Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மலேஷியாவில் இருந்து தமிழகம் வந்து காதல் வளர்க்கும் தாம்பூலம்!

தாம்பூலம்

ஆன்மீகத்தில், வழிபாட்டில் மட்டுமின்றி, தமிழர் வாழ்வின் முக்கிய தருணங்கள் அனைத்திலும் ஒன்றியிருக்கிறது வெற்றிலை தாம்பூலம். பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் தொடங்கி, வீடுகளில் நடக்கும் நல்லது கெட்டதுகள் வரை எல்லாவற்றிலும் வெற்றிலை தாம்பூலம் தான் பிரதானம். ஆவூர் கொழுந்து வெற்றிலை, கல்யாணபுரம் கிளிஞ்சல் சுண்ணாம்பு, குடவாசல் கொட்டைப்பாக்கு, கும்பகோணம் நெய்ச்சீவல்.. இப்படி தாம்பூலத்தின் ஒவ்வொரு அங்கத்துக்கும் ஒவ்வொரு ஊர்ச்சிறப்பு இருக்கிறது. மேலும், எந்த நிகழ்வுக்கு எப்படி தாம்பூலம் வழங்கவேண்டும், எப்படி தாம்பூலம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் மக்கள் இலக்கணமே வகுத்து வைத்திருக்கிறார்கள்.

சில பகுதிகளில் தாம்பூலம் என்பது ஒருவகை உரிமை. கோவில்களில் திருவிழா நடக்கும்போது உரிமைக்காரர்கள் அத்தனை பேருக்கும் "காளாஞ்சி" கொடுக்க வேண்டும். ஒரு தேங்காய்மூடியில இரண்டு வெற்றிலை, ஒரு பாக்கு சேர்த்து கொடுப்பது தான் காளாஞ்சி. இதைக் கொடுக்கவில்லையென்றால் ஊருக்குள் பிரச்னை வந்துவிடும். சுப காரியங்களுக்கு உறவுக்காரர்களை அழைக்கும்போது, தட்டில் தாம்பூலம் வைத்தே அழைக்க வேண்டும். இல்லையென்றால், தங்களை மதிக்கவில்லை என்று சொல்லி நிகழ்ச்சிக்கு வரமாட்டார்கள். சுபகாரியங்களுக்கு வரும்போது மாமன் மச்சான் உறவுகளுக்கு, பங்காளி முறைமைக்காரர்கள் வாசலில் நின்று தாம்பூலம் கொடுத்து வரவேற்க வேண்டும். இல்லை என்றால், ஜனக்கட்டு இல்லாதவன் என்று கேலி பேசத் தொடங்கி விடுவார்கள். அதேபோல் பெண், மாப்பிள்ளை நிச்சயம் செய்யும்போதும் தாம்பூலம் மாற்றிக்கொள்வார்கள். தாம்பூலத்தை நடுவில் வைத்து சத்தியம் செய்யும் வழக்கமும் சில பகுதிகளில் உண்டு. இறப்பு வீடுகளில், பனையோலை கொட்டான்களில் வெற்றிலை, தாம்பூலம் வைக்க வேண்டும். இறந்தவர்களின் வாயிலும் தாம்பூலம் வைத்துக் கட்டும் பழக்கம் உண்டு. அப்படிக் கட்டினால் உடம்பில் இருந்து கிருமிகள் வெளியே பரவாது. 

தாம்பூலம் போடுவது பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உண்டு. "காதலை மேம்படுத்தும் பொருளாக"த் தாம்பூலத்தைக் குறிப்பிடுகின்றன இலக்கியங்கள். அக்காலத்தில், அரசர்களுக்கு தாம்பூலம் மடித்துக் தருவதற்கென்றே "அடப்பக்காரன்" என்றொரு பணியாள் இருப்பாராம். அரசர்கள் போடும் தாம்பூலத்தில் பல ஸ்பெஷல் அயிட்டங்களும் இருக்குமாம். ஒரு கொழுந்து வெற்றிலை; சிறிய பாக்கு; ஒரு மிளகு; ஒரு கிராம்பு; சில கற்கண்டு துண்டுகள்; இரண்டு சீரகம்.. இவற்றை வைத்து, இலை முழுதும் கிளிஞ்சல் சுண்ணாம்பு தடவி நான்காக மடக்கித் தருவாராம். மென்றால் சுகந்தமான வாசனை நாசியெங்கும் பரவுமாம். தாம்பத்யமும் மேம்படுமாம்.  

"தஞ்சை பெரியகோவில் பணிகள் நடந்தபோது, குஞ்சரமல்ல பெருந்தச்சன் நந்தி சிலையை செதுக்கிக்கொண்டு இருந்தார். அவருக்கு பக்கத்தில் நின்ற அடப்பக்காரன் தாம்பூலம் மடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தான். கோவில் பணிகளைப் பார்வையிட வந்த ராஜராஜன், சிலையின் அழகையும், பெருந்தச்சனின் வேலைப்பாட்டையும் பார்த்து வியந்து, பெருந்தச்சனை கௌரவப்படுத்துறதுக்காக அடப்பக்காரனை போகச்சொல்லிட்டு, தானே தாம்பூலம் மடித்துக் கொடுத்தாராம்..."

பெரியகோவில் பற்றிய கதைகளில் இந்தத் தாம்பூலக் கதையும் ஒன்று. 

பெரியகோவியோடு இணைந்த இன்னொரு தாம்பூலச் செய்தியும் உண்டு. கோவிலைக் கட்டிமுடித்து, லிங்கத்தை பிரதிஷ்டை செய்தபோது அஷ்டபந்தன மருந்து ஒட்டவில்லையாம். கருவூர்தேவர் வந்து தன்னுடைய வாயில் இருந்து தாம்பூலத்தை உமிழ்ந்தபிறகு தான் மருந்து ஒட்டியதாம். 

தொன்மத் தமிழர்கள் தாம்பூலத்தை மருந்தாகவே கருதினர். வெற்றிலை, காரம் மிகுந்தது. அதில் உள்ள ஏழு நரம்புகளும், ரத்தம், நரம்பு, எலும்பு, தசை, சீழ், கொழுப்பு, முடி ஆகிய சப்த தாதுக்களை மேம்படுத்த வல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு தாம்பூலப்பை தருவது தமிழர்களின் மரபு. மரியாதை, கௌரவம் ஆகியவற்றின் அடையாளமாகவும் தாம்பூலம் இருக்கிறது. சிவவழிபாட்டில், லிங்கம் இல்லாத இடங்களில் வெற்றிலையை ஆவுடையாகவும், பாக்கை சிவமாகவும் கருதி வழிபடுவதுண்டு. 

துவர்ப்பு சுவையுடைய பாக்கில் இரும்புச்சத்து நிறைய உண்டு. சுண்ணாம்பு கால்சியம். எலும்புகளை வலுவாக்க வல்லது. ஆனால், தக்க அளவில் பயன்படுத்த வேண்டும். அதிகம் சேர்ந்தால் வாய் புண்ணாகிவிடும். பசுமை தவழும் இரண்டு கொழுந்து வெற்றிலை, ஒரு துண்டு பாக்கு அல்லது ஒருபிடி சீவல், நடுவிரல் நுனியளவு சுண்ணாம்பு.. இதற்குமேல், சிறிய ஏலக்காய், கிராம்பு.. இதுதான் ஒரிஜினல் தாம்பூலம். நன்கு அனுபவமுள்ளவர்கள் தாம்பூலம் போடுவதே அழகு தான்.  

சிறுவர்கள் வெற்றிலை போட்டால் கோழிமுட்டும் என்று மிரட்டுவார்கள். சிறுவயதில் வெற்றிலை போடும் பழக்கம் தொற்றிக்கொண்டால் விரைவிலேயே பற்கள் காவிநிறமாகிவிடும் என்பதால் இந்த மிரட்டல். அதேபோல் இரண்டு வெற்றிலை ஒட்டிக்கொண்டிருந்தால், பெண்கள் அதை மாமன் முறையுள்ளவர்களிடம் கொடுப்பார்கள். அதை வாங்காமல் தவிர்ப்பது மாமன் சாமர்த்தியம். என்னவோ, ஏதோவென்று கையில் வாங்கிவிட்டால், முறைப்பெண்ணுக்கு புத்தாடை வாங்கித்தர வேண்டும். திருமணத்தன்று இரவு, சாந்தி முகூர்த்த தருணத்தில் மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துத்தர வேண்டும். கேலி, கிண்டலோடு நிறைவுறும் இந்த விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமானது. தாம்பத்யத்தை மேம்படுத்தும் சக்தி தாம்பூலத்துக்கு இருப்பதும் இதன் பின்னணி. தாம்பூலம் போட்டபிறகு பெண்ணின் நாக்கும், உதடுகளும் நன்கு சிவந்தால் கணவன் மீது மிகவும் பாசமாக இருப்பாள் என்று கேலி செய்வார்கள்.       

வெற்றிலையின் பூர்வீகம் மலேசியா என்கிறார்கள். மடகாஸ்கர் வழியாக தாம்பூலப் பழக்கம் இந்தியாவை எட்டியதாக வரலாறு சொல்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் வெற்றிலையும், கொட்டைப்பாக்கும் தந்து விருந்தினர்களை வரவேற்கும் வழக்கம் இருக்கிறது. இப்படி உலகம் முழுவதும் தாம்பூலப் பயன்பாடு இருந்தாலும் தமிழகத் தாம்பூலம் மக்களின் உயிரோடும், உணர்வோடும், வாழ்க்கையோடும், வழிபாட்டோடும் கலந்திருக்கிறது. 

- வெ.நீலகண்டன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close