Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னைக்கு மிக அருகில்...தான் இந்த பறவைகள் வசிக்கின்றன #WeekEndSpots

 

 

பறவைகள் காதலரா நீங்கள்?

இதோ இந்த இடங்கள் உங்களுக்காக தான். நம்மில் பெரும்பாலானோருக்கு பறவைகள் மேல் தனிக்காதல் இருக்கும். ஆனால் பெருகி விட்ட மக்கள் தொகை, ரியல் எஸ்டேட் வியாபாரம்,  வானை முட்டி நிற்கும் அலைபேசி டவர்கள் என பறவைகளை நம் வாழ்வியலிலிருந்து விலக்கி  விரட்டி விட்டோம். பறவைகள் என்றாலே வேடந்தாங்கல் தான் நியாபகத்துக்கு வரும். வேடந்தாங்கல் தவிர்த்து சென்னைக்கு மிக அருகாமையில் இன்னும் சில இடங்களும் உண்டு.

 

சிறுதாவூர் : 
    ஈ சி ஆர் ரோட்டில் சுமார் ஐம்பது கிலோ மீட்டர் பயணித்தால் இருக்கிறது சிறுதாவூர். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் வட்டத்தில் அமைந்துள்ள சிறுதாவூரில் இருக்கும் ஏரி, பறவைகளின் ஃபேவரைட். சிறுதாவூர் பகுதியில் மட்டும் சுமார் 70 வகையான பறவை இனங்கள் வாழ்கின்றன. இவற்றில் சில வகை பறவைகளுக்கு இது பிறந்த வீடு, மற்ரவைக்கு டூரிஸ்ட் ஸ்பாட். அவ்வபோது வந்து செல்லும்.. குறிப்பாக வானம்பாடி, புத்தர் சிட்டு,நெற்களக் குருவி, செங்கழுத்துப் பருத்து, குறுங்கால் பாம்புக் கழுகு, கதிர்குருவி, சாம்பல் கதிர்குருவி, வெண்தொண்டை மீன்கொத்தி,  தூக்கணாங்குருவி, சிறு நீல மீன்கொத்தி போன்ற பறவை இனங்களை எளிதாக கண்டு ரசிக்க முடியும்.

 

 

 

பள்ளிக்கரணை : 
     வேளச்சேரியின் ட்கசின் பிரதர் பள்ளிக்கரணை.  சுற்றி சுற்றி ஐ டி நிறுவனங்கள் சென்னையின் கழிவுகள் என குழப்பமான அடையாளம் பெற்றிருக்கிறது பள்ளிக்கரணை. தமிழகத்தின் முக்கியமான சதுப்பு நிலப் பகுதிகளில் ஒன்று. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் நன்னீர் சதுப்பு நிலமாகும். மொத்தம் 5000 ஹெக்டர் அளவுக்கு பறந்து விரிந்திருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தற்பொழுது மிஞ்சியிருப்பது 500 ஹெக்டர் மட்டுமே. முக்குளிப்பான், வாத்துகள், நீளவால் இலைக்கோழிகள், நாமக்கோழிகள், கூழைக்கடா, சாம்பல் கதிர்குருவி, சீழ்க்கைச் சிறகி போன்ற அரியவகை பறவையினங்களை பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் காண முடியும். தனியாக செல்வதை விட குழுவாகவும் பறவைகளை பற்றி நன்றாக தெரிந்த நபருடனும் செல்வது நல்ல அனுபவத்தை தரும்.

 

 

 



முதலியார் குப்பம் : 
        சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் கல்பாக்கத்தை அடுத்து சிறிது நேர பயணத்தில் அமைந்திருக்கிறது முதலியார் குப்பம்.  மணற்திட்டுகள், உப்பளங்கள் போன்றவற்றை கொண்ட முதலியார் குப்பம் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம். பெரும் பூநாரைகள், கிளி மூக்குநாரைகள், ஆலாக்கள், வாத்து வகைகள் போன்றவற்றை இயல்பாக  காண இயலும். மேலும் முக்குளிப்பான், கூழைக்கடா, சிறு நீல மீன்கொத்தி, கார்வெண் மீன்கொத்தி, வெண்தொண்டை மீன்கொத்தி, சிவப்பு மூக்கு ஆள்காட்டி, குளத்து கொக்கு, சாதா உள்ளான் போன்ற பறவையினங்கள் முதலியார் குப்பம் காயலை இருப்பிடமாக கொண்டுள்ளன.   

 

 

 

செம்பரம்பாக்கம் ஏரி : 
     கடந்த வருடம் சென்னை வெள்ளத்தை நினைவு வைத்திருக்கும் அனைவரும் செம்பரம்பாக்கம் ஏரியை பற்றி நன்கு அறிந்து வைத்திருப்போம். செம்பரம்பாக்கம் ஏரியின் இன்னொரு அடையாளம் பல  அரியவகை பறவை இனங்களின் இருப்பிடம் என்பதாகும்.  சென்னையிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர்  தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்தே அடையாறு நதியும் உருவாகி கடலில் கலக்கிறது. மொத்தம் 60 வகை பறவையினங்கள் செம்பரம்பாக்கம் ஏரியை இருப்பிடமாக கொண்டுள்ளன. சீழ்க்கை வாத்து, வல்லூறு, குள்ளத்தாரா, செங்கழுத்து வல்லூறு, செந்நாரை, சாம்பல் தகைவிலான், புதர் சிட்டு, வைரி, இரட்டை வால் குருவி, வானம்பாடி, நெற்களக்குருவி போன்ற பறவை இனங்கள் செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் வசித்து வருகின்றன. 

 

 


விடுமுறை நாட்களில், ஓய்வு நேரங்களில் ஷாப்பிங், திரைப்படம் பார்க்க அழைத்து செல்வது பெரிய உணவகங்களுக்குசெல்வது என வழக்கமாக வைத்திருப்போம். அதைத் தாண்டி இது போன்ற இடங்களுக்கு சின்னதாக ஒரு ட்ரிப் அடித்து வருவது இயற்கையோடு இணைந்து வாழும் புத்துணர்ச்சியை தருவதோடு. நம் நண்பர்களையும் குழந்தைகளையும் கூட பல்லுயிர் காதலர்களாக்கும்...! 

- க. பாலாஜி

எடிட்டர் சாய்ஸ்