Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்பை, இதற்காகத்தான் நிறுவியதா சீனா?

"அவர்கள் நம்மைவிட குறைந்த நாகரிகத்தைக் கொண்டிந்தவர்கள் என்றால், அவர்கள் நம்மை அவ்வளவு விரைவாக அழிக்க முடியாது. அவர்கள் நம்மைவிட அதிக அறிவு படைத்தவர்கள் என்றால், நம்மை அழிக்கும் அளவுக்கு அவர்கள் குறுகிய மனம் படைத்தவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் நமது இயற்கை வளத்தைக் கொள்ளையடிக்க வரலாம் என்று ஒரு சிலர் கவலை கொள்கின்றனர். ஆனால் ஏற்கனவே இருப்பிடத்தையே மாற்றத்தெரிந்தவர்கள் அவர்கள் என்கிறபோது அவர்களை விட குறைந்த நாகரிகம் கொண்ட மனித இனத்தை எதற்காக அழிக்கப்போகிறார்கள் ? எது எப்படி இருந்தாலும் அவ்வாறு கண்டுபிடித்துவிட்டால் நமது காலகட்டத்தின் மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பாக அது அமையப்போகிறது. இல்லையெனில் பூமியில் மட்டுமே மனித உயிர்கள் வாழத்தகுதியான இடம் என்று முடிவெடுத்து இங்குள்ள உயிரினங்கள் ஒன்றுக்கொன்று மதித்துக் கொண்டாடிக்கொள்ளட்டும் "

பூமியைத் தவிர வேற்று கிரகங்களில் உயிரினம் இருக்கிறதா என்று கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு இரவு பகலாகத் தேடிக்கொண்டிருக்கும் விஞ்ஞானிகளின் முயற்சிகள் பற்றிய கேள்விக்கு, மாவோ என்கிற சீன விஞ்ஞானி ஒருவர் கூலாக சொன்ன பதில்தான் இது.

ஃபாஸ்ட் (FAST - Five-hundred-meter Aperture Spherical Telescope's ) என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய ரேடியோ டெலஸ்கோப் ஒன்றை சீனா, அந்நாட்டின் தென்மேற்குப் பகுதியான பிங்க்டாங்க் கவுன்டியின் மலைகளுக்கு இடையே நிறுவியுள்ளது. இது எந்த அளவுக்கு மிகப்பெரியது என்றால், இந்த டெலஸ்கோப் டிஷ் ஆன்டனாக்குள் ஒரே நேரத்தில் 30 கால்பந்து அணிகள் ஓடியாடி வசதியாகக் கால்பந்து விளையாடலாம், அவ்வளவு பெரிது. 500 மீட்டர் அதாவது சுமார் 1500 அடி விட்டம் கொண்டுள்ளது இந்த டெலஸ்கோப். 11 மீட்டர் கொண்ட 4450 முக்கோண வடிவிலான பேனல்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ரஷ்யாவில் அமைக்கப்பட்ட RATAN எனப்படும் பெரிய டெலஸ்கோப்பும் இதே போன்று வேலை செய்து வருகிறது. ஆனால், அதைவிட ஃபாஸ்ட் ஒரே ஒரே டிஷ் என்ற அடிப்படையில் மிகப்பெரியது எனப் பெயர் பெற்றுவிட்டது.

இந்த டெலஸ்கோப்பை அமைப்பதற்காகவென்றே அந்தப்பகுதியில் வசித்த சுமார் 8000 பேரை இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 1,800 கோடி நிவாரணமாகக் கொடுத்து வேறு இடங்களில் குடியமர்த்தியிருக்கிறார்கள். இந்த டெலஸ்கோப்பைச் சுற்றிலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அமைதி தேவை என்பதற்காகவே இந்த ஏற்பாடு. நூற்றுக்கணக்கான பொறியாளர்கள், ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஒன்றிணைந்து 5 ஆண்டுகளில் இதை நிறுவியிருக்கிறார்கள்.

இதை வைத்து என்ன செய்யப் போகிறது சீனா?

புவிஈர்ப்பு விசையின் அலைகள், ஸ்டெல்லர் ரேடியோ வெளியீடுகள் எனப்படும் நட்சத்திரங்கள் உமிழும் அலைகள் ஆகியவற்றுடன், வேற்றுக் கிரகங்களில் ஏதும் உயிரினம் உள்ளதா என்று கண்டுபிடிக்கவே இந்த டெலஸ்கோப் என்கிறார்கள் சீன விஞ்ஞானிகள். விண்வெளியில் இருந்து பூமியை நோக்கியும், கடந்தும் வரும் சிக்னல்களைப் பெற்று அனலைஸ் செய்வது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் இந்த டெலஸ்கோப் மூலமாக விண்வெளிக்கும் சிக்னல்களை அனுப்பவும் செய்கிறார்கள். அவ்வாறு அனுப்பப்படும் சிக்னல்களை வேறு எந்தக் கிரகத்திலாவது உள்ள வேறு யாராவது பார்த்து "ஹாய்" எனத் திரும்ப சிக்னல்கள் அனுப்ப மாட்டார்களா என்பதே விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு.

இதற்கு முன்னர் இதே நோக்கத்திற்காக சிக்னல்கள் அனுப்பபட்டாலும்கூட அவை அனைத்தும் அதிக வலுவில்லாத சிக்னல்கள். அல்லது துல்லியமற்றவை. ஆனால் சீனாவின் ஃபாஸ்ட் டெலஸ்கோப் சுமார் ஆயிரத்து 100 ஒளிவருடங்கள் தொலைவு வரை சிக்னல்களை அனுப்பும் வல்லமை படைத்தது என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்த ஆன்டனாவை வைத்துக்கொண்டு உடனே வேற்றுக்கிரக உயிரினங்களை, ஏலியன்களைக் கண்டுபிடிக்க முடியுமா என்றால், உடனே முடியாவிட்டாலும் கூட, இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் அத்தகைய கண்டுபிடிப்பில் முன்னேற்றம் காண முடியுமாம்.

நமது சூரியக்குடும்பம்போல ஆயிரக்கணக்கான சூரியக்குடும்பங்களைக் கொண்ட பால்வெளியில் எங்கோ ஒரு கோளில் உயிரினம் ஏன் இருக்கக்கூடாது ? என்ற அடிப்படைக்கேள்வியும் அதற்கான தேடலுமே, இதுபோன்ற விஞ்ஞான முயற்சிக்கு அடிப்படை. அதே சமயம், இது நேர்மறை விளைவை மட்டும் கொடுக்குமா அல்லது எதிர்மறை விளைவையும் ஏற்படுத்திவிடாதா என்பது குறித்த பட்டிமன்ற டைப் விவாதங்கள் விஞ்ஞான உலகத்தில் நடக்காமல் இல்லை. இங்கிருந்து நீங்கள் சிக்னல்களை அனுப்பி விடுகிறீர்கள். அது அப்படியே போய்க்கொண்டே இருக்கும்போது பல ஆயிரம் கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள வேறு ஒரு கிரகத்தில் ஏலியன்கள் இருந்து, இந்த சிக்னலைப் பிடித்துக்கொண்டே பூமியை நோக்கி அவர்கள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று ஒருபுறமும், உயிரினம் வாழத்தகுதியாக உள்ள வேறு கிரகங்களைக் கண்டுபிடித்துவிட்டால், மனிதனே அதனையும் ஆக்கிரமித்து விட மாட்டானா என்று மறுபுறமும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், ஏலியன்களைத் தொடர்பு கொள்வதில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் உலகப்புகழ் பெற்ற விண்வெளி இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். Gliese 832c என்னும் ஏலியன்கள் வாழக்கூடும் என்று கருதப்படும் உலகத்தில் இருந்து கட்டாயம் ஒருநாள் சிக்னல்கள் பதிலாகக்கிடைக்கும் என்று கூறும் இவர், அதே சமயம் அந்த சிக்னலுக்குப் பதில் அளிக்கும்போது நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கவேண்டியது அவசியம் என்றார் ஸ்டீபன். கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தபிறகு அங்கிருந்த பூர்வகுடி அமெரிக்கர்களுக்கு என்ன நடந்தது என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும் என்ற கேள்வியோடும் நம்மை எச்சரிக்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்.

எது எப்படியோ, 1900- ம் ஆண்டில் இருந்து வேகமெடுத்துள்ள SETI என்று சுருக்கமாக ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வேற்றுக்கிரக உயரினத்தைத் தேடும் ஆய்வுகளின் மிகப்பெரிய அடுத்த கட்ட முயற்சியே சீனாவின் இந்த ஃபாஸ்ட் டெலஸ்கோப். இதன் பலன்களும், பின்விளைவுகளும் இன்னும் 20 வருடங்களில் தெரிந்துவிடும். ஆக, அடுத்து வரும் சந்ததிகள் எதிர்கொள்ளவேண்டிய சவால்கள் வரிசையில் ஏலியன்கள் கூட, இடம்பிடிக்கலாம். எதற்கும் ஒரு முறை இந்தக்கட்டுரையின் முதல் பாராவை மீண்டும் ஒருமுறை படித்துவிடுங்களேன்!

- விஷ்வா விஸ்வநாத்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close