கா!

கட்டிப்பிடிச்சுப் படுத்துக்கிறோம்னு அதை சக்கையாகப் பிழிஞ்சு, காலையில் நீங்கள் விழிப்பதற்குள் கை வேறு, கால் வேறு, கண்ணாமுழி வேறாகப் பிச்சு எடுத்துப் பாடாய்ப் படுத்துறீங்களே... உங்களுக்கே இது வன்கொடுமையாத் தெரியலை?

கடைசியா ஒண்ணு, உயிரில்லாத கரடி பொம்மையை நீங்கக் கொஞ்சிக் கொஞ்சி விளையாடுறதைப் பார்க்கிற எங்களுக்கு எவ்வளவு கடுப்பாகி, அந்தக் கரடி மேல பொறாமையாகும்னு எங்க இடத்தில் இருந்து என்னைக்காவது நினைச்சுப் பார்த்திருக்கீங்களா? பாவம்மா நாங்க!

- விக்கி

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்