Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வீடியோ மீம்ஸ், ஜியோ சிம் - உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்துக்கு அலேக் ஐடியாஸ்!

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே - இப்போதுதான் கேட்டது போல இருக்கிறது. அதற்குள் அடுத்த ரவுண்டுக்குத் தயாராகிவிட்டார்கள் கரைவேஷ்டிக்காரர்கள். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. கொட்டும் பனியிலும் விடாமல் 'தேச நலனுக்காக' வீடு வீடாக ஓட்டுக் கேட்டு உழைக்கும் இவர்களைப் பார்க்கும்போது உச்சி முடி சிலிர்க்கிறது. இந்தக் கடமை தவறா ஆபீஸர்கள் தேர்தலில் எளிதாக ஜெயிக்க இந்த எளியவர்களின் டிப்ஸ் இது. யூஸ் பண்ணிக்கோங்க ஜி!

* முன்பு நல்ல காரியம் தொடங்குவதற்கு முன் பிள்ளையார் சுழி போடுவது போல இப்போது வாட்ஸ் அப் குரூப் தொடங்கிவிடுகிறார்கள். வார்டில் இருக்கும் முக்கியத் தலைகளை இணைத்து ஒரு குரூப், தெருவில் இருக்கும் மொத்த ஓட்டுகளை இணைத்து ஒரு குரூப் எனத் தொடங்கி அவரவர்களின் ரசனைக்கேற்ப பாட்டு, வீடியோ என ஷேர் செய்யலாம். 'நமக்குப் பிடிச்சது எல்லாம் பண்றாரே இந்த மனுஷன்' என அவர்கள் சிலிர்த்துப் போய் ஓட்டு குத்த வாய்ப்பிருக்கிறது. குரூப் சாதிச்சண்டை மைதானம் போல ஆகிவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். 
எச்சரிக்கை: குரூப்பில் 11 மணி காட்சி ஓட்டினால் கம்பி கவுன்ட் பண்ணவும் வாய்ப்பிருக்கிறது.

* அம்மா, அய்யா, அண்ணன், உறவே போன்ற ரிலேஷன்ஷிப் பெயர்கள் எல்லாம் ஸ்டேட் லெவல் பாலிடிக்ஸில் ஹிட் அடித்த ஃபார்முலா. எனவே லோக்கல் பாலிடிக்ஸில் நம் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி சித்தப்பு, பங்காளி, கஸின் என நமக்கு நாமே உறவுமுறை வைத்துக்கொள்ளலாம். 'நம்ம வீட்டு ஆளுப்பா' எனப் பாசமாக வந்து பட்டனை அமுக்கிச் செல்வார்கள்.

* உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை பெண்கள்தான் வெற்றியைத் தீர்மானிப்பவர்கள். எனவே அவர்கள் தொல்லை இல்லாமல் சீரியல் பார்க்க தங்கு தடையற்ற மின்சாரம், ஹெச்.டி கேபிள் சர்வீஸ் போன்றவற்றை வழங்கலாம். முடிந்தால் 'நாகினி', 'மாயமோகினி' போன்ற சீரியல்கள் ஒளிபரப்பாகும்போது சென்று சட்னி அரைத்து, தோசை சுட்டு வைக்கலாம். வீட்டு வேலை தொல்லை இல்லாமல் சீரியல் பார்க்கவைத்த சென்டிமென்டில் கண் வியர்த்து உங்களுக்கு ஓட்டுப் போடுவார்கள்.

* பக்கம் பக்கமாகப் பேசி எதிராளியைக் கிழித்துத் தொங்கவிடுவதெல்லாம் பழைய ஸ்டைல். எனவே தனியாக நான்குபேர் கொண்ட குழு அமைத்து எதிர்க்கட்சி வேட்பாளரை ஹார்ஷாகக் கலாய்த்து மீம்ஸ் போட்டு வெறியேற்றலாம். ஃபார்வர்ட் செய்ய இருக்கவே இருக்கிறது வாட்ஸ் அப் குரூப். முடிந்தால் ஓர் ஒற்றனை வைத்து அவர்களைப் பின்தொடர்ந்து அவர்கள் சொதப்பும் சமாசாரங்களை வீடியோ மீமாகப் போடலாம். 'வாட் எ ஹியூமர்சென்ஸ்' என சிரித்துக்கொண்டே வந்து தேர்தல் நாளில் லைக் போடுவார்கள்.

* முன்னால் சொன்ன பூப்பாதை வேலைக்கு ஆகாவிட்டால் இந்த சிங்கப்பாதைதான். உங்களுக்கு. நெருக்கமான விசுவாசி ஒருவரை அழைத்து சப்பென கன்னத்தில் அறையுங்கள். கோபமாகும் விசுவாசி உங்களைப்பற்றி அவருக்குத் தெரிந்த உண்மைகளை எல்லாம் வெளியே சொல்வார். இதன்மூலம் சட்டென எல்லோர் மனதிலும் உங்கள் பெயர் பதிவாகும். அப்புறமென்ன... ஓட்டு மெஷினில் உங்கள் பெயர் மட்டுமே பளிச்சென நினைவிற்கு வரும். வெற்றி நமதே.
பின் குறிப்பு: மேற்சொன்ன சம்பவம் யாரையும் குறிப்பிடுவது அல்ல.

* மூன்றாவது பாயின்டின் அப்கிரேடட் வெர்ஷன் இது. பெண்களுக்குக் காய்கறி நறுக்கிக் கொடுப்பது, துணி காயப்போடுவது எனத் தொடங்கி ஆண்களுக்கு கரன்ட் பில் கட்டுவது, கேஸ் பில் கட்டுவது எனச் சின்னச் சின்ன உதவிகள் செய்தால் நெகிழ்ந்துபோய் உங்களுக்கு ஓட்டுப் போட்டுவிடுவார்கள். இந்தத் திட்டத்திற்கு 'எங்களுக்கு நாங்களே' எனப் பெயர் வைத்துக்கொள்ளலாம்.
டிஸ்க்ளைமர்: இந்தத் திட்டம் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டால் அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.

* கண்டிப்பாக உங்கள் ஏரியாவில் இருந்த ஒருவராவது சினிமாவில் பெரியாளாகி இருப்பார்கள். அந்தப் பிரபலத்தின் படம் டி.வி-யில் ஒளிபரப்பப்படும் நாளில் அந்த ஊருக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கலாம். இப்படிக் கருணையுள்ளம் கொண்டு லீவ் விடுவதால் ஊர்ப் பாசத்தில் அடுத்த ஐந்து தேர்தல்களுக்கு மனம் மாறாமல் உங்களுக்கே ஓட்டுக் குத்துவார்கள். 

* கடைசி பிரம்மாஸ்திரம் இது. தெருவில் அன்லிமிடெட் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என வாக்குறுதி கொடுங்கள். பாய்ந்துவந்து உங்களுக்கு ஓட்டுப் போடுவார்கள். 'அதெப்படி முடியும்?' என நக்கலாய்க் கேட்பவர்களின் வாயை அடைக்க ஜியோ சிம்களை நிறைய வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஜியோ சிம் ஆசையில் யாரும் விமர்சனமே செய்ய மாட்டார்கள். ஜெயம் உண்டாகட்டும் டும் டும்!

- நித்திஷ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close