Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சாட்டையடி தோழி' முதல் 'ஞை' வரை - இந்த இலக்கியவாதிகளே இப்படித்தான் பாஸ்!

இலக்கியவாதிகள் இப்போதெல்லாம் இலக்கியம் எழுதுகிறார்களோ இல்லையோ, 24 மணி நேரத்துக்கு 25 ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் மெசேஜ் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் எப்படி எப்படியெல்லாம் ஸ்டேட்டஸ் போட்டு நம்மைக் கொலையாய்க் கொல்வார்கள், பார்க்கலாமா?

*  இந்த இரவை 

  என்ன செய்வதென்று தெரியவில்லை.

   இந்த இரவு

   என்னை ஒன்றும் செய்யாதபோது

   நான் மட்டும் இந்த இரவை என்ன செய்வது?

   ‘அதெல்லாம் அப்படியே விட்டுரணும்’

   கிஷோர் பேசிக்கொண்டிருக்கிறார்.

   டி.வி.யில் ‘பொல்லாதவன்’

   படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
              
   அதற்கு நான் என்ன செய்ய முடியும்?
   நீங்கள்தான் என்ன செய்ய முடியும்?

- 30.02.16

இரவு 12.03

-------------------------------------------------------------------------------------------


* எனது மூன்று சிறுகதைகள் இந்த மாத ‘அடர் கானகம்’, ’தனிமை நிழல்’, ’ஞை’ இதழ்களில் வெளியாகின்றன. ஆனால் இந்த இதழ்கள் எப்போது வெளியாகும் என்பது மட்டும்தான் தெரியவில்லை.

*  ‘கொண்டேபுடுவேன்’
  குரல் கேட்டது.
  திரும்பிப் பார்த்தேன்.
  சசிகலாவா என்று கேட்டேன்.
  சசிகலா என்றார்.
  எந்த சசிகலா
  என்று நான் கேட்கவுமில்லை.
  அவர் சொல்லவுமில்லை.


* சுமாரான காதல் கவிதை எழுதுவது எப்படி?

 நீ

வந்தால் வாட்ஸ்-அப்
 
போனால் போக்கிமான்

முறைத்தால் முகப்புத்தகம்

நின்றால் நிலைத்தகவல்

‘ஐ லவ் யூ’ என்று சொல்வதைவிடவும்

‘ஐ லைக் யூ’ என்று சொல்வதைத்தானே அதிகம்

நீ விரும்புவாய்.

ஆனால் காதலை மட்டும்

ஷேர் செய்துவிடாதே.

- சுமார் கவிதை குமாரு

------------------------------------------------------------------------------------------------------------

* தேடல்கள் தொடர்கின்றன - மழைக்கவிதை 3258
**************************************************************

மழை பெய்யும்போதெல்லாம்

அது என்

மனசுக்குள்ளும் பெய்கிறது.

மழை பெய்வது

அவளின் சொற்களை நினைவுபடுத்தி

அவள் முகத்தைத் தேடத்தொடங்குகிறேன்.

மழை பெய்தால் ஈசல் வரும்

அவள் சிரிப்பைத் தேடத் தொடங்குகிறேன்.

மழை பெய்தால் மின்னல் வரும்

அவள் கண்களைத் தேடத் தொடங்குகிறேன்.

(எழுதாம விட்டது: மழை நிக்குற மாதிரித் தெரியலையே, ஆமா, இந்தக் குடையை எங்கே வெச்சேன்?)

 

* நீங்க எப்பம்மா வருவீங்க?
***********************************

நீங்க எங்கேதான் இருக்கீங்க சௌகார் ஜானகி?

கலங்கிய கண்களுடனும்

கம்மிய குரலுடனும்

நீங்க எப்பம்மா வருவீங்க?

‘பார்த்த ஞாபகம் இல்லையோ?’

என்று நீங்கள் பாடியதைக்

கேட்ட ஞாபகம் இன்னும் இருக்கிறதே.

அந்த ஒரு பாட்டைத் தவிர

அழுகாச்சிக் காவியத்தை

அடுக்கடுக்காய்த் தந்தவர் அல்லவா நீங்கள்?

வைகோ மேடைதோறும் அழுகிறார்.

சிரிச்சு சிரிச்சு வந்த சீனாகானாவும்

மேடையில் கண்களைக் கசக்குகிறார்.

நீங்க எங்கேதான் இருக்கீங்க சௌகார் ஜானகி?

என்னம்மா ஆச்சு உங்களுக்கு?

எப்பம்மா நீங்க வருவீங்க?

வந்துகொண்டிருக்கிறீர்களா

இல்லை

வந்தும் வராமலும் இருக்கிறீர்களா?

சினேகனின் அடுத்த வீடியோ வருவதற்குள்ளாவது

வந்துவிடுவீர்களா சௌகார் ஜானகி?

(‘சுருளிராஜனின் மாந்தோப்பு’ தொகுப்பில் இருந்து....)

- பொயட்டு பொட்டட்டோ.

படங்கள் : பேயோன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ