Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மறுபடியும் காலேஜ் வாழ்க்கை வாழ ஆசையா? உள்ளே வாங்க பாஸ்!

நம் எல்லோருக்குமே மறுபடியும் ஒருமுறை காலேஜுக்குப் போகணும், பழைய காலேஜ் ஃப்ரெண்ட்ஸோட க்ளாஸ்ல உட்கார்ந்து படிக்கணும், கதை பேசணும், விளையாடணும், கலாய்க்கணும்னு ஆசை இருக்கும். அந்த வாழ்க்கையை மறுபடியும் வாழ முடியாது, ஆனால் அந்த வாழ்க்கையின் நினைவுகளை மீட்டெடுத்து மனசில் ஓட்டிப் பார்க்கலாம். இப்போ ஓட்டிப் பார்க்கலாமா?


பள்ளிப்படிப்பை முடித்ததும் பத்து ரூபாய்க்கு ஃபைல் வாங்கிட்டு காலேஜ் தேட ஆரம்பிச்சோம். ஃபைல் பார்க்க, பெரிசாத் தெரியணும்னு 'லெமன் இன் தி ஸ்பூன்', 'மியூஸிகல் சேர்'ல வாங்கிய சர்டிஃபிகேட்களை எல்லாம் தம் பிடிச்சுத் திணிச்சு பிரபுதேவா சைஸ்ல இருந்த ஃபைலை ஶ்ரீகாந்த் தேவா சைஸுக்கு மாற்றியிருப்போம்.
 
'மச்சான், என்ன ஆனாலும் நீயும் நானும் ஒரே காலேஜ்லதான் சேரணும்'னு நம்ம ஃப்ரெண்ட் கையில் 'சப்'னு அடிச்சு சத்தியம் பண்ணோம். ஃபார்ம் வாங்க காலேஜ் காலேஜாக அலைந்ததன் விளைவு, எந்த காலேஜ்ல எவ்வளவு ரூபாய்க்கு ஃபார்ம் விற்கிறாங்க, கேன்டீன்ல எவ்வளவு ரூபாய்க்கு போண்டா விற்கிறாங்கங்கிற தகவல் நமக்குத் தெரிந்தது. 
ஃபார்ம் வாங்க லைனில்  நிற்கும்போது நல்லவன் ஒருத்தன் நண்பனா அறிமுகம் ஆனானே. நம்மை மாதிரியே அவனும் புதுசாதான் இந்த காலேஜுக்குள் அடியெடுத்து வெச்சுருக்கான்னுகூட யோசிக்காம, ஏதோ பரம்பரை பரம்பரையா இந்த காலேஜுக்குள்ளேயே கூடு கட்டி வாழ்ந்து வர்றவன் மாதிரி அவன்கிட்ட காலேஜ் பத்தின சந்தேகங்களை அள்ளித் தெளிச்சோம். 'பாஸ், எனக்கும் ஒண்ணும் தெரியாது பாஸ்...' னு குரல் உடைஞ்சு சொன்னானே அந்த அப்பாவி.

காலேஜின் முதல்நாள், அயர்ன் பண்ண சட்டையை எம்பிராய்டரி போட்ட ஜீன்ஸ்ல இன்ஷர்ட் பண்ணி பட்டாசா கிளம்பினோம். ஜீன்ஸ்லாம் போட்டுவரக் கூடாதுனு காலேஜில் கண்டிக்க, ஜீன்ஸைத் தவிர எங்கிட்ட எதுவும் இல்லைனு மனசுக்குள் புலம்பினோம். ஸ்கூல் படிக்கும்போதுதான் அப்புராணியாவே வாழ்ந்துட்டோம், இங்கேயாவது பெரிய டான் ஆகிடணும்னு ஆசையா மாப்பிள்ளை பெஞ்சை எட்டிப் பார்த்தோம். ஆல்ரெடி அங்கே ஹவுஸ் ஃபுல் ஆகியிருக்க, மூணாவது பெஞ்சில் கண்ணாடி போட்ட பையன் பக்கத்தில் உட்கார்ந்தோமே...
 


காலேஜ் ஆரம்பிச்சு ஒரு வாரத்துக்கு வெறும் அறிமுகம் மட்டும்தான். தட்டுத் தடுமாறி 'ஐ யம் எபினேஷ். ஐ யம் ஃப்ரம் எருமைக்கிடாபட்டி' என ஆங்கிலத்தின் அடிமட்டம் வரை சென்று ஆசிரியர்களை அரட்டிவிட்டாய்ங்களே நம்ம பசங்க. செல்ஃப் இன்ட்ரோ நடக்கும் நேரங்களில் பொண்ணுங்க எழுந்து சொல்லும்போது மட்டும் மயான அமைதி நிலவுச்சே... நமக்குக் கொடுத்த ரோல் நம்பரை நியூமராலஜிக்கு உட்படுத்தி சோதனை பண்ணியிருப்போம். கூட்டுத்தொகை எட்டுனு வந்திருந்தால் வேதனைப்பட்டிருப்போம். நம்ம ரோல் நம்பருக்கு முன்னாடியோ பின்னாடியோ ஃபர்ஸ்ட் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் பையனின் நம்பர் வந்தால் செம ஜாலி ஆகியிருப்போம். ஏன்னா, அப்போ நமக்குத் தெரியாது பரீட்சையில் அவிய்ங்க ஆன்ஸர் பேப்பர் இல்லை.. கொஸ்டின் பேப்பரையே நமக்குக் காட்ட மாட்டாய்ங்கனு. பெஞ்சில் தாளம் போடுற எக்ஸ்பர்ட் ஒருத்தன் இருந்தான். அவனை வாசிக்கச் சொல்லி பெஞ்ச் மேல புக் வெச்சு, புக் மேல காது வெச்சுக் கேட்டோம். நம்ம ஃப்ரெண்ட்ஸ் எத்தனைப் பேர் மேல எத்தனை முறை சாக்பீஸை எறிஞ்சு விளையாண்டோம். மூச்சா போயிட்டு இருக்கும்போது முதுகில் தட்டிட்டு ஓடினோமே. நம்ம ஃப்ரெண்ட் வகையா சிக்கும்போது கலாய்ச்சுக் கதறவிட்டோமே...

புதுசா புத்தகம், பேனா, பென்சில், கால்குலேட்டர் எல்லாம் கொடுக்கும்போது, மனசுக்குள்ள புத்தகத்தோட வாசனை சும்மா ஜிவ்வுனு சுத்தி அடிச்சுது. புத்தகத்தை எவனும் ஆட்டையைப் போட்டு நம்ம எதிர்காலத்தில் ஒட்டையைப் போட்டுடக் கூடாதுனு பயந்து ஒவ்வொரு பக்கத்திலேயும் பெயர் எழுதி வெச்சோம். போன வாரம் நம்மகிட்ட கொடுத்த அழி ரப்பரைத் திருப்பிக் கேட்ட பயபுள்ளைகளும் இருந்தாங்களே... கொஞ்ச நாளிலேயே க்ளாஸுக்குள் குட்டி குட்டியா பல குரூப்புகள் உருவாச்சு. எல்லா குரூப்பிலேயும் இருக்கிறது மாதிரி நம்ம குரூப்லேயும் ஒரு அடிதாங்கி கேரக்டர்  இருந்தானே. பட்டப்பெயரைச் சொல்லியே கூப்பிட்டு நிஜப்பெயரை மறந்தவங்களும் இருந்தாங்க. காலேஜில் தண்ணி வரலைனாகூட இவன்தான் காரணம்னு எல்லாப் பிரச்னைக்கும் ஒருத்தனை எழுப்பி கிலி கிளப்புவோமே. டீச்சர்களும் அதை உண்மைனு நம்பி அவனைக் கூப்பிட்டு குனிய வெச்சு கும்முனாங்க. சீனியர்கள் எல்லாம் கிரிக்கெட் விளையாடுறதைப் பார்த்து நாமளும் வீட்ல இருந்து பந்து, பேட்டைத் தூக்கிட்டு வந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சோம். அப்படியே மத்த டிபார்ட்மென்ட்டோடு மேட்ச் போட ஆரம்பிச்சு சில நாட்கள் அதே பொழப்பாவே திரிஞ்சோம். நம்ம க்ளாஸில் இருந்து சிலர் காலேஜ் ஸ்போர்ட்ஸ் டீம்களுக்கு செலக்ட் ஆகும்போது பெருமைப்பட்டுகிட்டோமே...

 

எல்லா டேஸ்காலர்களும் கண்டிப்பா ஒருமுறையாவது ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டிருப்போம். சில ஹாஸ்ட்டலில் இன்டெர்வெல்லின்போதே டேஸ்காலர்களின் டிபன் பாக்ஸை ஆட்டையைப் போட்டு அமுக்கியிருப்போம். ஒரு மாசத்துக்குள்ளேயே க்ளாஸ்ல ஒருத்தன் டிசி வாங்கிட்டுப் போயிருந்தான். காதல் பறவைகள் பறக்க ஆரம்பிச்சது. பல பேரோட புக், பேனா, கால்குலேட்டர் எல்லாம் காணாமல் போச்சே. எவன் எடுத்தானு இன்னும் தெரியலை... வேற டிபார்ட்மென்ட்கூட சண்டை போட்டோம். ஆனால், அதில் அந்த சண்டைக்குச் சம்பந்தமே இல்லாத ஒருத்தன்தானே டீச்சர்ஸ்கிட்ட மாட்டினான். அதுவரைக்கும் சாதாரண சமர்த்துப்பையனா இருந்தவன் ரேஞ்சே மாறிடுச்சு. காலேஜுக்குள்  எங்கே சண்டை நடந்தாலும் சந்தேகத்தின் அடிப்படையில் அவனைத்தான் முதல் ஆளா பிடிச்சுட்டுப் போவாங்க.
 
எப்போ பார்த்தாலும் பொண்ணுங்ககூடவே பேசிட்டு இருக்கிற ஒரு குரூப் இருந்துச்சு. இன்னொரு பக்கம் நம்ம க்ளாஸ்ல எத்தனைப் பொண்ணுங்க இருக்காங்கங்கிற டீட்டெயிலே தெரியாத இன்னொரு குரூப்பும் இருந்துச்சு. 'எவன் எக்கேடு கெட்டா நமக்கென்ன நீ ரசத்தை ஊத்து'ங்கிற மாதிரி எல்லா நேரமும் அசைன்மென்ட் எழுதிட்டு இருக்கிற ஒரு குரூப்பும் இருந்துச்சே. காலேஜுக்குள் டாப் அடிக்க ஃபேவரைட் ப்ளேஸ் ஒண்ணு பிடிச்சு வெச்சுருந்தோம். எல்லா நேரத்திலேயும் கரெக்டா அங்கே ஆஜராகியிருப்போம்.
ட்ரெயினிங் லெக்சரர்களை அண்ணா, அக்கானு உரிமையா கூப்பிட்டோம். அவங்க வகுப்புனாலே இனம் புரியாத ஒரு சந்தோஷம் வந்தது.' ரெப்'ங்கிற பெயரைக் கேட்டால் ஒட்டுமொத்த க்ளாஸுமே கொலைவெறி ஆகுமே. நம்மளை நாலு வார்த்தை பேச விடாம, நிம்மதியாத் தூங்கவிடாம டார்ச்சர் பண்ணுவாய்ங்க இந்த ரெப் பக்கிங்க. 'மேம் இன்னைக்கு எக்ஸாம் வைக்கிறேனு சொன்னீங்க...'னு மறந்து போன புரொபஸருக்கு ரிமைண்டர் மணி அடிச்சு நமக்கு சாவு மணி அடிக்கிறதுதானே இவிய்ங்களுக்கு வேலை.

ஒருமுறை நம்ம கைக்கு ரெக்கார்டு நோட்டு வந்துட்டா, ஒண்ணு போட்டுத் தாக்கும் இல்லைனா போட்டுப் பொளக்கும். ரெக்கார்டு எழுத கொடுத்த நேரத்தில் எல்லாம் ஹேண்ட் கிரிக்கெட் விளையாடி நேரத்தை ஒப்பேத்திட்டு கடைசி நாலு நாளில் உட்கார்ந்து நானூறு பக்கத்தை எழுதினோம். நம்ம ரெக்கார்டு நோட்டில் நம்ம குடும்பத்தில் இருக்கிறவங்க அத்தனைப் பேரின் கையெழுத்தும் இருக்கும்.  அசைன்மென்ட், ரெக்கார்டு நேரங்களில் மட்டும் பகையெல்லாம் மறந்து ரெப்கிட்ட நோட் கேட்டு பல்லைக் காட்டி நின்றோம். ஆனால், அவனுங்க எங்கே தந்தாங்க, ராஸ்கேல்ஸ்...

 

சர்க்குலர்களைப் பார்த்தாலே லீவ் என்று குதூகலித்தோம். கடைசியில் அது ' புக் ஃபீஸ் கட்டாதவங்க சீக்கிரம் கட்டுங்க...'னு சொல்ற சர்க்குலரா இருக்கும். காலேஜ் இருக்கும்போது 'எப்படா லீவு விடுவாங்கனு?' யோசிப்போம். லீவு விடும்போது தானே தெரியும் நாம எவ்வளவு தூரம் நம்ம ஃப்ரெண்ட்ஸையும், காலேஜையும் மிஸ் பண்றோம்னு.
கல்ச்சுரல்ஸ், ஸ்போர்ட்ஸ் டே, ஆன்வெல் டே... ஏன் பேரன்ட்ஸ், டீச்சர்ஸ் மீட்டிங்கூட திருவிழா மாதிரிதானே இருக்கும். கல்ச்சுரல்ஸ், ஸ்போர்ட்ஸ் டேக்களில் ஆட்டம், பாட்டம், போட்டோ, வீடியோனு செமத்தியா என்ஜாய் பண்ணோமே. முதல் செமஸ்டரில் முக்கி முக்கி படிச்சு, அடுத்த செமஸ்டரில் ஹேண்ட் கிரிக்கெட் விளையாண்டு, அதற்கடுத்த செமஸ்டர்களில் வீடியோ கேம், ஃபேஸ்புக், தூக்கம்னு ஃபைனல் செமஸ்டர் வரைக்கும் ஓட்டினோம். அப்போ  நம்ம சரித்திரத்தை கொஞ்சம் திரும்பிப் பார்க்கும்போது நாம தாண்டாமல் விட்ட பல கண்டங்களில் இரண்டு கண்டங்கள் மட்டும் சப்பணங்கால் போட்டு உட்கார்ந்திருக்குமே. அதான் அந்த எம் 1, எம் 2...

ஒரே அட்டெம்ப்ட்டிலேயே ஆல் க்ளியர் பண்ணியிருப்போம். இல்லை பத்து, பதினைந்து அரியர் வெச்சு, அதைக் காலையில் ஒண்ணு மதியம் ஒண்ணுனு மாங்கு மாங்குனு எழுதி பார்டர்ல பாஸ் ஆனோம். நம்ம குரூப்லேயே ஆல் க்ளியர் பண்ண பையனை பொடனியில் அடிச்சு உட்கார வெச்சு பரீட்சைக்கு எது வரும்னு கேட்டு பிட் ரெடி பண்ணோம். 
காலேஜ் லைஃப் இவ்வளவு வேகமா முடிஞ்சுடுச்சேனு கடைசியில்தானே ஃபீல் பண்ணோம். ஃப்ரெண்ட்ஸ் எல்லோரையும் விட்டுட்டுப் போகப்போறோம்ங்கிற உணர்வு நம்மளை மல்லாக்கப் படுக்கப்போட்டு நெஞ்சில் கருங்கல்லை அடுக்கி வெச்சது மாதிரி கனமா இருந்துச்சு. இத்தனை வருசமா நாம சரியா பேசிடாத நம்ம க்ளாஸ்மேட்கள்கூட அன்னைக்கு தான் பேசினோம். எல்லோர் முன்னாடியும் அழக் கூடாதுனு வைராக்கியமா இருந்து வீட்டுக்கு வந்து அழுதோம்.

'இனி வருஷா வருஷம் இதே காலேஜ்ல நாம எல்லோரும் மீட் பண்ணுவோம், அடுத்த மாசம் டூர் போவோம்'னு பிளான்கூட பண்ணோம். போன், ஃபேஸ்புக்ல டச்ல இருப்போம்னு சபதம் எடுத்தோம். இப்போ நம்ம காலேஜ் வாட்ஸ் - அப் குரூப்ல 'ஹாய் ஃப்ரெண்ட்ஸ்'னு நாம மெசேஜ் அனுப்பினாலும் ரிப்ளை பண்ண மாட்டுதுங்க பக்கிங்க... யார் வீட்டிலாவது விசேஷம்னாதானே இப்போ எல்லாம் பார்க்க முடியுது...

ப.சூரியராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close