Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃப்ளிப்கார்ட், அமேசான் விழாக்கால விற்பனை... கவனத்தில் கொள்ள வேண்டியவை!

ஆன்லைனில் பொருட்களை அள்ள விரும்புபவர்கள் அக்டோபர் மாதத்திற்காக காத்திருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு ஃப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் இ-காமர்ஸ் நிறுவனங்கள் மாற்றிவிட்டன. ஆன்லைனில் பொருட்களை வாங்கிக் குவிக்கும் அடிக்‌ஷனுக்கு  'ஆன்யோமேனியா' நோய் என்று பெயரும் வைத்தாகிவிட்டது.

முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே கிராமங்களில் இருந்து துணி, மணிகள் எடுக்க சென்னை போன்ற நகரங்களுக்கு இரயிலேறி பஸ் ஏறி ரங்கநாதன் தெருக்களை ஈக்கள் போல் மொய்ப்பார்கள். ஆனால் இப்போது இருந்த இடத்திலிருந்தே எதையும் வாங்கலாம் என்ற நிலை வந்ததும் பெருநகரங்களின் வியாபார தெருக்கள் வெறிச்சோடிப் போய் இருக்கின்றன. காரணம் இருந்த இடத்திலிருந்தே எதையும் வாங்கலாம் விற்கலாம் என்ற நிலையை இ-காமர்ஸ் நிறுவனங்கள் கொண்டுவந்து விட்டன.

இன்னும் சில தினங்களில் ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே, அமேசானின் கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல், ஸ்னாப்டீலீன் அன்பாக்ஸ் சேல் என வரிசையாக மக்களின் நுகர்வு ஆர்வத்தைக் குறிவைத்து இறங்குகின்றன.   

அதிரடி ஆஃபர்கள், விரைவான டெலிவரி, கேஷ் ஆன் டெலிவரி என இ-காமர்ஸ் நிறுவனங்களை மக்கள் விரும்ப ஏராளமான அம்சங்களை தினம் தினம் அவை கண்டுபிடித்துக்கொண்டே இருக்கின்றன. சில நல்ல விஷயங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கில் இருந்தாலும் சிக்கல்களும் கூடவே வரிசை கட்டி நிற்கின்றன.

பிரச்னைகள்:
போலிப் பொருட்கள், டெலிவரியை இழுத்தடிப்பது, செல்போன் ஆர்டர் செய்தால் செங்கல் டெலிவரி ஆவது, கிரெடிட் கார்ட் தகவல்கள் திருட்டு, போலி தளங்கள் என ஏராளமான பிரச்னைகள் ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ளன. இந்தப் பிரச்னைகளை எல்லாம் தாண்டி, ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாறாமல் ஸ்மார்ட்டாக பொருட்களை வாங்க இந்த விதிகளை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

1. முதல் விதி, தேவை என்றால் மட்டுமே அந்தப் பக்கம் தலைக் காட்ட வேண்டும்.

2. பொருட்களின் விலை மூன்று மாதத்திற்கு முன் எவ்வளவு இருந்தது என்பதையும், அந்தப் பொருளின் பிரத்யேக இணையதளத்தில் அதன் விலை என்ன என்றும் பார்க்க வேண்டும்.

3. விலை உங்களுக்கு நியாயமாகப் படுகிறது என்றால் பொருளின் நம்பகத்தன்மையைப் பாருங்கள். பொருளின் புகைப்படங்களையும் அதற்கு கொடுக்கப்பட்டுள்ள ரிவ்யூக்களையும் பாருங்கள். பிராண்டின் ஒரிஜினல் லோகோ உள்ளிட்ட விஷயங்களை நன்றாக கவனியுங்கள்.

4. ஆஃபர் மற்றும் நீங்கள் வாங்கப் போகும் பொருட்கள் தொடர்பான டேர்ம்ஸ் அண்ட் கன்டிஷன்கள் ஏதேனும் இருந்தால் தவறாமல் அதனைப் படித்து விடுங்கள்.

5.  பொருட்களுக்கான பேமென்டை முடிப்பதற்கு முன் நீங்கள் தேர்வு செய்த பொருள், பிராண்ட், மாடல், கலர் ஆகியவற்றை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துகொள்ளுங்கள்.

6. பின்னர் விலையைப் பாருங்கள். நீங்கள் முதலில் பார்க்கும்போது இருந்த விலை இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

7. உங்களுடைய மொபைல் எண், மெயில் ஐடி, டெலிவரி அட்ரஸ் போன்றவற்றை தெளிவாகக் கொடுத்துவிடுங்கள்.

8. உங்களுக்கு பொருளின் நம்பகத்தன்மை மீதோ, குறிப்பிட்ட இணையதளத்தின் மீதோ சந்தேகம் இருந்தால் கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனை தேர்வு செய்து விடுங்கள்.

9. உங்கள் எண்ணுக்கும், மின்னஞ்சலுக்கு வரும் தகவல்களை பொருள் வந்து சேரும் வரை அழிக்காமல் வைத்திருங்கள்.

10. பொருள் வந்த பிறகு நீங்கள் தேர்வு செய்த பொருள், தரத்துடன் வந்திருக்கிறதா என்பதைப் பாருங்கள். இல்லையென்றால் உடனடியாக அந்த இணையதளத்தைத் தொடர்பு கொண்டு புகார் செய்து விடுங்கள்.

11. இறுதியாக மீண்டும் நினைவில் கொள்ளுங்கள் தேவை என்றால் வாங்குங்கள். ஆஃபரில் மயங்கி வாங்க வேண்டாம்.

- ஜெ.சரவணன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ