Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு பயணம் என்ன செய்யும்?! #WorldTourismDay

" உலகம் ஒரு புத்தகம். பயணிக்காதவர்கள் புத்தகத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே படிக்கிறார்கள்..."    - செயின்ட் அகஸ்டின்.

 

பறக்கும் பறவையில் இருந்து... ஊர்ந்து செல்லும் புழுக்கள் வரை உலகில் அத்தனை ஜீவராசிகளுக்கும் இருக்கும் பொதுவான விஷயங்களில் ஒன்று பயணம்... ஊர் சுற்றுதல் நமக்குப் புது இடங்களின் மூலம் புத்துணர்ச்சியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், பல புது மனிதர்களை அறிமுகம் செய்து வைக்கிறது. அந்த மனிதர்கள் நம் வாழ்வின் முக்கிய உறவுகளாக மாறும் வாய்ப்பையும் ஏற்படுத்துகின்றது. கடந்த கால தொடர்பும், எதிர்கால உத்திரவாதமும் அல்லாத பயணத்தின் நிகழ்கால உறவுகள் உன்னதமானவையே... அப்படி நான் மேற்கொண்ட ஒரு பயணம்... அதில் நான் சந்தித்த... சம்பாதித்த சில மனிதர்கள்: 

கொடைக்கானலில் இருந்து மூணாருக்கு பொதுப் போக்குவரத்து போகமுடியாத காட்டுப்பாதை ஒன்று இருக்கிறது. காட்டிற்குள் இருக்கும் இரண்டு கிராமங்கள்... அவர்களுக்கான ஒரே போக்குவரத்து நாட்டுக் குதிரைகள் மட்டுமே. குதிரைகளைத் தவிர எதுவும் போக முடியாத அந்தப் பாதையில், வண்டியில் செல்ல நானும், என்னுடைய சில நண்பர்களும் முடிவெடுத்துக் கிளம்பினோம். மாலை நேரம்... மழை பெய்யத் தொடங்கியது, மண்...சேறானது. அடர்ந்த காடு... வண்டிகளை நகர்த்த முடியவில்லை... பாதை தெரியவில்லை...இடையில் மிருகங்களின்  சத்தங்கள். வண்டியை அப்படியே நிறுத்திவிட்டு சில தூரம் நடந்தோம். தூரத்தில் சில குடிசைகள் தெரிந்தன. சிறு பள்ளத் தாக்கில் இருந்த அந்தக் குடிசையின் கதவுகளைத் தட்டினோம். கரண்ட் வசதியில்லாத அந்தக் குடிசையில் இருந்து ஒரு அண்ணன் வந்தார். நாங்கள் சிக்கிக் கொண்ட கதையை அவரிடம் சொன்னோம். வேறு எந்தக் கேள்வியையும் அவர் கேட்கவில்லை. உடனடியாக வீட்டினுள் அனுமதித்தார். 

"சாப்பிட்டீங்களா???"

"சாப்பிட்டுவிட்டோம்..." பொய் சொன்னோம்.

"சும்மா பொய் சொல்லாதீங்க... இந்தக் காட்டுக்குள்ள வந்து என்னத்த சாப்பிட்டிருப்பீங்க... இருங்க பத்தே நிமிஷம் சோறாக்கி தர்ரேன்..."
கொடூர பசியில் இருந்த எங்களுக்கு அந்த சாம்பார் சாதம் அமிர்தமாக இருந்தது. படுக்கைக்கு வசதி செய்து கொடுத்தார்கள். அந்தக் குடிசையில் ஒரு அறை. ஒரு சமையலறை. அவர்கள் சமையலறையில் படுத்துக் கொண்டு எங்களை வசதியாக படுக்க வைத்தார்கள். 
காலை விடிந்தது... சூரியன் வரவில்லை...குடிசையில் இருந்து நான் வெளியில் வந்தேன்...நான்கு பக்கங்களும் மலைகள் சூழ்ந்த ஒரு பள்ளத்தாக்கு... சில இடங்களில் நிலம் சமன் செய்யப்பட்டு, காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்தன. மூன்று குதிரைகள், இரண்டு நாய்கள், இரண்டு பூனைகள் , நான்கு மாடுகள் என ஆங்காங்கே இவர்களின் வளர்ப்புப் பிராணிகள். பீன்ஸ்களை அறுவடை செய்து கொண்டிருந்த அவர் வந்தார்... நேற்றைய இரவு அவர் முகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை. சுருள் முடி, திடமான உடல் கட்டமைப்பு, தலையில் துண்டு, காலில் ரப்பர் ஷூக்கள்... கண்ணன் அண்ணா...வயது நிச்சயம் 35ற்கு கீழ் தான். நிறைய பேசினோம். இரண்டு நாட்கள் அங்கேயே தங்கினோம்... அவருடன் சேர்ந்து விவசாய வேலைகளைக் கவனித்தோம். முதலில் அதிக பூச்சிக் கொல்லிகளை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தவர், பின்பு ஒரு சமயத்தில் நம்மாழ்வர் நடத்திய வகுப்பில் பங்கெடுத்த பின், இயற்கை விவசாயத்திற்கு மாறிவிட்டார். இரண்டு நாட்கள் கழித்து கிளம்பினோம்... பணம் தர முயற்சித்தேன் இறுதி வரை அவர்கள் வாங்கிக் கொள்ளவே இல்லை.கண்ணன் அண்ணா, அவர் தம்பி சேகர், அவர்களின் அம்மா, கண்ணன் அண்ணாவின் மனைவி ஈஸ்வரி, அவர்களின் குழந்தை அருண்... ஒரு அன்பான குடும்பம் எனக்குக் கிடைத்தது.

கடுமையான காட்டுப் பாதைகளைக் கடந்து மூணாறு வந்து சேர்வதற்குள் இருட்டிவிட்டது... என் "புல்லட்" அதிக காயங்களைக் கண்டிருந்தது. புல்லட் மெக்கானிக்கைத் தேடி அலைந்தோம்.  மெயின் ரோட்டில் இருந்து பல சந்துகளைக் கடந்து, ஒரு டீ எஸ்டேட்டிற்குள் நுழைந்தோம்... அதில் சில கிலோமீட்டர்கள் பயணித்ததும்... ஒரு சிறிய ஷெட் இருந்தது. ஒடுக்கான தேகம், முகத்தில் தாடி, வாயில் பீடி, ஒரு கண் பார்வை, கிழிந்த ஜெர்கின், பாட்டா ஷூ... யோஜன் அண்ணா. புல்லட் மெக்கானிக். அவரின் வெளித் தோற்றம் கண்டு எனக்குள் இருந்த "மனித" புத்தி அவர் மீதான நம்பிக்கையின்மையை தோற்றுவித்தது. அவர் வண்டியை இரவு அங்கேயே விட்டுவிட்டு காலை வரச் சொன்னார். நான் தயங்கினேன்... பின்பு, ஷெட்டிற்குள் சென்று ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துவந்து என்னிடம் நீட்டினார். அதில் அவரிடம் தங்கள் புல்லட்களை பழுதுபார்க்க கொடுத்த பல சர்வதேச ஊர்சுற்றிகள் அவர் குறித்து எழுதியிருந்தார்கள். பல புகைப்படங்களும் இருந்தன. ஒருவித தயக்கத்தோடு அங்கிருந்து கிளம்பினோம். 

  காலை விடியும் முன்பே பல வித எண்ணங்கள், யூகங்களோடு ஷெட்டிற்கு வந்தோம். வண்டி பத்திரமாக, சுத்தமாக இருந்தது... பெருமூச்சு விட்டேன். யோஜன் அண்ணா... ஷெட்டின் ஒரு மூளையில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தார். தட்டி எழுப்பினோம்..." ஆ... வந்துட்டீங்களா... இப்போ கொஞ்ச நேரம் முன்னாடித் தான் வேல முடிஞ்சது. அதான் அப்படியே தூங்கிட்டேன்..." என்றபடியே என் வண்டியில் என்னென்ன வேலைகளை செய்தார் என்பது குறித்து விளக்கினார். மேலும், என் வண்டியில் நான் சமீபத்தில் மாற்றியிருந்த க்ளட்ச் ப்ளேட் டூப்ளிகேட் என்பதை சுட்டிக் காட்டினார். அவரே புதிய ஒன்றையும் போட்டு வைத்திருந்தார். 
" எல்லா பணத்தாசை புடிச்சவனுங்க... காசுக்காக எப்படி பண்றானுங்கப் பாரு... வண்டி வேகமா ஓட்டையில ஏதாவது பிரச்சனையானா உசுரே போயிடுமில்ல. மெக்கானிக் வேல ஒண்ணும் லேசுப்பட்டதில்ல" என்று சொன்னவர். மொத்த வேலைக்கும் 150 ரூபாய் தான் வாங்கினார். நான் அதிகம் கொடுத்தும் வாங்க மறுத்துவிட்டார். 

" இன்னிக்கு இருக்குறவன் நாளைக்கு இல்ல... இருக்குற வரைக்கும் நிம்மதியா, நேர்மையா, சந்தோசமா... வாழ்ந்துட்டுப் போயிரணும்..." என்றபடியே தன் பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு எங்களுக்கு விடையளித்தார்.

இது நடந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகிவிட்டன... வருடத்திற்கு ஒரு முறையாவது கண்ணன் அண்ணா வீட்டிற்குப் போய்விடுவேன். மாதம் ஒருமுறையாவது போனில் பேசிவிடுவேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் யோஜன் அண்ணாவை சந்தித்து வருகிறேன். இந்தப் பயணத்திற்கு எனக்கான மொத்த செலவு 800 ரூபாய்... ஆனால், இதன் மூலம் எனக்குக் கிடைத்த எதிர்பார்ப்பில்லா இந்த உறவுகள் எதற்கும் ஈடு இணையற்றவை... இன்று உலக சுற்றுலா தினம். "அனைவருக்கும் சுற்றுலா" என்ற கருத்தை மையமாகக் கொண்டு இந்தாண்டு கொண்டாடப்படுகிறது. பயணங்கள் அதன் தூரங்களின் அடிப்படையில் மதிப்பிடப்படுவதில்லை... பயணங்களுக்குப் பணமும் ஓர் தடையில்லை. பயணிப்பவர்கள் தொடருங்கள்... பயணிக்காதவர்கள் தொடங்குங்கள்... வாழ்த்துக்கள் !!!

-இரா.கலைச்செல்வன்
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ