Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கலர்ஃபுல் கலை ‘கட்டைக்கூத்து’... மரபை காக்க ஒரு பள்ளி!

கட்டைக்கூத்து

கட்டைக்கூத்து... நாம் தொலைத்த வண்ணமயமான தொன்மக்கலைகளில் ஒன்று.  தெருக்கூத்தின் இன்னொரு வடிவம். கல்யாண முருங்கையால் செய்யப்பட்ட வித்தியாசமான அணிகலன்களை அணிந்து கொண்டு உக்கிரமாக ஆடும் தெய்வீகக் கலை. வழக்கொழியும் நிலையில் இருந்த இந்தக் கலையை மீட்டு புத்துயிர் அளித்திருக்கிறது கட்டைக்கூத்து குருகுலப் பள்ளி.  

காஞ்சிபுரத்திலிருந்து செய்யாறு செல்லும் வழியில் உள்ள புஞ்சையரசன்தாங்கல் கிராமத்தில் இருக்கிறது  இந்தப் பள்ளி. ஒரு பள்ளிக்கான எந்த அடையாளமும் இல்லை. சுற்றிலும் மரங்கள்... அமைதி ததும்புகிறது. சுவர்களில் ஆங்காங்கே மாணவர்களின் கிறுக்கல் ஓவியங்கள். திறந்த வெளியிலும், குளிர்ச்சியான கீற்றுக் கொட்டகைகளிலும் வகுப்பறைகள் இயங்குகின்றன. எட்டாம் வகுப்பு வரையில்  வழக்கமான பாடத் திட்டத்துடன் கூடிய உண்டு உறைவிடப் பள்ளி. கூடவே, கட்டைக்கூத்து, விவசாயம், ஓவியம் , இசை, வாய்ப்பாட்டு. பிரபலமான கட்டைக்கூத்து கலைஞர் ராஜகோபால், திருமதி ஹென்னா தம்பதியினரால் நடத்தப்படுகிறது இந்தக் குருகுலப்பள்ளி. 

கட்டைக் கூத்துக்கென்றே பிரத்யேகமாக செயல்படும் இந்தப் பள்ளிக்கு ஒரு விசிட் அடித்தோம். 

பள்ளியின் முற்றத்திலிருந்து  கைதட்டல் சத்தம் காதைப் பிளக்கிறது. அன்று ஹென்னா பாட்டிக்கு பிறந்த நாள். மாணவர்கள் எல்லோரும் வாழ்த்து சொல்லியதுடன் திருமதி. ஹென்னாவை அழைத்துச் சென்று ஒரு மரக் கன்றை நடுகிறார்கள். பள்ளியில் யாருக்கு பிறந்த நாள் என்றாலும் ஒரு மரக்கன்றை நட்டு அதை அவர்களே தொடர்ந்து பராமரித்து வர வேண்டுமாம். அன்று மாணவர்களுக்கான கட்டைக்கூத்து அரங்கேற்றம் இருந்ததால் பள்ளி களைகட்டத் தொடங்கியது. ஹென்னா, மாணவர்களுக்கான உடைகளை தயார் செய்ய சென்று விட. மாணவர்களே அவர்களுக்கான ஒப்பனையை செய்து கொள்கிறார்கள். அவர்களை ரசித்தபடியே நம்மிடம் பேசினார் ராஜகோபால். 

" என்னோட சொந்த ஊர் பெருங்கட்டூர். என்னோட தாத்தா , அப்பா எல்லோருமே கூத்துக் கலைஞர்கள் தான். என்னோட அப்பா பொன்னுசாமி வாத்தியார் தமிழகத்துலேயே ரொம்ப பிரபலமான கூத்து வாத்தியார். எனக்கும் கூத்து தான் வாழ்க்கை. கிட்டத்தட்ட  நாற்பது வருஷமா கூத்துல தான் இருக்கேன். ஐரோப்பா முழுவதும் போய் கூத்தாடியிருக்கேன். 2002 -ல இந்த பள்ளியை ஆரம்பிச்சதுதுல இருந்து இப்போ வரைக்கும் 600 குழந்தைகள்  படிச்சுட்டு போயிருக்காங்க. இப்போ வகுப்பறைன்னாவே குழந்தைங்க மிரண்டு ஓடுறாங்க. குழந்தைகளோட இயல்பை புரிஞ்சுக்கிட்டு அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி சொல்லிக் கொடுத்தா தான் குழந்தைகளை தக்க வச்சுக்க முடியும். சில குழந்தைகளுக்கு பாட்டுப் பாடி சொல்லிக் கொடுத்தா பிடிக்கும். சிலருக்கு நடிச்சு காட்டணும். அப்பப்போ வெளிநாட்டுலேர்ந்து நிறைய ஆசிரியர்கள் வந்து தங்கி  வகுப்புகள் எடுத்துட்டு போவாங்க. குழந்தைகள் ரொம்பவே ஆர்வமா கத்துக்குறாங்க.

கூத்துங்கிறது நம்ம வாழ்க்கையோட கலந்த கலை. இதில வர ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு கதை சொல்லும். எந்த ஒரு விஷயத்தையும் கூத்து ரொம்ப எளிமையா ஒருத்தனுக்கு புரிய வைச்சுடும்.  எல்லோரும் சினிமாவால  கூத்து அழிஞ்சுடுச்சுன்னு சொல்றாங்க.  அப்படிலாம் கிடையாது. நிறைய பேர் ரொம்ப ஆர்வமா வந்து கூத்து பாக்குறாங்க. கத்துக்கிறாங்க. அந்த ஆர்வம் இருக்க வரைக்கும் கூத்தை எந்த சினிமாவாலையும் அழிக்க முடியாது! "

தீர்க்கமாகச் சொல்லி முடிக்கிறார் ராஜகோபால். 

ராஜகோபால் பேசி முடிப்பதற்கும் மாணவர்களின் ஒப்பனைகள் முடியவும் சரியாய் இருக்கிறது.  மாணவர்களின் மழலை மொழியில் களைகட்டுகிறது கூத்து! 

- க . பாலாஜி 

படங்கள் : மீ. நிவேதன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close