Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்களுக்கு இப்பொழுது மழையில் நனைய ஆசையா? #GIF

இந்த கவிதைகளும் இந்த படங்களும் மழையில் நனைந்த  சிலிர்ப்பையும், மழை நேர தேநீரின் கதகதப்பையும்  நிச்சயம் கொடுக்கும்..., 

 

கொட்டும் மழையும் குட்டிப் பெண்ணும்...

 

குட்டிப் பெண் 

பாட்டியிடம் கேட்டாள் 

'மழை எப்படி வருது பாட்டி?'

'அதுவா... வானத்தில் நின்னு 

கடவுள் குளிக்கிறாரு அதான்'

என்றாள் பதிலுக்குப் பாட்டி.

குட்டிப் பெண் சிரித்தாள் 

'ஒரு ஆளு இவ்ளவு தண்ணியில குளிச்சா

ஊர்ல தண்ணிப் பஞ்சம் வராம 

வேறென்ன செய்யும்?'

- பாஸ்கோ பெர்னாண்டஸ் 

 

 

எல்லோருக்குமாய் மழை 

அந்த நிழற்குடையின் கீழ்

மழையில் நனைந்த அனைவரும் 

நெருக்கிக்கொண்டு நிற்கிறோம் 

மழைவிட்டுக் கலைந்த போதுதான்

கவனித்தேன்,

என் இடப்புறம் நின்றிருந்தவர் கையில் 

மடிக்கணினி இருந்தது 

வலப்புறம் நின்றிருந்தவர் கையில் 

திருவோடு இருந்தது 

என் கையில் 

மழை இருந்தது!

- ஜனா கே.  

 

குடை 

கொடிய மழை நாள் ஒன்றில் 

உள்ளாடைகளின் 

குளிர்ச்சி தாளாமல் 

அதிக நேரம் 

குடை குறித்துப் பேசியிருப்போம் 

 

கைக்கு அடக்கமான குடை 

கை தவறிவிடுகிறது.

 

அளவில் பெரிய குடை 

மறந்துவைத்துவிட்டாலும் 

கிடைத்துவிடுகிறது.

 

பத்துப் பதினைந்து நாட்கள் 

அடித்த சாரல் மழையில் 

குடைகளின் விலை மலிவானது.

 

நகரப் பகுதிகளில் 

மழை நாட்களில்கூட 

சுடிதாருக்குப் பொருத்தமாய் 

குடை பிடித்தபடி போகிறார்கள் 

சில பெண்கள்.

 

குளிரோ,

மழையோ,

வெயிலோ,

வெளியில் கிளம்பினால் 

குடை கொண்டுதான் 

போவார்

கருப்பான எங்கள் 

ஆங்கில ஆசிரியை!

- நலங்கிள்ளி  

 

 

நனையாத மழை 

 

தொலைக்காட்சிப் படமொன்றில் 

பெய்யத் துவங்கிய மழைக்கு 

குடை விரிக்க துவங்கினாள் 

சிறுமி அதிஸ்யா.

பிறகு சலிப்புற்று 

நனையத் துவங்கினாள்.

வீட்டிற்குள் ஏன் 

ஈரமாகவில்லையென 

நச்சரிக்க தொடங்கினாள்.

உள்ளே பெய்யாத 

அம் மழை 

இறங்கத் துவங்கிற்று

அவள் கண்களின் வழியே!

- க.அம்சப்பிரியா

 

 

கோப்பை முழுதும் மழை 

 

உனக்கு நிறைய 

கேள்விகள் இருந்தன 

நிறைய சமாளிப்புகள் 

நிறைய குற்றச்சாட்டுகள் 

நிறைய கோபங்கள் 

நீ கை அசைத்துப் போகும்போது 

என்னிடம் ஒரு காதல் இருந்தது 

கொஞ்சம் தேநீர் இருந்தது 

நிறைய மழை இருந்தது!

- லதாமகன் 

 

 

 

 

கடலாகும் மழை 

வாசலில் 

தேங்கிய 

மழை நீரை 

என்ன செய்தும் 

வெளியேற்ற முடியவில்லை.

ஒரே ஒரு 

கப்பல் செய்து 

அதைக் 

கடலாக்கியது 

குழந்தை!

- ந.சிவநேசன் 

 

 

மழை இரவு 

 

பிடிவாதம் மிகுந்த 

பூனைக் குட்டி 

இடை விடாத மழை இரவில்...

 

எங்கோ பதுங்கியபடி 

குறை சொல்லிக்கொண்டே இருக்கிறது 

 

இந்த இரவை...

இந்த மழையை...

இந்த மனிதர்களை!

- இளங்கோ 

 

 

 

   தொகுப்பு : க. பாலாஜி 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ