Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தனியொருவனுக்கு உணவில்லை எனில்...' #WorldFoodDay

 

 

‘‘உன்னிடம் பணம் இல்லாவிட்டால் உணவே பிரச்னை. பணம் இருந்தால் காதலே சுகம். ஆனால், இரண்டும் இருந்தால் அதுவே சுகவாழ்வு’’ என்றார் அமெரிக்க நாவலாசிரியர் ஜெ.பி.டொன்லெவி. 

உணவு, உடை, உறைவிடம் மூன்றும் மனிதனின் அத்தியாவசியத் தேவைகள். இதில் முதன்மையானது உணவு! மனிதனுக்கு மட்டுமல்ல... உயிரினங்கள் அனைத்துக்கும் உணவே பிரதானத் தேவை. உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16-ம் தேதி உலக உணவுத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உணவுத் தினத்தின் நோக்கம்!
கடந்த 1979-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்தத் தினம் அறிவிக்கப்பட்டது. இந்த நாளில் ஆண்டுதோறும் 150-க்கும் மேற்பட்ட நாடுகள் உலக உணவுத் தினத்தைச் சிறப்பிக்கின்றன. ‘அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும்’ என்ற நோக்கத்தில் உலக உணவுத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உணவு தொடர்பான பிரச்னையில் மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதும், உலக அளவில் வறுமையை ஒழிப்பதுவும் இதன் முக்கிய நோக்கம். உணவுப் பஞ்சமும், விலைவாசி ஏற்றமும் பல நாடுகளில் ஆட்சிக் கட்டிலையே அடியோடு சாய்த்திருக்கின்றன. அதனால்தான் பாரதி, ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றார்.

உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் போதுமான அளவு உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும், ஒன்பதில் ஒருவர் பட்டினி கிடக்கவே நேரிடுகிறது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பட்டினியால் பல உயிர்கள் காவு வாங்கப்படுகின்றன. நம் நாடு, உணவு உற்பத்தியில் தற்சார்பு எய்திய பிறகும் ஊட்டச்சத்துக் குறைபாடு பெருமளவில் தொடர்கிறது. இதற்குக் கல்வியறிவு, விழிப்பு உணர்வு மட்டும் காரணம் அல்ல... உணவு இல்லாததும், அந்த உணவு ஆரோக்கியமற்றதாக இருப்பதுவுமே காரணம். வேலையின்மையால் வறுமை நிலவுகிறது. வறுமையினால், ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரிக்கிறது. இதனால் அதிக அளவில் பெண்களும், சிறுகுழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள பெண்கள்; அந்தப் பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம்; அவர்களின் வயதுக்கு ஏற்ற எடை இல்லாமை; எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகள்.... என சங்கிலித் தொடராய் இதன் பாதிப்புகள் நீள்கிறது.

 

வீணாகும் உணவுப் பொருட்கள்!
இந்த உலகில் உண்பதற்கு உணவு இல்லாமல் ஒரு மனிதன் பசியால் இறப்பது என்பது மிகவும் கொடுமையான விஷயம். உயிரினங்களில் மனிதனைத் தவிர, வேறு எந்த உயிரினமும் உண்ண உணவில்லாமல் பசியால் இறப்பதில்லை. பறவைகளும், விலங்குககளும் தனது உணவையோ, இரையையோ வீணடிப்பதில்லை. ஆனால் மனிதன் மட்டுமே உணவுப் பொருட்களைப் பதுக்கவும் வீணடிக்கவும் செய்கிறான். பதுக்குவதைவிட அதிக அளவில் உணவுப்பொருட்களை வீணடிக்கவே செய்கிறான். உலகின் உணவு உற்பத்தியில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உணவு, அதாவது 1.3 பில்லியன் டன் உணவு வீணாக்கப்படுகிறது. குறிப்பாக உணவை வீணடிப்பதில், இந்தியர்கள் முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கின்றனர். பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில், சரிபாதி உணவு ஒவ்வொரு வருடமும் வீணாக்கப்படுகிறது. பெரும்பான்மையாக வீணடிக்கப்படும் உணவுப்பொருட்களில் பழங்களும், காய்கறிகளும் அடங்குகின்றன. 

இந்தியாவில் கோயில் விழாக்கள், அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், திருமணங்கள்.... என சுபகாரிய நிகழ்வுகளில் பரிமாறப்படும் உணவுகளில், பாதிக்கு மேல் குப்பைக்குத்தான் போகின்றன. உதாரணத்துக்கு சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சில பொருட்களைச் சாப்பிடாமல் அப்படியே ஒதுக்கிவைத்துவிடுவர். இதேபோல் சிறுவர்களும் தங்களுக்குப் பரிமாறப்படும் உணவு வகைகளில், முக்கால்வாசியை சாப்பிடாமல் வீணடித்துவிடுவர். இம்மாதிரி உணவு வீணடிக்கப்படுவதில் ஹோட்டல்களுக்கு முக்கியமான இடம் உண்டு. தற்போது இந்தியாவில் அதிக அளவில் ஹோட்டல்கள் திறக்கப்படுகின்றன. இங்கு வாடிக்கையாளர்கள் வராதபட்சத்தில் தயாரான உணவுப் பொருட்கள் அனைத்தும் வீணாக கெட்டுப் போகிறது. இப்படிப் பல வகையிலும் இந்தியாவில் உணவுப் பொருட்கள் வீணாகி வருகின்றன. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மட்டும் 27 கோடி பேர் வறுமையில் வாடுவதாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு சொல்கிறது.

ஜெர்மனியில் உணவுக்கு மரியாதை!
இந்தியாவில் விசேஷ நிகழ்ச்சிகளின்போது, பரிமாறப்படும் உணவு வகைகளில் மீதம் வைத்துவிட்டு எழுவது மரியாதை நிமித்தமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் உணவுப் பொருட்களை வீணாக்குபவர்களை மரியாதைக் குறைவாகவேப் பார்க்கிறார்கள். அந்த நாட்டுக்குப் புதிதாகச் சுற்றுப்பயணம் சென்ற இந்தியர் ஒருவர் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில், தனது நண்பர்களுடன் சாப்பிட்டுள்ளார். எல்லோரும் சாப்பிட்டு முடித்ததுபோக நிறைய உணவு வகைகள் மீதமாகிவிட்டன. இதனைப் பார்த்த ஹோட்டல் ஊழியர் அவர்கள் சாப்பிட்டதற்கான பில் தொகையைக் கொடுக்காமல் கடும் சினத்துடன் சென்றுவிட்டார். அப்படி அந்த ஊழியர் கோபம் கொண்டதற்கான காரணம் புரியாத இந்தியர் பில்லுக்காக நெடுநேரம் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. நீண்டநேரத்துக்குப் பிறகு அந்த இந்தியரிடம் பில்லினைக் கொண்டுவந்து கொடுத்த அந்த ஊழியர், ''எங்கள் நாட்டில், உணவுப் பொருட்களை இப்படி வீணடிப்பது விரும்பத்தகாத விஷயமாகவே பார்க்கிறோம். தயவுசெய்து, இனியாவது இப்படி உணவுகளை வீணாக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று வேண்டுகோள் வைத்துவிட்டுச் சென்றார். 

 

‘அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும்!’
‘இந்தியாவில், உணவுப்பொருட்கள் வீணாவதைத் தடுப்பதற்கும், உள்ளூரிலேயே அவற்றைத் தயாரிப்பதற்கும் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும்’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து 2016-17-ம் ஆண்டுக்குரிய பட்ஜெட்டின்போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ‘‘உணவுத் துறையில் வெளிநாட்டு அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும். இதன்மூலம் உணவுப்பொருள் வீணாவது தடுக்கப்படுவதுடன் விவசாய உற்பத்தி விரிவடைய வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச அளவில் பெரிய நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் உணவுப்பொருட்களை உள்ளூரிலேயே தயாரிக்க ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாகவும் இருக்கும்’’ என்று குறிப்பிட்டார்.

வளரும் நாடுகளில் நிலவும் விலைவாசி காரணமாக உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்கள்தொகைப் பெருக்கம், உற்பத்திக் குறைவு போன்றவை விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கின்றன. இதனால் ஏழைகளுக்கு 3 வேளை உணவு என்பது எட்டாக்கனியாக இருக்கிறது. ஒரு நாடு தனக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்து தன்னிறைவாகத் திகழ்வதே அந்நாட்டின் நிலைத்தன்மையை உறுதி செய்யும். ஊட்டக் குறைபாடு உள்ள மக்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் இல்லாததே இந்திய உணவு உற்பத்தி நிலையின் அவலநிலையை எடுத்துச் சொல்கிறது.

உணவு உற்பத்திக் குறைவு!
ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும் மத்திய அரசு உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துவருகிறது. (கடந்த சில ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டமுடியாமல், மத்திய அரசு திணறி வருகிறது). இந்த வருடம் 270 மில்லியன் டன் அளவு உணவுத் தானியங்களை உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த இலக்கை அடைய முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், நம் நாட்டில் நிலவிவரும் வறட்சியே ஆகும். கடந்த 2015-16-ம் ஆண்டில் 264 மில்லியன் டன் உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டது. ஆனால், இதைவிடக் குறைவாகவே உற்பத்தி செய்யப்பட்டது. பருவமழை தவறியது, அரசின் அலட்சியம் போன்ற பல காரணங்களால் உணவு உற்பத்தி குறைகிறது. மேலும், ‘கடந்த 55 ஆண்டுகளில் கடல் மட்டத்தில் இருந்து 2 கி.மீ. உயரம் வரை வெப்பநிலை மிகவும் அதிகரித்து உள்ளது. கடல்கள் வெப்பமயமாகி வருவதால், சர்வதேச அளவில் வானிலையில் மாற்றங்கள் தோன்றி வருகின்றன. இதனால் எதிர்பாராத நேரத்தில் மழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில இடங்களில் வழக்கமான நேரத்தில் மழை பொழியாது. இந்த இரு விளைவுகளுமே இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உணவு உற்பத்தியை பாதிக்கிறது’ என்று இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

உற்பத்திக் குறைவு, விளைச்சலுக்கு ஏற்ற மானியம் இல்லாமை, மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 116 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரபணு செய்யப்பட்ட பயிர் சாகுபடி!
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக உயிரியல் துறைப் பேராசிரியரான ஜூலியன் ஆடம்ஸ் இந்தியா வந்தபோது, ‘‘உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு எதிராகப் போராடுவதற்கு, வரும் 2050-ம் ஆண்டில் உலக நாடுகள் உணவு உற்பத்தியை 60 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை சாகுபடி செய்தால் இந்தியா உள்பட அனைத்து நாடுகளின் உணவு உற்பத்தியையும் அதிகரிக்க முடியும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு நம் நாட்டில் எதிர்ப்புகள் இருக்கின்றன. எனவே, அதைத் தவிர்த்து வேறு வகையில் உணவு உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீணாகும் உணவுப் பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்... உணவு உற்பத்தியைப் பெருக்க வழிவகுப்போம்!

- ஜெ.பிரகாஷ்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close