Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய மாணவர்களை மேள, தாளத்துடன் வரவேற்கும் அரசுப் பள்ளி!

 

நீங்கள் பள்ளிக்குச் சென்ற முதல்நாள் நினைவில் இருக்கிறதா? எண்ணெய் தடவி, படிய தலை சீவி, புதிய உடை உடுத்தி, கையில் சாக்லெட் அல்லது மிட்டாய் பாக்கெட்டுடன் அப்பா, அம்மாவின் கைப் பிடித்துச் சென்ற அந்த நாள் சிலருக்கு நன்கும் பலருக்கு மங்கலாகவும் இப்போது மனதில் வந்துபோகலாம். தன் பிள்ளை படிக்கப் போகிறான் என பெற்றோர்களின் மனமும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும். ஆனால் இப்போது அந்த நிலை எல்லாம் மாறியே போய்விட்டது. தனியார் பள்ளியில் அட்மிஷன் போடுவதற்கே பெரும்பாடாகி, பெரும் தொகையைச் செலவழித்து பள்ளிக்கு முதல்நாள் அழைத்துச் செல்லும்போது முழு மகிழ்ச்சியும் பெற்றோர்க்கு இருக்குமா என்பது சந்தேகமே. ஆனால் அந்த மகிழ்ச்சியை ஓர் அரசுப் பள்ளி இரட்டிப்பாக்கி தருகிறது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் பல மூடப்படுகின்றன எனும் நிலையில் ஓர் அரசுப் பள்ளியில் புதிய மாணவர்களை மேள தாளத்துடன் வரவேற்கிறார்கள். தேவகோட்டை, சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிதான் அது. விஜயதசமி அன்று பள்ளியில் சேரவிருக்கும் மாணவர்களை மாலை அணிவித்து, மேளம், நாதஸ்வரம் இசைக்க, அந்த மாணவர்கள் வசிக்கும் தெருக்களில் ஊர்வலமாக வலம் வரச் செய்தனர் பள்ளியின் ஆசிரியர்கள். தங்கள் தெருவில் திடீரென்று மேள சத்தம் கேட்கிறதே என வாசலுக்கு வந்து பார்த்தவர்களுக்கு ஆச்சர்யம்.

 

பள்ளிக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்களுக்கு, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர் ஆசிரியர்கள். புதிதாய் பள்ளிக்குள் நுழைந்த மாணவர்கள் பள்ளியின் ஒவ்வொரு பகுதியையும் ஆச்சர்யம் ததும்ப பார்த்தனர். பிறகு, தாம்பாளத்தில் பரப்பி வைக்கப்பட்டிருந்த நெல் மணிகளில் அகரம் எழுதப் பழக்கினர் ஆசிரியர்கள். பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் கார்த்திகா, ராஜேஸ்வரி, தனலெட்சுமி உள்ளிட்ட தங்கள் பள்ளிக்கு வந்திருக்கும் புதிய மாணவர்களுக்கு அபிராமி அந்தாதியைக் கற்றுக்கொடுத்தனர்.

பாடக் கல்வி மட்டுமல்லாமல் அனுபவக் கல்வியும் மாணவர்களுக்கு அவசியம் என பல இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பவர் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம், "வறுமை காரணமாக பள்ளிக்குச் செல்வதையே பாதியில் நின்றுபோகும் மாணவர்கள் ஏராளம். எவ்வளவு சிரமப்பட்டாலும் மாணவர்கள் படிப்பை முழுமையாக முடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெற்றோர்களுக்கு இது புரிய வேண்டும். தங்கள் பிள்ளைகளுக்கு இப்படி சிறப்பான வரவேற்பு தரும் எங்கள் பள்ளியைப் பார்த்து அவர்களுக்கு நம்பிக்கையும் மாணவர்களின் படிப்பை முழுமையாக வழங்க வேண்டும் என்ற எண்ணமும் உருவாகி விடுகிறது" என்கிறார்.

மாணவர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும் இந்தப் பள்ளிக்கு வாழ்த்துகளைச் சொல்வோம். 

- வி.எஸ்.சரவணன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ