Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடக்காத தேர்தலுக்கு இவ்ளோ அக்கப்போரா? - உள்ளாட்சித் தேர்தல் காமெடிகள்!

உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவினால் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தப்பட்டுவிட்டது. வழக்குப் போட்ட தி.மு.க-வே இப்படியொரு உத்தரவை எதிர்பார்க்கவில்லை.
 
இந்த உத்தரவை எதிர்க்கட்சிகள், சீட் கிடைக்காத கட்சிக்காரர்கள் கொண்டாடுகிறார்கள். ஆளும் கட்சி வேட்பாளர்களோ சோகமயமாகிவிட்டார்கள். காரணம் பணம் கட்டி சீட் வாங்கி, முக்கால்வாசி தேர்தல் பணிகளை முடித்துவிட்டார்கள். தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல, அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் வேலைகளைச் செய்யும் அவுட்சோர்ஸ்களும், தீபாவளியைக் கொண்டாட எதிர்பார்ப்பிலிருந்த எளிய மக்களும் ஏமாற்றமடைந்துள்ளார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கிராம பஞ்சாயத்து வார்டு முதல், மாநகராட்சி வரை சீட் பெறுவதற்கு ஒவ்வொருவரும் பட்ட பாடுகள் சொல்லி மாளாது. கொஞ்சம் பார்க்கலாமா..!

* ஊராட்சி மன்ற வார்டு பதவிக்குப் போட்டியிடுபவர்கூட பத்துப்பேரை உடன் வைத்துக்கொண்டு வாக்குக் கேட்டார். தேர்தல் முடிவு வரும்வரைக்கும் உடனிருக்கும் பத்துப் பேருக்கும் உணவு, இருப்பிடம் மற்ற இத்யாதி செலவுகளும் வேட்பாளருடையதுதான். கூடவே ஒருவர் பணப்பையோடு சென்றுகொண்டிருப்பார். அவர்தான் கேஷியர். ஊராட்சித் தலைவருக்குப் போட்டியிடுவதையே ஒபாமாவுக்கு எதிராகப் போட்டியிடுவதாக நினைத்து நம்ம ஆட்கள் செய்கின்ற அலப்பறை சொல்லி மாளாது.

* தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஐம்பது சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கியதால் வழக்கமாகப் போட்டியிட்ட ஆண்கள் பதறிப்போனார்கள். மனைவி, தங்கச்சி, மகள், கொழுந்தியா என்று வீட்டிலிருந்தவர்களைக் களத்தில் இறக்கிவிட்டார்கள். சில இடங்களில் திண்ணைகளில் முடங்கிக்கிடந்த பாட்டி, அப்பத்தாக்களையும் இறக்கிவிட்டார்கள். வீட்டில் பெண்கள் இல்லாததால் சிலர் ரெமோவாக மாறவும் தயாராகிவிட்டார்கள். 

* பதவி ஆசை, அதில் வரும் வருமானம், பிரபலம், அதிகாரம்... பல புரொபஷனல்களையும் அரசியலுக்கு இழுத்து வந்துவிடுகிறது. நெல்லை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதும், சென்னை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர் அபாரூபா சுனந்தினி வேலையை ராஜினாமா செய்துவிட்டு அ.தி.மு.க. சார்பாக நெல்லையில் போட்டியிடுகிறார். டாக்டர் என்பதைவிட மேயர் பதவிதான் அவருக்கு விருப்பமாம்.

* கடமலைக்குண்டு அருகே பொன்னம்படுகை கிளைச் செயலாளர் கார்த்திகைராஜா தன் மருமகளுக்கு ஒன்றிய வார்டு சீட் கொடுக்காததால் குடும்பத்தோடு தேனி அ.தி.மு.க. அலுவலக வாசலில் உண்ணாவிரதம் என்று உட்காந்துவிட்டார். பிறகு போலீஸ் வந்து கெஞ்சிக் கூத்தாடி அவர்களின் போராட்டத்தை நிறுத்தினார்கள். நீலகிரி மாவட்ட ஊராட்சியில் சமீபத்தில் கட்சியில் சேர்ந்த பெண்ணுக்கு சீட் கொடுத்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகளிர் அணி துணைச் செயலாளர் சுசித்ரா தீக்குளிக்க முயற்சி செய்ததை போலீஸ் தடுத்து நிறுத்தியது.

* தேர்தல் என்று வந்துவிட்டால் தாயாவது பிள்ளையாவது.... தூத்துக்குடி மாநகராட்சியில் 27-வது வார்டில் சிட்டிங் அ.தி.மு.க. கவுன்சிலரான ராஜலெட்சுமிக்கு சீட் வழங்காமல் அவரது தாயார் ஜான்சிக்குக் கொடுத்துள்ளனர். அவ்வளவுதான் தாய்க்கும் மகளுக்கும் பகையாகிவிட்டது. அவரை எதிர்த்து சுயேட்சையாக ராஜலட்சுமி களம் இறங்கினார். 
இதேபோல் சிவகங்கை நகராட்சி ஏழாவது வார்டில் திமுக. வேட்பாளர் ஜெயகாந்தனை எதிர்த்து அவர் தம்பி முருகனை நிறுத்திக் குடும்பத்தைக் கூறு போட்டுள்ளது அ.தி.மு.க.

* மதுரை மாநகராட்சியில் நான்குமுறை முத்துப்பட்டி வார்டில் வெற்றிபெற்ற அ.தி.மு.க-வின் ராஜா சீனிவாசனுக்கு சீட் வழங்கவில்லை. நொந்துவிட்டார். இது மட்டுமல்ல மதுரை சிட்டிக்குள் 58 சிட்டிங் கவுன்சிலர்களுக்கு சீட் வழங்காமல் அவர்களைப் புலம்பவிட்டார் அமைச்சர் செல்லூர் ராஜு. இதனால் பல வார்டுகளிலும் அ.தி.மு.க-வினர் சுயேட்சையாகக் குதித்தனர்.

* தர்மபுரியில் வார்டு மாற்றி நிற்கச் சொன்னதால் அ.தி.மு.க-விலிருந்து சடாரென்று பா.ம.க-வுக்குத் தாவி, தான் விருப்பப்பட்ட வார்டில் போட்டியிடுகிறார் நிர்மலா என்பவர். இந்த தில்லு யாருக்கும் வராது. விருதுநகர் நகராட்சியில் தங்களைப் போன்ற உண்மையான விசுவாசிகளுக்கு சீட் தரவில்லையென்று குமரன்-இந்திரா தம்பதியினர் இரண்டு வார்டுகளில் நிற்பதாக அறிவித்து அ.தி.மு.க-வுக்கு அதிர்ச்சி அளித்தனர். உசிலம்பட்டி நகராட்சியில் சீட் தரவில்லையென்று சிட்டிங் கவுன்சிலர் பாலமுருகன் விஷம் குடித்தார். தற்போது மருத்துவமனையில் சீரியஸ் கண்டிஷனில் இருக்கிறார்.

இன்னும் சில அகாதுகா காமெடிகள் எல்லாம் இந்த வீடியோவுல இருக்கு. மிஸ் பண்ணாம பாருங்க. 

 

 

இப்படி சீட்டுக்காக ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ள நிலையில்தான் நீதிபதி கிருபாகரன் அனைத்துக்கும் மொத்தமாக ஆப்பு வைத்துவிட்டார்.
 
போச்சா சோணமுத்தா!

-செ.சல்மான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close