Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடராத காதல்களும் தொடரும் கொலைகளும்

சமீபகாலமாக பத்திரிகைகளில் அடிக்கடி வரும் செய்திகளில் மிக முக்கியமான ஒன்று காதல் தோல்வியும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் கொலைகளும், தற்கொலைகளும், கோர நிகழ்வுகளும்தான். வாழும் உலகில் காதல்கள் ஏன் தோல்வி அடைகின்றன. அதனைத் தொடர்ந்து ஏன் இப்படிப்பட்ட அதிர்ச்சி சம்பவங்களும் நடக்கின்றன?

பெரும்பாலான இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் காதலைப் பற்றிய சரியான கண்ணோட்டமோ தெளிவான சிந்தனையோ இருப்பதில்லை. பருவவயதில் எழும் ஒரு உத்வேக உணர்வுக்கு காதல் என பெயர் சூட்டி, அது நிறைவேறாது போனால், காதலையும் கொலைசெய்து, தாங்களும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நான்கைந்து முறை ஒருவரை ஒருவர் பார்ப்பதும், அப்புறம் சிரிப்பதும், கடிதம் கொடுப்பதும் காதலாகி விடுமா? இதெல்லாம் சாதாரண சம்பவங்கள், இவையே காதலாகாது? பிறகு எதுதான் காதல்?

ரகசிய கனவு

50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பத்து பேரில் ஒருவர் காதல் வயப்பட்டு திருமண வாழ்வையோ அல்லது காதலில் மனமுறிவையோ எதிர்கொள்வார்கள். அப்படி நிறைவேறாமல் போனாலும் தான் காதலித்த ஆண் அல்லது பெண் நன்றாக வாழட்டுமென விட்டுக்கொடுத்து வாழ்ந்து விட்டுப்போவார்கள். ஆனால் இன்றோ நடைமுறையில் எல்லா இளைஞர்களும் காதல் எனும் பாதையைக் கடந்தே ஆக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

எல்லோரும் காதல் செய்துதான் ஆகவேண்டுமா? சும்மா இருக்க முடியாதா? என்ற கேள்வியுடன் மனநல நிபுணர் டாக்டர் அசோகனிடம் கேட்டோம்.

மனித மனம் விசித்திரமான ஒன்று. என்னதான் எல்லா விஷயங்களையும் தனக்குத்தானே சரிபார்த்து செய்தாலும், மற்ற்வர்களிடமிருந்து ஒரு அங்கீகாரத்தை ஒரு பாராட்டுச் சான்றிதழை

வாங்க மனம் துடிக்கும். அடுத்தவர்கள் நம்மைப் புகழும்போது ஒரு சந்தோஷம் நம் மனதில் ஏற்படும். இதை நார்சிஸம் என்று சொல்வார்கள். அட்லோஷன்ட் பருவத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சமூகச்சூழல் காரணமாக ஒரு வித குழப்பமான மன நிலை உருவாகுவது இயல்பான ஒரு விஷயம்தான். குறிப்பாக மாற்றுப் பாலினத்தினரின் மீது ஒரு வித ஈர்ப்பு நிச்சயம் ஏற்படும். அவர்கள் தன்னை புகழ்ந்து பேசும்போது தன்னை ரசிக்கும்போது ஒருவித பரவச நிலைகூட நிகழும்.

வீட்டில் உள்ளவர்கள் நமது செயல்கள் குறித்து விமர்சனம் செய்தாலோ குறை கூறினாலோ இனம்புரியாத ஒரு கோபம் ஏற்படும். அதற்கு நேர்மாறாக தன் கருத்துக்களை ஆதரிப்பவர்கள், பாராட்டுபவர்கள் மீது ஒரு வித ஈடுபாடும் ஏற்படும். இந்த இடம்தான் ஒருவர் சுதாரிக்க வேண்டும். மனம் தன் போக்கில் போவதைக் கட்டுப்படுத்தி தான், தனது குடும்பம், தனது லட்சியம் இவற்றுக்கு தனது காதல் எந்த அளவு உதவிகரமாக இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்து செயல்படுவது நல்லது'' என்றவரிடம்,

'காதலில் காமம் உண்டு... காமத்தில் காதல் இல்லை' என்கிறார்களே அப்படியென்றால் காதலுக்கும் காமத்துக்கும் உள்ள தொடர்புதான் என்ன என்றோம். 'இதெல்லாம் வார்த்தைஜாலத்துக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். உளவியல்படி காமத்துக்கான நுழைவாயில்தான் காதால். வடிகாலற்ற மனம் காமத்தை எவரிடமாவது தீர்த்துக்கொள்ள அலைகிறது. இதனால், முறைதவறிய நெறிகெட்ட செயலில் இறங்கிவிடுகிறது. இந்த மனநிலைக்கு ஒருவர் போய்விட்டால் வயது வித்தியாசமெல்லாம் ஒரு பொருட்டாகவே இருக்காது. இன்னும் சொல்லப்போனால் கால நேரம் வரப்போகும் ஆபத்துக்கள் பற்றிகூட சிந்திக்க மாட்டார்கள். எந்தக் காதல்தான் சரி...என்று நாம் கேட்டதற்கு, காதலில் நல்ல காதல் கள்ளக்காதல் என்பதெல்லாம் கிடையாது. man is a social animal என்று சொல்வார்கள்.

ஒவ்வொருவருக்கும் தனிமனித ஒழுக்கம், குடும்ப ஒழுக்கம், சமூக ஒழுக்கம் என்று இருக்கிறது. இவற்றை ஒருவர் கடைப்பிடித்து வாழ்வது மற்றவர்களை விட அவருக்குத்தான் நல்லது. பொதுவாக காதல் வெற்றியடைய வேண்டுமென்றால் தற்போதுள்ள நிலையில் நல்ல படிப்பு நல்ல வேலையென பொருளாதார ரீதியாக இருவருமே தன்னிறைவு பெற்றவர்களாக சொந்தக்காலில் நிற்பவர்களாக இருந்தால் பெரும்பாலும் சக்ஸஸ்தான். சமூகமும் அவர்களை ஏற்கும். அதை விடுத்து அம்மா உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டு ஐஸ்வர்யா ராய் மாதிரி பொண்ணு வேணும் என கனவுகண்டால் எப்படி நிறைவேறும். எல்லா தடைகளையும் தாண்டி கல்யாணம் செய்து கொண்டாலும், பரஸ்பர புரிந்து கொள்ளல் சுயக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். ஏனென்றால், இரண்டாவது காதல் என்பது இல்லாமல் போகும் என்பதற்கெல்லாம் எந்த உத்தரவாதமும் கிடையாது. மனக்கட்டுப்பாடும் சுய ஒழுக்கமும்தான் அவற்றைத் தீர்மானிக்கும்.

அதேப்போல் காதலிக்கும் போது கவனிக்கவேண்டிய விஷயங்கள்

* ஒருவேளை காதலிக்கத் தொடங்கி விட்டால் அதற்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் அங்கே ஒரு எதிர்பார்ப்பு உங்களை அறியாமலே உங்களுக்குள் ஏற்படத்தொடங்கிவிடும்.

* காதலிக்கிறவர், உங்களிடம் எதையுமே மறைப்பதில்லை என்று நினைத்து ஏமாறாதீர்கள். மறைக்க வேண்டியதை மறைக்காமல் இருக்கிற எல்லாரும், மறைக்கக் கூடாததை மறைக்காதவர்கள் அல்ல, என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

* நீங்கள் காதலிக்கிறவரிடம் எதையுமே மறைக்கக் கூடாது என்றெண்ணி ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். தேவையானதை பேசுங்கள். தேவையற்ற வீண்கற்பனைகளை வளர்க்காதீர்கள். இயல்பாகவும் உங்கள் தனித்தன்மையுடனும் இருங்கள்.

* காதல் தெய்வீகமானதோ, புனிதமானதோ அல்ல. எல்லா உணர்வுகளையும் போல அதுவும் ஒரு உணர்வு அதை முறையாகவும், தகுந்த பரஸ்பர மரியாதையும் அளித்து அணூகுங்கள். .

* நெருக்கமாகப் பழகும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பரிசுத்தமான நட்பைத் தவிர வேறொன்றுமில்லை என்பதையெல்லாம் முழுமையாக நம்பாதீர்கள். உங்களைப் போலவே எதிர் பாலினரும் இருப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

* காதலித்துக் கல்யாணம் செய்த எல்லாருக்குமே இரண்டாவது காதல் வரலாம் வராமலும் போகலாம். திருமணத்துக்கு முன்பே பரஸ்பரம் ஒருவர்மேல் ஒருவர் வைத்துக்கொள்ளும் நம்பிக்கையும் ஒப்பந்தமும்தான் காதல் என்று கூறுகிறார்.


 

கனவுமனிதர்களாக காதல் வானில் பறந்து திரிபவர்கள் யதார்த்தமான நடைமுறை பிரச்னைகள் எனும் பூமிக்கு வரும் போதுதான் தரையில் கிடக்கும் முட்களையும் கற்களையும் கவனிக்க ஆரம்பிக்கிறார்கள். கண்மூடித்தனமாக ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்துகொள்ளாமல், வரும் காதலில்தான் பிரச்னையே உருவாகின்றது. புறத்தோற்றம், முகலட்சணம், இவற்றை வைத்து ஒரு ஆணையோ, பெண்ணையோ பிம்பமாக்கி மனதில் வரைய தொடங்கினால், பெரும்பாலும், அவை தோல்வியில்தான் முடியும். அந்தப் பெண்ணின் அல்லது ஆணின் குடும்ப சூழ்நிலை, விருப்பு வெறுப்பு. வாழ்க்கையைப் பற்றிய அவர்களது கண்ணோட்டம், எதிர்பார்ப்பு, சிந்தனைகள் இவற்றைப் பற்றியும் காதல் வாழ்வில் களித்துக்கிடப்போர் சிந்திப்பது நல்லது..

தயங்கக் கூடாது

உங்களின் லைஃப் பார்ட்னர் நீங்கள் விரும்புகிற எதிர்பார்க்கிற தகுதியுடையவராக இருந்தால் உங்களின் பெற்றோரிடம், உங்களின் நிலையை எடுத்துக்கூற தயங்கக் கூடாது. பெற்றோர்களும் அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்கள் உளபாங்குக்கு ஏற்ப இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண முயல வேண்டும். ஆனால், நடைமுறையில் பெரும்பாலானா தாய், தந்தையர், அண்ணன்கள், ஏதோ இதுவரை நடக்கக் கூடாத சம்பவம் நடந்தது போலவும், கொலைக் குற்றத்தை தங்கள் பெண் செய்து விட்டது போலவும் வானத்துக்கும் பூமிக்குமாக குதிப்பது ஏன் என்று புரிவதில்லை. இதனால் எந்தவிதப் பயனும் இல்லை இது பிரச்னையை மேலும் சிக்கல் உள்ளதாகவே ஆக்குகிறது.

என்ன தவறு இருக்க முடியும்?

ஒரு பெண் தனக்கு, 'இந்த புடவை வேணும். அந்த சுடிதார் வேணும்' என உரிமையோடு தன் தந்தையைக் கேட்பது போல், 'இவரை எனக்கு பிடித்திருக்கிறது. இவர் எனக்கு வேண்டும்' என கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும்? தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் அறிவுப்பூர்வமான சுதந்திரத்தை பெற்றோர்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் பெரும் பாலானா பெண்கள் சுதந்திரத்தை பயன்படுத்துகிறார்களே தவிர, அறிவுப்பூர்வமாக என்பதை மறந்து விடுகின்றனர்.

கண் மூடித்தனமாக, 'ஒருவரையே திருமணம் செய்து கொள்வேன்' என்று கூறுவது எந்த அளவு தவறானதோ அந்த அளவு தவறானது, தன் தந்தை சொன்னார். தாய் சொன்னார் அக்கா சொன்னார் என்பதற்காக, கட்டாயப்படுத்தியதால், 'திருமணம் செய்து கொண்டேன்' என்பதும் தவறுதான்.

இளம்பிராய லட்சியங்கள்

காதல் தோல்வியில் முடிந்ததும் அவள் கிடைக்கவில்லையே என புலம்புவது, பேனாவும் பேப்பருமாக கவிதை பாடித் திரிவது, என்பதெல்லாம் போன தலைமுறையினரின் காதலாகப் போய்விட்டது. இப்போதெல்லாம் வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனப் போய், தங்கள் இளம்பிராய லட்சியங்கள் திட்டங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு தீ வைத்துக்கொள்கிறார்கள்.


 

திருத்திக்கொள்ள முடியாத தவறு

இவற்றையும் மீறி ஒருவரை ஒருவர் நேசித்து, வாழ்விலும் இணைய முடிவுசெய்தால் குடும்பம் - சமூகம் ஆகியவற்றில் உள்ள பிரச்னைகளை அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. சொந்த ரத்த பந்தங்கள் தங்களுக்கு எதிராக கிளம்பும் போது தன்னை அழித்துக் கொள்ள துணியக் கூடாது. சேர்ந்து வாழ வேண்டும் என்பது சரி, இல்லா விட்டால், 'சேர்ந்து சாக வேண்டும்' என்பது முற்றிலும் தவறானது. மனிதன் திருத்திக் கொள்ள முடியாத தவறு தற்கொலை.

காதலை வாழ வைத்து விட்டு நாம் சாவோம் என்கிறார்களே காதல் எப்போதாவது, 'என்னை வாழவையுங்கள் உங்கள் உயிரை தியாகம் செய்தாவது என்னை வாழ வையுங்கள்' என்று கேட்டு கொண்டதா?

புதிய பார்வையில் உலகை நோக்குங்கள்!

லைலா மஜ்னு என செத்து போன காதலர்களை உயர்த்திப் பேசுவது கூட இது போன்ற செயல்களின் அடித்தளமான ஒரு காரணமாக இருக்கலாம். நிறைவேறாத காதலுக்காக சாவது முட்டாள்களின் சொர்க்கம். வாழ துணிவின்றி இறந்து போன காதலர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் பைத்தியக்காரத்தனத்துக்கு முடிவு கட்டுவோம். புதிய பார்வையில் உலகை நோக்குவோம்.

- எஸ்.கதிரேசன்

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ