Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வந்துட்டேன்னு சொல்லு...பழைய பன்னீர்செல்வமா வந்துட்டேன்னு சொல்லு!

முதல்வர் மருத்துவமனையில் இருப்பதால் 'முக்கிய' பதவிக்கு ப்ரொமோட் ஆகியிருக்கிறார் ராஜ விசுவாசி ஓ.பி.எஸ். தலைமைக்கு சிக்கல் வரும்போதெல்லாம் இப்படி 'சூப்பர் சப்ஸ்டிடியூட்' ஆவது ஓ.பி.எஸ்-ஸின் வழக்கம். வரலாறு இப்படி யூ டர்ன் போட்டுத் திரும்பும்போதெல்லாம் சில காட்சிகளும்கூடவே தொற்றிக்கொண்டு ஓடிவரும். அவற்றின் சின்ன லிஸ்ட்தான் இவை.

* பாசிட்டிவோ, நெகட்டிவோ எப்போதும் செய்திகளில் அடிபட்டுக்கொண்டே இருப்பார்கள் அ.தி.மு.க அமைச்சர்கள். இதை வைத்துதான் தலைமையும் 'உள்ளே வெளியே' ஆடும். ஆனால் இப்போது ஜெ. சிகிச்சையில் இருப்பதால் பூஜை புனஸ்காரங்களைத் தவிர வேறு எந்தப் பராக்கிரமங்களையும் வைத்துக்கொள்ளாமல் அடக்கி வாசிப்பார்கள் அ.தி.மு.க அமைச்சர்கள். 'வாவ், இவரோட தலைமையில் அமைச்சருங்க அடக்கமா இருக்காங்களே' என்ற குட்நேம் ஓ.பி.எஸ்-ஸுக்கு வர வாய்ப்பிருக்கிறது.

* தமிழ்ப் படம் கேங் போல தமிழக அமைச்சரவையிலும் ஒரு கேங் உண்டு. அ.தி.மு.க-வில்தான் எந்தக் காட்சியுமே நிரந்தரம் இல்லையே. ஸோ, அந்த கேங்கும் மாறுதலுக்குட்பட்டதுதான். கேங் லீடர் ஓ.பி.எஸ்-ஸுக்கு செல்வாக்கு உயர்ந்திருப்பதால் பழைய பாசத்தில் கேங் ஆதிக்கம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. டைமிங் குறியீடாக யுவன் வேறு 'Boys are back'பாட்டைப் போட்டிருக்கிறார். இதில் சிலிர்த்துப்போய் 43 கேங் ஆதிக்கம் திரும்ப வர வாய்ப்பிருக்கிறது.

* சும்மாவே சட்டமன்றம் ஆஸ்திரேலியா - நமீபியா டி20 போல ஒன்சைடாகத்தான் நடக்கிறது. இப்போது பவர் சென்டரும் இல்லாததால் குபீர் சடீர் நடவடிக்கைகள் எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை. 'எதுக்கு நடத்திக்கிட்டு?' என்ற சலிப்புதான் இருக்கும். 'சிக்குச்சு பாரு சான்ஸு' என இதைவைத்தே கிடைக்கும் கேப்பில் எல்லாம் அறிக்கைக் குண்டு போட்டு அதிரடிப்பார் கருணாநிதி.

* ஜெ. ஆக்டிவாக இல்லாதபோதுதான் அம்மா புகழ் அதிகமாக ஒலிக்கும். அதன்படி இனி சில நாட்களுக்கு ஆக்கப்பூர்வமாக வேலைகள் நடக்கிறதோ இல்லையோ, 'அம்மா புகழ்' கண்டிப்பாகப் பாடுவார்கள் அமைச்சர்கள். சட்டைப்பையில் அம்மா படம், அம்மா படம் போட்ட பட்ஜெட் பெட்டி என சகலமும் அம்மா மயம்தான்.

* வெள்ளமோ வெயிலோ, மந்தமாக இயங்கும் அதிகார மட்டத்தை ஓப்பனாக விமர்சனம் செய்து வந்தார்கள் மக்கள். இப்போது, 'அவர் கையிலேயும் முழு அதிகாரம் இல்லைல, என்னதான் பண்ணுவார்? பாவம்ங்க அவரு' என அனுதாப ஓட்டுகளை அள்ளுவார் ஓ.பி.எஸ். ஒருவேளை சலிக்காமல் அவர் சூப்பர் சப்ஸ்டிடியூட்டாகத் திரும்பத் திரும்ப களத்தில் இறங்க இதுதான் காரணமோ என்னவோ?

* வார்டு கவுன்சிலர் கூட தெருவிளக்கு உபயம் என கரன்ட் கம்பத்தில் தன் பெயரை பச்சை குத்திக் கொள்ளும்போது நான்தான் டாப் என்பதை கொஞ்சம் கூட வெளியே காட்டிக்கொள்ளாமல் அநியாய அடக்கமாய் வலம் வருவார் ஓ.பி.எஸ். நுனி நாற்காலியில் அமரும் அளவிற்கான தன்னடக்கம் அது. சட்டம் அனுமதித்தால் அம்மா மாஸ்க் அணிந்துகொண்டு அவர் வேலை செய்யக்கூட வாய்ப்பிருக்கிறது. 

* எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெ. என கடந்த 30 ஆண்டுகளில் பேர் சொல்லும் திட்டங்களை(?) அளித்த தலைவர்களுக்கு மத்தியில் ஓ.பி.எஸ் பேரில் ஒரு பக்க அறிக்கை.. அட துண்டு சீட்டு கூட இதுவரை வெளியானதில்லை. இந்த சுயநலமற்ற சூப்பர் குவாலிட்டியை இந்த முறையும் கரெக்ட்டாக பின்பற்றுவார். 

* அரசு சார்பில் வரும் வாழ்த்துகள்தான் அல்ட்டிமேட்டாய் இருக்கும். 'மாண்புமிகு இதயதெய்வம் கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் தங்கத்தாரகை இதயதெய்வம் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க தீபாவளி வாழ்த்துகள்' என அவர் சொல்லி முடிப்பதற்கு முன்பே பொங்கல் வந்துவிடும். அதே டெம்போவில் பொங்கல் வாழ்த்தை ஆரம்பித்தால் தமிழ்ப் புத்தாண்டு வந்துவிடும். அப்புறம் உழைப்பாளர் தினம், சுதந்திர தினம் என அப்படியே போக வேண்டியதுதான்! 

 

 

 

-நித்திஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close