Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இசையாய் என்றும் நிலைத்திருக்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி எனும் சகாப்தம்!

'காற்றினிலே வரும் கீதம்'...கண்களால் பக்த மீராவைக் காணாதவர்களுக்குள் கூட இன்றும் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு கானம் இது. அந்தக் காந்தக் குரல், ‘குறையொன்றும் இல்லைக் கண்ணா’ என்று உருக ஆரம்பித்தால் போதும், உள்ளுக்குள் இருக்கும் அத்தனை சுமைகளும் அடுத்த நொடி கரைந்து, வெளியோடிவிடும்.

காட்டு மிருகங்களையும் கட்டிப் போட்டுவிடும் கானக் குரலுக்குச் சொந்தக்காரிதான் இன்று உலகமே கொண்டாடும் ’இசை அரசி’ திருமதி.எம்.எஸ்.சுப்புலட்சுமி.... மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. அந்த இசைச் சகாப்தத்திற்கு இது நூற்றாண்டு கொண்டாடும் தருணம். எம்.எஸ் அம்மாவிற்கு அப்படி ஒரு குரல்வளம்; யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் வெளியில் வரமுடியாத இசைச் சாகரத்தில் எல்லோரையும் கட்டிப் போடும் குயிலின் குரல்.

கம்பீரமும், மிடுக்கும், இசை நுணுக்கங்களும் நிறைந்த அந்தக் குரல்தான் அவரை ஐ.நா.சபை வரையில் கொண்டு சேர்த்தது. 1966 ஆம் ஆண்டில் ஐ.நா.சபையில் பாடி உலகப் புகழ் பெற்றார் எம்.எஸ். தன்னுடைய 10வது வயதிலேயே, இசைத்தட்டில் பாடும் பெருமையைப் பெற்றவர். அவரைப் பற்றிய சில மறக்க முடியாத நினைவுகள் இங்கே...

* 1916ல் மதுரை சண்முகவடிவிற்கும், சுப்ரமண்ய ஐயருக்கும் மகளாகப் பிறந்தவர் சுப்புலட்சுமி. ’கல்கி’ டி.சதாசிவம் அவர்களை மணம் புரிந்து கொண்டார் எம்.எஸ்.சுப்புலட்சுமி.

* சென்னை, திருநீர்மலையில் உள்ள கோவிலில் 10.6.1940 அன்று எளிமையாக நடைபெற்றது ‘கல்கி’ சதாசிவம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் திருமணம். ஒருசில நண்பர்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த கல்யாணத்துக்கு ஆன மொத்த செலவு 250 ரூபாய்.

* ’சாவித்திரி’ திரைப்படத்தில் திருமணத்திற்கு பிறகு நடிக்கச் சம்மதித்திருந்த எம்.எஸ்க்கு கொடுக்கப்பட்ட வேடம் ‘நாரதர்’. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட அக்காலகட்டத்திலேயே ஒரு ஆண் வேடமிட்டு நடித்து எல்லையில்லாப் புகழ் பெற்றார். ‘கல்கி’ இதழ் ஆரம்பிக்க உறுதுணையாக நின்றது அந்தப் படத்திற்கு கிடைத்த நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம்.

* ’மிருதங்க ஜாம்பவான்’ புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை எம்.எஸ்ஸின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். 1935ல் நடைபெற்ற தட்சிணாமூர்த்தி அவர்களின் மணிவிழாவில் எம்.எஸ்ஸின் கச்சேரி நடைபெற்றது.

* 1946ம் ஆண்டில் வெளியான ‘மீரா’ திரைப்படத்தில் பக்த மீராவாக நடித்தார் எம்.எஸ். அப்படத்தில் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பாடல்கள்தான் ‘காற்றினிலே வரும் கீதம்’, ’கிரிதர கோபாலா’ ஆகிய பாடல்கள். அவை இரண்டுமே இசையரசியின் கீரிடத்தில் இன்னும் இரண்டு வைரக்கற்கள்.

*திருப்பதி தேவஸ்தானத்தின் வேண்டுகோளின் பேரில் எம்.எஸ் பாடித்தந்த ‘வெங்கடேச சுப்ரபாதம்’தான் இன்று அகிலமெங்கும் பல வீடுகளிலும், ஆலயங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

*’குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா’ இந்தப் பாடலை எழுதியவர் ராஜாஜி. இன்று எத்தனையோ பேர் குரலில் அந்தப் பாடல் ஒலிக்கக் கேட்டாலும், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரல் மட்டுமே அந்தப் பாடலுக்கு இன்றும் அடையாளம்.

*‘செப்பு மொழி பதினெட்டுடையாள்...எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என்ற பாரதியாரின் வரிகளுக்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி, பெரும்பான்மையான இந்திய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.

*1974ம் ஆண்டில், ‘ஆசியாவின் நோபல் பரிசு’ என்றழைக்கப்படும் ‘மகசேசே விருது’ பெற்றார் சுப்புலட்சுமி.

* இதையெல்லாம் விடப் பெருமையான விஷயம், எம்.எஸ். என்பது அவருடைய தந்தையாரின் பெயரைக் குறிப்பதல்ல. மதுரை சண்முகவடிவு என்று அவருடைய அம்மாவின் முதல் எழுத்துக்கள் அவை.

* 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் சதாசிவம் மரணம் அடைந்தார். அதன்பிறகு எம்.எஸ். கச்சேரிகள் செய்வதை நிறுத்திக்கொண்டார்.

* 2002ம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடமி இவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கியது. உடல்நல குறைவால் அவ்விருதை எம்.எஸ். நேரே சென்று பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள், எம்.எஸ் அவர்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று விருதை அளித்து கெளரவப்படுத்தினார்.

* இசை நதியாய், உலகங்கெங்கும் பரவி ஓடிய இசையரசியின் வீடு, அவரது நினைவாக மதுரையில் இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் முகப்பில் அமைந்திருக்கும் வீணை வடிவம், காலங்காலமாய் மீட்டப்பட்டுக் கொண்டிருக்கும் எம்.எஸ்.சுப்புலட்சுயின் நினைவு ராகங்களை இசைத்துக் கொண்டே இருக்கிறது...அந்த சகாப்தம் ,இவ்வுலகில் இசை உள்ள வரையில் தொடரும்!

-பா.விஜயலட்சுமி

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ