Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இவ்ளோ இனிமையானதா வாழ்க்கை!? #வாழலாம்வாங்க

ஒரு நிமிடம்... உங்களிடம் ஒரு கேள்வி... நீங்கள் ஏன் வாழ வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதிலை உங்களுக்குள் நீங்களே ஒரு முறை சொல்லிவிட்டு... இவர்கள் சொல்லும் பதில்களைப் படியுங்கள். 

ஒரு சமையல்காரர்:

 " நான் ஒரு முறை கடற்கரையில் நடந்து கொண்டிருந்தேன். அது விடியற்காலை நேரம். நம் உள்ளங்கையில் வைக்கும் அளவிற்கான சின்னச் சின்ன "ஆலிவ் ரிட்லி" ஆமைக் குஞ்சுகள். முட்டையிலிருந்து அப்பொழுது தான் வெளிவந்திருந்தன. அப்படியே... மெதுவாக ஊர்ந்து அலைகளிடம் சென்றன. முதன் முறை தண்ணீர் அதன்மேல் பட்டவுடன் ஒரு நொடி... குழப்பம், பயம், ஆச்சரியம் என பல உணர்வுகள்... பின்பு, இதுதான் நம் வாழ்க்கை என்பது அவைகளுக்குப் புரிந்தன. அடுத்த அலை வரும்பொழுது உற்சாகமாக... அந்த அலைகளோடு கடலுக்குள் சென்று விட்டன... இதுபோன்ற இயற்கையின் பேரழகான காட்சிகளைக் காண நான் நிச்சயம் உயிரோடு இருக்க வேண்டும்..."

 

ஒரு புகைப்படக்காரர்:

"தாஜ்மஹால் போயிருந்தேன்... அங்கு ஒரு குடும்பம்... அதைப் பார்த்து பிரமிப்பது... போட்டோ எடுத்துக் கொள்வது... குழந்தைகளோடு விளையாடுவது...ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது என இருந்த அந்த குடும்பம் தாஜ்மஹாலைவிட எனக்கு அழகாகத் தெரிந்தது. " 

 

ஒரு கல்லூரி மாணவி:

"ஏனென்றால் எனக்கு சாக்லேட்டும், ஐஸ்கிரீமும் ரொம்பப் பிடிக்கும்..."

 

கட்டிட பொறியாளர்:

" காலையும், மாலையும் பறவைகள் பறப்பது அத்தனை அழகு..."

 

" வானவில்லைப் பார்க்க..." , "மழையில் நனைய...", " பட்டாம் பூச்சிகளைப் பிடிக்க...", " குதிரை ஓட்ட...", " கடலில் நீச்சலடிக்க...", " யானைகளின் தும்பிக்கையைத் தொட..." ," அடிபட்ட நாய்களுக்கு உதவிட..." இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணங்கள். இந்தக் குறிப்பிட்ட பதில்களை இங்கு சொல்ல முக்கிய காரணம்... வாழ்வதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் மிகவும் சிறியவை தான்... ஆனால், அது அவர்களுக்குத் தரும் மகிழ்ச்சி அளவிடமுடியாதது. 

"சிறியவை தான் பேரழகு"... வாழ்வின் ஓட்டத்தில் நாம் கவனிக்க மறுக்கும், மறக்கும் சின்னச் சின்ன விஷயங்கள் தான் நமக்கான மகிழ்ச்சிகளை ஒளித்து வைத்திருக்கும் பெட்டகங்கள்.   உங்களின் பெட்டகம் எது என்பதை கண்டுபிடியுங்கள்... அந்த சின்ன விஷயத்தில் இருந்து உங்களுக்கான பெரிய மகிழ்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள்... அதற்கு முன், சிறிய புன்னகையோடு இந்தக் கட்டுரையைப் படித்து முடியுங்கள். உங்களின் இன்றைய நாளை உற்சாகமாகத் தொடங்குங்கள்... மகிழ்ச்சி !!!!

- இரா.கலைச்செல்வன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ