Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மு.வ-வின் பேராவல்! நினைவு தினச் சிறப்புப் பகிர்வு

 

 


‘‘நல்ல தன்மை மட்டும் உடையவர்கள் எத்தனையோ பேர் கலங்கிக் கண்ணீர் வடித்து மாய்ந்திருக்கிறார்கள்; மாய்ந்துவருகிறார்கள். வல்லமை மட்டும் பெற்றவர்களும் எதிர்பாராதவகையில் நசுக்குண்டு அழிகிறார்கள். குடும்பங்கள் முதல் நாடுகள் வரையில் இதற்குச் சான்றுகள் காணலாம்’’ என்று தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டவர் தமிழறிஞர் மு.வரதராசனார். அவருடைய நினைவுதினம் இன்று. 

‘‘தமிழர்க்கு நல்ல பண்புகள் பல உண்டு. ஆயினும், பொதுவாகத் தமிழன் வாழ்வு நலிந்துள்ளது எனக் கூறலாம். காரணம் என்ன? தமிழரிடையே சில குறைகளும் இருத்தல்கூடும் அன்றோ?’’ அதற்காகத்தான் ‘தம்பிக்கு’ எனத் தலைப்பிட்டுக் கடிதங்களை எழுத ஆரம்பித்தார் மு.வரதராசனார். 

‘‘உரமாகவும் தூய்மையாகவும் காப்பதே கடமை!’’
‘தம்பிக்கு’ எனத் தலைப்பிட்ட கடிதத்தில், ‘‘தம்பி! இயற்கையிலிருந்து நாம் ஒரு பெரிய பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கைப் பகுதியில் ஒன்றை மட்டும் போற்றுகிறவன் உருப்படியாவதில்லை. உடலை மட்டும் பொற்றி (பொத்தி) உரமாக வைத்திருப்பவனும் அழிகிறான். அவனுடைய உள்ளம் அவனுக்குப் பகையாகி அவனைத் தீயவழியில் செலுத்திக் கெடுத்து அழிக்கிறது. உள்ளத்தை மட்டும் தூய்மையாகப் போற்றிக் காப்பாற்றுகிறவனும் இடை நடுவே அல்லல்படுகிறான்; அவனுடைய உடல், பல நோய்க்கிருமிகளுக்கு இடம்கொடுத்து அவனுடைய உள்ளத்தில் அமைதியைக் கெடுத்து அல்லல்படுகிறது. உடலும் வேண்டும், உள்ளமும் வேண்டும் என்று இரண்டையும் உரமாகவும் தூய்மையாகவும் காப்பதே கடமையாகும். மரம், வானளாவ உயர வேண்டியதாக இருக்கலாம்; ஆனால், தான் வேரூன்றிய மண்ணை மறந்து வாழ முடியாது; வானைப் புறக்கணித்துக் கிளைகளை உயர்த்தாமல் வாழவும் முடியாது’’ என்று உடலையும், உள்ளத்தையும் காப்பது பற்றி மிகவும் அழகாக எழுதியிருப்பார் மு.வ.

‘‘மொழியின் செல்வாக்கு மாறுவதில்லை!'’
அவருடைய மற்றொரு கடிதத்தில், ‘‘மொழி, மனிதனுடைய உடலில் ஊறாததாக இருக்கலாம்; ஆனால், அவனுடைய மூளையை உருவாக்கியது அதுவே. அவன் எண்ணும் எண்ணம், பேசும் பேச்சு, எழுதும் எழுத்து மூன்றிலும் மொழி உள்ளது; அதன் செல்வாக்கு உள்ளது. மொழி - வேறுபாடு குழந்தையின் தொட்டிலிலேயே தொடங்குவது; மரணப்படுக்கை வரையில் தொடர்ந்து வருவது. இடையில் மனிதன் கற்ற எத்தனையோ பழக்கவழக்கங்கள் மாறிவிடுகின்றன; ஆனால், மொழியின் செல்வாக்கு மாறுவதில்லை. பரம்பரையாக ஆசிரியர் தொழிலில் இருந்தவன் துப்பாக்கி ஏந்தும் தொழிலுக்குச் செல்கிறான்; செருப்புத் தொழில் செய்தவன் நாட்டை ஆள்கிறான்; பரம்பரையாகத் தராசு பிடித்தவன் விமானம் ஓட்டுகிறான்; பரம்பரையாக ஏர் ஓட்டியவன் நூல் எழுதுகிறான்; ஆனால் மொழி மாறுவதில்லை’’ என்று மொழிக்கு விளக்கம் அளித்தவர் மு.வ.

அன்பை மட்டுமே முதன்மையாகவைத்து அவருடைய படைப்புகள் இருக்கும். அன்புதான் குடும்ப வாழ்க்கையின் அடித்தளம் என்பதை பலமுறை வலியுறுத்தியிருக்கிறார். உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் தூய்மையாக இருப்பதுவும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படையானதுவும் அன்பு என்பது அவருடைய ஆணித்தரமான கருத்தாகும். தம் நாவல்கள் மூலம் வாழ்க்கையின் விழுமங்களை எடுத்துச் சொல்லி மக்கள் மனதில் விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த விரும்பினார். அதை நிறைவேற்ற பொருத்தமான கதைமாந்தர்களை அவர் படைப்புகளுக்குள் கையாண்டார். தன்னுடய நாவல்களில், கதாபாத்திரங்கள் சுதந்திரமாக வலம்வந்து தங்கள் இயல்புகளை வெளிப்படுத்துவதற்குத் தகுந்தாற்போல் கதைப் பின்னல்களை அமைத்தார். 

‘‘ ‘இளமையில் நெஞ்சில் ஒரு முள்’ என்ற கதை படித்தேன். நெஞ்சம் தெரிந்தது; முள் தெரியவில்லை. 40 வயதில் படித்தபோது நெஞ்சமும் தெரிந்தது; முள்ளும் தெரிந்தது’’ என்று மு.வ-வின் படைப்பு குறித்துச் சொன்னவர் எழுத்தாளர் மு.தங்கராசன்.

 

நாவல்கள் களம்!
முறையற்ற வேகம் வாழ்க்கையைக் கெடுத்துவிடும் என்கிற பதத்தைத் ‘வாடாமலரி’லும், இல்லறத்தைத் தொடங்கும் தம்பதியர்... பிறர் என்ன நினைப்பார்களோ என்று எண்ணாமல், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்பதை, ‘கள்ளோ காவியமோ’ நாவலிலும், உணர்ச்சிக்கு முதன்மை தராமல் அறிவுவழி வாழ்ந்தால் வாழ்க்கை நன்கு அமையும் என்கிற கருத்தை, ‘அகல் விளக்கி’லும், ஒருவனோடு வாழ்கிறபோது அவனுக்கு நேர்மையாக நடந்துகொள்வதே கற்பு என்பதை, ‘கரித்துண்டி’லும் சுவைபடச் சொல்லியிருப்பார் மு.வ. அவர், வாழ்கையின் விழுமங்களை வெளிப்படுத்தவே கதைக் களத்தைப் பயன்படுத்திக் கொண்டார் என்றால் மிகையாகாது.

மனித சிந்தனையின் பிரதிநிகள்!
மு.வ-வின் முன்னாள் மாணவரும், தமிழறிஞருமான இரா.தண்டாயுதம், ‘‘டாக்டர் மு.வ-வின் நாவல்களையும் சமுதாயத்தையும் தனித்தனியே பிரித்துப் பார்க்கவே முடியாது. மிக மேலான சிந்தனையில் நிற்கும் சான்றோர் ஆயினும், சமுதாயத்தை எவ்வளவு கூர்த்த விழிகளோடு இவர் நோக்குகிறார் என்பதை இவருடைய நாவல்களே தெளிவாகக் காட்டும்’’ என்றார். 

பேராசிரியர் கைலாசபதியோ, ‘‘வரதராசனாரின் நாவல்களில் வரும் பாத்திரங்கள் எலும்பும் தசையும் கொண்டு ஆக்கப்படுவன அல்ல. மனித சிந்தனையின் பிரதிநிகளாக உள்ளனர்’’ என்றார். இப்படி, தமிழர்களுடைய அறியாமையைப் போக்கும் விதமாகவும், தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புகளை நினைவுகூறும் விதமாகவும் சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தும் விதமாகவும் மு.வ-வின் நாவல்கள் வெளிவந்தன. அவருடைய நாவல்கள் அனைத்தும் மாற்றத்துக்கான விதை என்பதை இதன்மூலம் நாம் அறியலாம்.

மு.வ-வின் பேராவல்!
‘‘பெரியோர், சான்றோர்களோடு இளைஞர்கள் பழகி நன்னெறிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். அது, இயலாதபோது அவர்கள் எழுதிய நூல்களையாவது கற்று வாழ்வில் நெறியோடு வாழவேண்டும்’’ என்று இளைய சமுதாயத்துக்கு அறைகூவல் விடுத்த அவரின் பேராவல், ‘‘அறிவியல் முன்னேற்றத்தை அறிந்து ஒழுகவேண்டும். நல்லது, கெட்டது அறிந்து இளைய சமுதாயம் வாழ்க்கை நடத்த வேண்டும். பாலியல் தொடர்பு வாழ்வில் அளவோடு இருக்க வேண்டும். மக்கள் வாழ்வின் விழுமியங்களை வழுவாது பின்பற்ற வேண்டும்’’ என்பவைதான்.

‘‘தமிழ்நாடு உயர வேண்டும் என்றால், இங்குள்ள மலையும் காடும் நிலமும் நீரும் உயர்தல் அல்ல; இங்கு வாழும் மக்கள் யாவரும் உயர்தல் என்று கருது’’ என்ற மு.வ-வின் முதுமொழிக்கு ஏற்ப அவருடைய வழியை நாமும் பின்பற்றுவோம்.

- ஜெ.பிரகாஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close