Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அணிலும் முயலும் எங்க டீச்சர்ஸ்!

 

அணில் என்னோட டீச்சர்; முயல் இவனோட டீச்சர் என இரண்டு மாணவர்கள் பேசிக்கொண்ட இடம் கோவை, சலீம் அலி  பறவை மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில். குளு குளுவென காற்று வீச, பறவைகள் சத்தமும் அந்த இடத்துக்கு அழகுக்கு மேல் அழகு சேர்த்தது. அங்கு வந்த பள்ளி மாணவர்களில் இருவர் பேசிக்கொண்டதுதான் அது. அணில் எப்படி ஆசிரியராக முடியும் என்ற கேள்வி வருகிறது அல்லவா?
 
"குழந்தைகள், நான்கு சுவர்களுக்குள் அடைத்துவைத்து சொல்லிக்கொடுக்கும் பாடங்களை விட, இயற்கையைப் பார்த்து தானாகவே கற்றுக்கொள்வதையே அதிகம் விரும்புகிறார்கள். அப்படி செய்யும்போது அணிலும் மானும் மரங்களும் செடிகளும்கூட அவர்களுக்கு டீச்சர்ஸ்தான். இந்த முயற்சிக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் முயற்சிக்க வேண்டும்" என்கிறார்,  இந்த மையத்தின் பிரின்ஸிபல் சயின்டிஸ்ட் ப்ரமோத்.

புத்தகம், கம்ப்யூட்டர், டி.வி என வந்த பிறகு, முக்கால்வாசி விஷயங்கள் குழந்தைகளுக்குத் தெரியவில்லை. இயற்கைச் சூழலோடு ஒன்றி, அதை ஊன்றிக் கவனித்தால்தான் படைப்பாற்றல்  வளரும்.  பள்ளிக்கூடம், வீடு, டியூஷன் எனத் தினம் தினம் ஒரே வட்டத்துக்குள் சுற்றும் குழந்தைகளை இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லவேண்டும். அங்கே, அவர்கள்  புதிய உலகத்துக்குள் சிட்டுக்குருவியாய் சிறகடிப்பதைக் காணலாம். அவர்களின் உற்சாகத்துக்கு அளவே இருக்காது. அவர்களின் கேள்விகள் எதுவானாலும் பெற்றோர்கள் பொறுமையாகப் பதில் சொல்லவேண்டும். அதனால் இன்னும் உற்சாகம் அடைவார்கள். பதில்கள் கிடைக்கக் கிடைக்க நிறையத் தெரிந்துகொண்டோம் என்கிற சந்தோஷம், தூய்மையான காற்று ஆகியவை, நல்ல உணர்வுகளை ஊட்டும். இந்த அனுபவத்தைத் தன் பள்ளிக்கூட நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளும்போது, அவர்களும் சந்தோஷப்படுவார்கள்.

இன்றைய குழந்தைகளுக்கு இயற்கையின் தொடர்புகள் மிகக் குறைவாக உள்ளது. அதனால், சிந்திக்கும் ஆற்றலும் குறைகிறது. நம்மைச் சுற்றியிருக்கும் இயற்கையைப் பார்த்து, ரசித்து, பறவைகளோடும், பட்டாம்பூச்சிகளோடும், பூக்களோடும் பேசி, அவற்றை நேசிக்க வேண்டும். பெற்றோர்கள், கற்பனை உலகத்தைவிட்டு நிஜ உலகத்துக்குள் குழந்தைகளைக் கொண்டுவர வேண்டும். நிஜ உலகத்தின் உண்மைகளை அனுபவித்துப் படிக்கச் சொல்ல வேண்டும். தோட்டம் வளர்த்தல், குருவிகளைப் பாதுகாப்போடு வளர்த்தல் போன்ற வேலைகளைக் கொடுக்கவேண்டும்.

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு வீட்டில் வளர்க்கும் நாய், பூனை, கோழி ஆகியவற்றின் இயல்புகளை, அவை எழுப்பும் ஒலிகளை, அவற்றின் உணர்வுகளைப் பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டும். சேவல் கூவுவதையும், ஓர் இரை கிடைத்தால், தன் இனத்தையே தின்ன அழைக்கும் அன்பையும்  சொல்லிக்கொடுக்கலாம். அணில்களின் கீச்சிடல் ஒலி,   கிளைகளில் தாவும் அணிலின் வால் என எண்ணற்ற அழகு காட்சிகளை அறிமுகப் படுத்த வேண்டும். அணில் பழத்தின் கொட்டைகளைச் சேமித்துவைக்கும் பழக்கமுடையது. அணில் கடித்த பழங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்.

பெரும்பாலான பெற்றோர்கள் தம் குழந்தையை அங்கு செல்லக்கூடாது, இங்கு போகக்கூடாது எனப் பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த உலகத்தில் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இறைச்சல் மிகுந்த இடங்களிலேயே குழந்தைகளை வைத்திருக்கிறோம். அதனால் எந்த இடத்திலும் குழந்தைகளால் இருக்க முடியும். உங்களின் குழந்தைகளுக்கு இயற்கை எனும் அற்புத உலகத்தை அறிமுகப் படுத்துங்கள். அதை விட பெரிய பரிசை உங்களால் தரமுடியாது.

-கே.ஆர்.ராஜமாணிக்கம்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ