Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காதல், கல்யாணம், காலேஜ்ல நமக்கு ஏன் இப்படிலாம் நடக்கல? #சினிமா vs ரியாலிட்டி

சில சினிமாக் காட்சிகளைத் திரையில் பார்க்கும்போது கண்கள் விரியும் அளவிற்கு கலர்ஃபுல்லாக, நெஞ்சை நக்கும் அளவிற்கு நெகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் படம் முடிந்தபின் யோசித்துப் பார்த்தால் 'இதெல்லாம் நிஜத்தில் நமக்கு நடக்கவே இல்லையே! ஒருவேளை நம்ம வாழ்க்கையில் மட்டும்தான் நடக்கலியோ?' என்றெல்லாம் சிறுமூளை அழுது புலம்பும். அப்படியான சில 'ஏன் எனக்கு இது நடக்கலை?' டைப் சீன்கள் இவை.

காலேஜ் ஃபேர்வெல்:

சினிமாவில்:

மொத்த காலேஜும் மெழுகுவத்தி ஏந்திக்கொண்டு இசையமைப்பாளர்கள் போல இடம் வலமாக கையசைக்கும். ஸ்லாம் புக்கில் நம்மைப் பற்றிய நல்ல விஷயங்களை எழுதி கையெழுத்துப் போட்டுத் தருவார்கள். வருஷாவருஷம் இதே மாசம், இதே தேதி உலகத்தில் எங்கே இருந்தாலும் நாம திரும்ப மீட் பண்ணணும்' எனக் கும்பலாய் சத்தியம் வாங்குவார்கள். அதன்படியே சந்திக்கவும் செய்வார்கள். மிஸ் யூ, லவ் யூ என்றெல்லாம் கண்களில் நீர் வழியப் பிரிவார்கள். 

ரியாலிட்டி:

கடைசி நாள் உட்கார்ந்து 'அந்தக் காலத்துல' என ஒப்பாரி வைக்கும் சீனே கிடையாது. ஸ்லாம் புக்கிற்கு எல்லாம் வேலையே வைக்காமல் ஆளுக்கு ஒரு வாட்ஸ் அப் குரூப் தொடங்கி படுத்துவார்கள். காலேஜ் டூரே கும்பலாக போக முடியாத கிளாஸில் கெட் டு கெதர் மட்டும் நடந்துவிடுமா என்ன? நோ சான்ஸ். மிஸ் யூ எல்லாம் சொன்னால், 'ஏன் இத்தனை நாள் என் உயிரை வாங்குனது பத்தாதா?' என்றுதான் மனசாட்சி கேட்கும். 'ஆளை விடுங்க சாமி! இனிமே இவனுங்க கண்ணுலயே படக் கூடாது பைரவா' என தலை தெறிக்க ஓடத்தான் தோன்றும்.

கல்யாண கலாட்டா:

சினிமாவில்:

எந்தப் பக்கம் திரும்பினாலும் தேவதைகள் கண்ணில் படுவார்கள். விசாரித்தால் முக்கால்வாசி நம் முறைப்பெண்களாக இருக்கும். திருமணத்திற்கு முந்தைய நாள் மொத்த மண்டபமும் சேர்ந்து 'மாங்கல்யம் தந்துனானேனா' என டான்ஸ் ஆடுவார்கள். ஆண்களும் பெண்களும் இரு தரப்பாகப் பிரிந்து பாட்டுக்கு பாட்டு விளையாடுவார்கள். சொந்தக்காரர்கள் பாசமழை பொழிவார்கள். ஒரே ஜாலிலோ ஜிம்கானாதான்.

ரியாலிட்டி:

டார் டவுசர் போட்டுத் தேடினாலும் ஒன்று இரண்டு தேவதைகள்தான் கண்ணில்படும். அதுவும் கரெக்டாகத் தங்கச்சி முறையாக இருக்கும். முந்தைய நாள் இரவில் முரட்டு மீசை பங்காளியோ, முறைப்பான முறைமாமாவோ கண்டிப்பாக பஞ்சாயத்து செய்வார்கள். 'அப்புறம் தம்பி, இன்னும் சும்மாதான் இருக்கீங்க போல' என சபையில் ஒயிட்ரைஸை அவிழ்ப்பார்கள் சொந்தக்காரர்கள். ஹேங் ஓவரில் முக்கியத் தலைகள் எல்லாம் முக்காடு போட்டு உட்கார்ந்திருக்கும். அப்போ, டான்ஸ், பாட்டுக்கு பாட்டு நடக்கிற கல்யாணம் எல்லாம் எங்கதான்யா நடக்குது?

ஒயிட் காலர் வேலை:

சினிமாவில்:

கேம்பஸில் செலெக்ட் ஆனதும், ஜம்மென ஐ.டி நகரத்தில் ஒரு வேலை. கை நிறைய சம்பளம், சலிக்க சலிக்க பார்ட்டி, ஆறே மாதங்களில் கார், இரண்டே ஆண்டுகளில் சொந்த வீடு, அடுத்த ஆண்டே கல்யாணம் என ஜாவா சுந்தரேசன் ரேஞ்சுக்கு அசுர வேகத்தில் செட்டில் ஆகலாம். அடுத்தபடியாக, ஃபாரீன் சென்று க்ரீன் கார்ட் ஹோல்டர் ஆகி ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட வேண்டியதுதான்.

ரியாலிட்டி

கேம்பஸில் ப்ளேஸ் ஆவதே குதிரைக்கொம்பு. அப்படியே பிளேஸ் ஆனாலும் கால் லெட்டர் வரும்வரை அடியில் இண்டக்‌ஷன் ஸ்டவ்வைப் பற்ற வைத்தது போல உட்கார்ந்திருக்க வேண்டும். வேலை கிடைத்த கொஞ்ச நாளில் பைக், அதற்கு ஈ.எம்.ஐ கட்டி முடிப்பதற்குள் கார், அதற்கு ஈ.எம்.ஐ கட்டி முடிப்பதற்குள் கல்யாணம். அந்தச் செலவை சமாளிப்பதற்குள் சொந்த வீடு. அப்புறம் எங்க ஃபாரீன் போறது? இருக்கும் காலம் முழுக்க ஈ.எம்.ஐ கட்டியே பொழுதைக் கழிக்க வேண்டியதுதான்.

லவ் அண்ட் ரொமான்ஸ்:

சினிமாவில்:

பார்த்தவுடன் மனசுக்குள் ட்ரோன் பறப்பது, விரட்டிச் சென்று விருப்பத்தை சொல்வது - இதெல்லாம் சகஜம். அளவில்லா காதல், சின்னச் சின்ன ஊடல் என வருடம் முழுவதும் வளர்த்து பின்னர் வீட்டில் சொன்னால் சின்னத் தயக்கத்தோடு சம்மதிப்பார்கள். பிறகு என்ன? இரண்டு வீட்டு ஆட்களும் கூடி அட்சதை தூவி வாழ்த்தி நம்மைச் சேர்த்து வைக்க... ஹேப்பிலி மேரீட்!

ரியாலிட்டி:

பார்த்தவுடன் உள்ளே ஏதாவது பறந்தாலும், 'இதெல்லாம் வேண்டாம்' என பயப் பல்லி கத்தும். அதைத்தாண்டி ஓ.கே ஆனாலும் வழிய வழிய காதல் எல்லா வாய்ப்பே இல்லை. கசக்கிப் பிழியும் வேலை பளுவிற்கு நடுவில் நடக்கும் கொஞ்சநேர ரொமான்ஸிலும் சண்டை வந்து சட்டையைக் கிழிக்கும். இதை எல்லாம் ஓவர்டேக் செய்து கல்யாணப் பேச்சு வந்தாலும், வசதி, சாதி, மதம் என ஏகப்பட்ட சிக்கல்கள். அப்புறம் எங்கே ஹேப்பிலி மேர்ரீட் ஸ்டேட்டஸ் தட்ட? பிரச்னையே வராத லவ் எல்லாம் எந்தக் கிரகத்துலய்யா நடக்குது? 


-நித்திஷ்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ