Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீசரின் நண்பன் கண்ணதாசன்...! - நினைவு தினச் சிறப்புப் பகிர்வு

 

‘‘யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே; ஒருவேளை மாறநினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்’’ என்றவர் கவிஞர் கண்ணதாசன். அவருடைய நினைவு தினம் இன்று.

‘‘ஆயிரம் பாட்டுக்கு அடி எடுத்துக்கொடுப்பான்டி!’’

மருது பாண்டியர்கள் நீதி தவறாது ஆட்சி செய்த சிவகங்கைச் சீமையின் சிறுகூடல்பட்டியில் வசித்த சாத்தப்பன் - விசாலாட்சி என்ற தம்பதியருக்கு எட்டாவது மகனாய் பிறந்தவர் முத்து. அந்த முத்துதான் பின்னாளில் கண்ணதாசன் என்ற முத்தாய் ஜொலித்தார். பள்ளிக்கூடத்துக்கு மூன்று ரூபாய் கட்டமுடியாத நிலையில், பலமுறை வெளியே அனுப்பப்பட்டார். இறுதியில் ஏட்டுக் கல்வியை எட்டாம் வகுப்போடு நிறுத்திக்கொண்ட கண்ணதாசன், பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் தலைமை ஆசிரியராய் இருந்த பள்ளியில் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி வீட்டுக்குச் சென்றுவிடுவார். ஏட்டுக்கல்விக்குத்தான் விடை கொடுத்தாரே தவிர, எழுதுவதற்கு விடை கொடுக்கவில்லை. தன் வீட்டிலிருந்து இரண்டு மைல் தொலைவிலிருந்த பாப்பாத்தி ஊருணிக் கரையில் அமர்ந்து எதையாவது எழுதிக் கொண்டிருந்தார். வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுத் தன் மனதில் பதிய வைத்துக் கொண்டதோடு அதையும் பாடிக் கொண்டிருப்பார். இதைக் கேட்ட பக்கத்து வீட்டு ஆச்சி, ‘‘என்ன நம்ம முத்து பாட்டுல மொத ரெண்டு வரிகள மட்டுமே பாடிக்கிட்டே இருக்கான். முழுசும் பாட வராதா’’ என கவிஞரின் தாயாரிடம் கேட்க... அதற்கு அவர், ‘‘அடி போடி பைத்தியக்காரி... எம் மகன் ஆயிரம் பாட்டுக்கு அடி எடுத்துக்கொடுப்பான்டி. அவனுக்கா தெரியாது’’ என்று அன்றே தன் மகனைப் புகழ் ஏணியில் ஏற்றிப் பெருமைப்படுத்தினார்.

‘‘இனி, மண்ணெண்ணெய் வாங்கிக் கட்டுபடியாகாது!’’

வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு, அரிக்கேன் விளக்கை எடுத்துத் தலையணைக்குப் பக்கத்தில் வைத்துக்கொண்டு எதையாவது எழுதிக் கொண்டிருந்த கவிஞரைப் பார்த்து... அவரது அப்பா, ‘‘இனி, மண்ணெண்ணெய் வாங்கிக் கட்டுபடியாகாது’’ எனக் கோபப்படுவாராம். அப்போது எல்லாம், ‘‘அவனை எதுவும் சொல்ல வேண்டாம்’’ என்று அவரது அன்னை, தன் கணவரிடம் வேண்டுகோள் வைப்பாராம். தன் எழுத்துப் பயணத்துக்குத் தீனி போடுவதற்காக யாரிடமும் சொல்லாமல் திருச்சிக்குச் சென்றார்; பின் சென்னை சென்றார். அங்குதான் உறவினரின் உண்மை நிலையையும், சமூகப் பார்வையையும், கடற்கரைக் காதலையும் கற்றுக்கொண்டார். நகரம் என்றாலே நரக வேதனையை அனுபவிக்கும் மக்களிடையே எந்தவிதமான கடமையும் இல்லாமல் பசியுடனும், பட்டினியுடனும் நாட்களை நகர்த்தினார். திறமை மட்டும் இருந்தால் ஒருவரால் முன்னேற முடியாது. சந்தர்ப்பமும் நன்றாக அமைய வேண்டியது முக்கியம் என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டார் கவிஞர். இடையிடையே விழிகளோடு முடிந்த முதல் காதலும், விடை இல்லாமல் போன இரண்டாம் காதலும் உண்டு. இளம் வயதில் நண்பர்கள் மூலம் விஷமாகும் மதுபானங்களின் பிடியிலும், விலை பேசும் மாதுக்களின் பிடியிலும் சிக்கிக்கொண்டார். காதல்தான் கைகூடவில்லை என்றாலும், கல்யாணத்தில் அவர் வெற்றிபெறத் தவறியதே இல்லை. வாழ்க்கையில் ஏற்பட்ட அவமானங்களையும், சந்தித்த பிரச்னைகளையும் தன் அனுபவங்கள் மூலம் பாடல்களாகவும், கட்டுரைகளாகவும் எழுதியதால்தான் பின்னாளில் அவர், மிகச்சிறந்த கவிஞராக உருவாவததற்கு அடிகோலியது.

தன் மனதைத் தேற்றிக்கொள்ள,

‘கலங்காதிரு மனமே...
கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே...’

என்று நம்பிக்கையுடன் எழுதிய பல்லவிதான், ‘கன்னியின் காதலி’ படத்தில், இடம்பெற்ற அவரது முதல் பாடல். அன்று முதல் திரையுலகோடு இலக்கியத்தையும், அரசியலையும், வாழ்க்கையையும் தன்னோடு இணைத்துக்கொண்டு அதில் பயணிக்கலானார். ஜனனத்தையும், மரணத்தையும் தவிர, மனித வாழ்வில் எந்த முடிவும் பரிசீலனைக்குரியதே என்பதை அவர் எண்ணமாகக் கொண்டிருந்தார். அவர் கொண்டிருந்த கனவுகளும் லட்சியங்களும் வாழ்வினோடும், மக்கள் நலனோடும் தொடர்புள்ளவையாய் இருந்தன. அதனால்தான் ஒரு பாடலில்,


‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’
- என்று எழுதினார்.

 

நம்பிக்கை எப்படிப்பட்டது?

நம்பிக்கை ஒன்றே வாழ்வின் அச்சாணி என்பதை, தன்னுடைய ‘எண்ணங்கள் ஆயிரம்’ என்ற தொகுப்பில் இடம்பெற்ற நம்பிக்கை என்ற கட்டுரை மூலம் உணர்த்தினார். அதில் இடம்பெற்ற சில வரிகள்: ‘‘நம்பிக்கை தரும் வெற்றிகளைவிடத் தோல்விகள் அதிகம். அந்தத் தோல்விகளும், வெற்றிகளே என்பது ஒருவனது நம்பிக்கை. நம்பிக்கையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை மனிதர்கள் மிருகங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் சக்திக்கேற்பவே அவைகள் நம்பிக்கை வைக்கின்றன. நம்பிக்கை துளிர்விடும்போது அச்சம் அற்றுப்போகிறது. அச்சம் அற்றுப்போன இடத்தில், எது செய்தாலும் சரியே என்ற துணிவு வருகிறது. அந்தத் துணிவு, தோல்வியைக் கூட்டிவிடுகிறது. தோல்வி, நம்பிக்கையை சாக அடிக்கிறது. மனித மனம், பழைய நிலைக்குத் திரும்புகிறது. மனிதனது கடைசி நம்பிக்கை, மயானம். இந்த நம்பிக்கை மட்டும் தோல்வியடைந்ததே இல்லை’’.

நம்பிக்கைக்கு விதை விதைத்த கவிஞர், மக்கள் சும்மா இருந்தால் சோம்பேறிகள் ஆகிவிடக் கூடும் என்பதை தன் எழுத்துகளால் சுட்டுத் தள்ளினார். எண்ணும் உரிமை, எழுதும் உரிமை, ஏசும் உரிமை, பேசும் உரிமை என எல்லாம் பெற்றுக்கொண்ட மக்கள், உழைக்கும் உரிமையை மறந்துவிட்டனர். அதை, அவர்கள் துணிவுடன் போராட வேண்டும் என்பதை,
‘சும்மா இருப்பவன் சோம்பேறி அவனிடம்
சொர்க்கத்துக் கென்ன வேலை?
சுடுகின்ற கோடையிலே வளைகின்ற ஏழையால்
அமைந்ததே இன்பச் சோலை’
- என்கிற கவிதை மூலம் உணர்த்தினார்.

அடிப்படைத் தத்துவமான மக்கள் நலன் என்பது நிலையானது. ஆனால், அதை அடையும் வழியில் மாற்றங்களை மேற்கொள்ளும்போது, தலைவரும் தர்பாரும் மாறும் என்பதை,
‘தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்’
- என்னும் கவிதை மூலம் அடித்துச் சொன்னார்.

மக்களையும், மக்களாட்சியையும் பற்றிச் சிந்தித்த அவர், நாட்டின் சமூக அவலத்தை நினைத்து வேதனைப்பட்டார்.
‘மேட்டுக் குடி வாழ்க்கை
மென்மே லுயர்ந்து வர
நாட்டுக் குடி வாழ்க்கை
நடுத் தெருவில் நிற்பதனை
மாற்ற வேண்டும்’
என்று குரல்கொடுத்தார்.

‘‘இருப்பது போதும்; வருவது வரட்டும்; போவது போகட்டும்; மிஞ்சுவது மிஞ்சட்டும் என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்’’ என்று சொல்லும் கவிஞர், ‘‘பிறப்பிலிருந்து இறப்புவரை துன்பமே இல்லாமல் வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்? கண்களை மூடிக்கொண்டு எண்ணிப் பாருங்கள். ஒரு கட்டம் அப்படி என்றால், மறு கட்டம் இப்படி. ஏற்றம் என்பது இறைவன் வழங்கும் பரிசு. இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை’’ என்று நாம் வாழும் வாழ்க்கை இறைவனைச் சார்ந்தே இருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறார். இரவும் பகலும்போன்று வாழ்க்கையில் மாறிமாறி வரும் இன்பத்தையும் துன்பத்தையும் எப்படிப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதையும் இறைவனிடம் கீழ்வரும் ஒரு கவிதை மூலம் வேண்டுகோளாய் வைக்கிறார்.
‘இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்!
நினைத்து வாட ஒன்று...
மறந்து வாழ ஒன்று!’

‘துன்பம் ஒரு சோதனை!’

இதனை மேலும் விரிவுபடுத்தி வாழ்க்கையில் மனிதன் எப்படியிருக்கிறான் என்பதை தன்னுடைய ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்னும் நூலில், ‘துன்பம் ஒரு சோதனை’ என்கிற கட்டுரையில் கவிஞர் இப்படிக் குறிப்பிட்டிருப்பார். ‘‘வெள்ளம் பெருகும் நதிகளும் ஒருமுறை வறண்டு விடுகின்றன. குளங்கள், கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன. நிலங்கள், வறண்டபின்தான் பசுமையடைகின்றன. மரங்கள், இலையுதிர்ந்து பின் துளிர்விடுகின்றன. இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மலை ஒன்றுதான். அதுவும் வளர்வதாகவும், அமிழ்வதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இறைவன் மனிதனையும் அப்படித்தான் வைக்கிறான். நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை. முதற்கட்டம் வரவு என்றால், அடுத்தகட்டம் செலவு; முதற்கட்டம் இன்பமென்றால், அடுத்தகட்டம் துன்பம். முதற்கட்டமே துன்பம் என்றால், அடுத்தகட்டம் இன்பம். இறைவனது தராசில் இரண்டு தட்டுக்களும் ஏறி ஏறி இறங்குகின்றன. எல்லாச் செல்வங்களையும் நிரந்தரமாக எவனுக்கும் இறைவன் வழங்கியதில்லை. அந்த நாளில் எனக்கு நல்ல பசியெடுத்தது; உணவு கிடைக்கவில்லை. பின் பசியுமிருந்தது; உணவும் கிடைத்தது. இப்போது உணவு கிடைக்கிறது; பசியில்லை. அடுக்கடுக்காகப் பணம் சேர்த்து, ஆயிரம் வேலிக்கு மிராசுதாரர் ஆனார் ஒருவர். ஆன மறுநாளே, அவரை ‘அரிசி சாப்பிடக் கூடாது; சர்க்கரை வியாதி’ என்று சொல்லிவிட்டார் டாக்டர்’’ என்று ஒரு மனிதனின் வாழ்க்கையை அழகாகச் சொல்லியிருப்பார்.

பெண்களை உயர்வாகவே கருதினார்!

பெண்களைப் போதைப் பொருளாக மட்டுமே கண்ணதாசன் பார்த்தார் என்று குற்றஞ்சாட்டுபவர்கள் பலர் இருந்தாலும், பெண்களை என்றுமே அவர் உயர்வாகவே கருதினார். ‘பழைமையின் பெயரில் பொசுக்கும் பருவமும் பொய்யென அவள் கிடக்க வேண்டுமோ’ என்று பெண்களுக்கு ஆதரவாய் குரல்கொடுத்தார். பெண்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் கீழ்வரும் பாடலில் அழகாக உணர்த்தியிருப்பார்.
‘உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இங்கே
உறவுக்குக் காரணம் பெண்களடா...
உள்ளத்தை ஒருத்திக்குக் கொடுத்துவிடு - அந்த
ஒருத்தியை உயிராய் மதித்துவிடு!’

இதே பாடலில்தான் காதல் என்ற மந்திரச்சொல்லுக்கும் அழகான கருத்தைப் பதிவுசெய்திருப்பார். அந்தப் பாடல் வரிகள்,
‘காதல் என்பது தேன்கூடு - அதை
கட்டுவதென்றால் பெரும்பாடு...
காலம் நினைத்தால் கைகூடும் - அது
கனவாய்ப் போனால் மனம் வாடும்!’

மதுவைத் தொடாதவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

அதேபோல், கவிஞர் மதுக்கோப்பையுடனே காலங்கழித்தார் என்று சொல்பவர்களும் ஏராளம். ஆனால் அந்த, மதுவைத் தொடாதவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை, ‘‘மதுவைத் தொடாவிடில் சபைகள் மதிக்கும்; அதனால், பற்பல லாபம் உண்டாகும்; அதிக நாட்கள் உழைக்க வலுவிருக்கும்; அனைவரும் வணங்கும் நிலையிருக்கும்’’ என்று மிகவும் அழகாகத் தெளிவுபடுத்தினார்.

ஆறு மாதத்தில் தூங்கும் குழந்தையின் தூக்கமே சுகமான தூக்கம் என்று சொல்லும் கவிஞர், தூங்கும் அந்தக் குழந்தையைக்கூட எழுப்ப வேண்டாம் என்று குரல்கொடுக்கிறார்.
‘அவனை எழுப்பாதீர்;
அப்படியே தூங்கட்டும்
பூப்போலத் தூங்குகிறான்
பூமியிலே உள்ளதெலாம்
பார்க்காமல் தூங்குகிறான்’
என்று தன் பேரன் தூங்கியதைக் கண்டு அந்தப் பாடலை எழுதியிருப்பார் கவிஞர்.

‘சரித்திரம்’ என்னும் கட்டுரை!

வாழ்க்கையில் சரித்திரம் எவ்வளவு முக்கியமானது என்பதை, தன்னுடைய ‘சரித்திரம்’ என்னும் கட்டுரையில் உண்மை சரித்திரத்தை உணர்த்தியிருப்பார். அந்தக் கட்டுரையில் இடம்பெற்ற சில வைரவரிகள்: ‘‘சரித்திர நதியின் ஓட்டத்தை நிறுத்தியவனும் இல்லை; திருந்தியவனும் இல்லை. அதன் இரண்டு கரைகளில் ஒன்று வெற்றி; மற்றொன்று தோல்வி! வெற்றிக் கரை, பசுமையாக இருக்கிறது. தோல்விக் கரை, சுடுகாடாகக் காட்சியளிக்கிறது. பசுமையான நிலப்பரப்பை விடச் சுடுகாட்டின் பரப்பளவே அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் சுடுகாடு நிரம்பி வழிவதைப் பார்த்த பிறகும், அடுத்து வருகிறவன் தன்னுடைய பசுமை நிரந்தரமானது என்றே கருதுகிறான். அந்தச் சுடுகாட்டில் அலெக்சாண்டரைப் பார்த்தபிறகும், அகில ஐரோப்பாவுக்கும் முடிசூட்டிக்கொள்ள முயன்று, அங்கேயே போய்ச் சேர்ந்தான் நெப்போலியன். அந்த நெப்போலியனின் எலும்புக் கூடுகள் சாட்சி சொல்லியும்கூட, உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தை வரவழைக்க முயன்று நெப்போலியனுக்குப் பக்கத்திலேயே படுக்கை விரித்துக்கொண்டான் ஹிட்லர். அந்த ஹிட்லரை எப்போதும் தனியாகவிடாத முசோலினி, அவனுக்கு முன்னாலேயே புறப்பட்டுப் போய் அவனுக்கு இடம் தேடிவைத்தான். அதோ, அந்தச் சுடுகாட்டில் பயங்கர ஜவான்கள். ஜார் பரம்பரைகள், லூயி வம்சாவளிகள் அனைவரும் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிக் காலங்காலமாகச் சாட்சியங்கள் இருந்தும்கூட, கண்மூடித்தனமான அதிகாரவெறி இருந்துகொண்டே இருக்கிறதே. ஏன்? அதுதான் இறைவன் பூமிக்கு வழங்கிய தர்மம். அழிய வேண்டியவன், ஆடி முடித்துதான் அழிய வேண்டும் என்பது காலத்தின் விதி. பதவி என்னும் பச்சை மோகினியின் கரங்களில் பிடிபட்டவனிடமிருந்து அடக்கம் விடைபெற்றுக் கொள்கிறது. ஆணவம் தலை தூக்கி நிற்கிறது. வெற்றி வெற்றி என்று தொடர்ந்து வரவர தோல்வி என்பது தன் அகராதியிலேயே இல்லை என்ற துணிச்சல் வருகிறது. கண்ணுக்கு முன்னால் இருக்கும் பயங்கரப் படுகுழிகூடத் தனக்காகக் கட்டப்பட்ட நீச்சல் குளம்போல் தோன்றுகிறது. விழுந்த பிறகு, எலும்பு முறிந்த பின்தான் மாயை விலகுகிறது; மயக்கம் தெளிகிறது. ஒரு மனிதனின் கரங்களுக்குள் உலகத்தின் சுக துக்கங்கள் விளையாட இறைவன் ஒருபோதும் அனுமதித்தது இல்லை. அடித்த பந்து திரும்பி வந்து தாக்கும்போதுதான் இந்த உண்மை புலப்படுகிறது’’ என்று பல உண்மைகளை அதில் உணர்த்தியிருப்பார் கவிஞர்.

‘‘தன்னுடைய தோழன்’’ சீசர்!

தன்னுடைய நண்பர்களிடம் நன்றியைக் காணாததால் விரக்தியடைந்த கவிஞர், ‘சீசர்’ என்ற ஒரு நாய்க்குட்டியை வாங்கி வந்து வளர்த்தார். சோறு கொடுக்கும் கை மீளுமுன்பே வெடுக்கென கடிக்கும் மாந்தர்கள் வாழும் உலகிலே தன்னிடம் நன்றி உணர்வுடன் இருந்த சீசரை, ‘‘தன்னுடைய தோழன்’’ என்றார் கண்ணதாசன். ஆனால், அவருடைய நண்பர்கள்தான் நன்றியை மறந்தார்களே தவிர, அவர் மறக்கவில்லை. கண்ணதாசனுக்கு தக்கசமயத்தில் எல்லாம் உதவி செய்தவர் சின்னப்ப தேவர். கவிஞருடைய வீட்டுத் திருமணங்களில் எல்லாம் கலந்துகொண்டவர் அவர். அப்படி ஒரு நிகழ்வுக்கான செய்தியைக் கவிஞர் சொன்னபோது, ‘‘அந்த நாளில் ஊரில் நான் இருக்க மாட்டேன்’’ என்றாராம் சின்னப்பத் தேவர். உண்மையிலேயே கவிஞர் சொன்ன அந்தத் தேதியில் சின்னப்பத் தேவர் இறந்து விட்டார். அதனால், அந்தத் திருமண வரவேற்பையே நிறுத்தியதோடு தன் நன்றி மறவாமையையும் வெளிப்படுத்தினார்.

பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்!

ஒரு சமயம் அறிஞர் அண்ணா தனது கழக நண்பரிடம், ‘‘எங்கிருந்து வருகிறீர்கள்’’ என்று கேட்டார். அப்போது அவர், ‘‘நான் கருவூரிலிருந்து வருகிறேன்’’ என்றார். அதைக் கேட்ட அண்ணா, ‘‘எல்லோருமே கருவூரிலிருந்து சாவூருக்குப் போகிறவர்கள்தான்’’ என்றார். அருகில் இருந்த கண்ணதாசன், இந்த வார்த்தைகளைக் கேட்டு மிகவும் ரசித்தார். இதன் பிரதிபலிப்புதான், ‘காட்டு ரோஜா’ என்ற படத்தில், அவர் எழுதிய ‘எந்த ஊர் என்றவனே’ என்ற பாடல். இதில், உடலூர், உறவூர், கருவூர், மண்ணூர், கண்ணூர், கையூர், காலூர், காளையூர், வேலூர், விழியூர், காதலூர், கடலூர், பள்ளத்தூர், மேலூர், கீழூர், பாலூர் என்று பல ஊர்களைப் பற்றிப் பாடி மனித வாழ்க்கையின் தத்துவத்தை அந்தப் பாடல்மூலம் தெளிவுபடுத்தினார்.

தேசிய விருது பெற்ற பாடல்!

சமூகம், காதல், தத்துவம், தாலாட்டு, பக்தி எனப் பல பாடல்களை எழுதினார்.
‘ராமன் என்பது கங்கை நதி
அல்லா என்பது சிந்து நதி
யேசு என்பது பொன்னி நதி
நதிகள் பிறக்குமிடம் பலவாகும் - எல்லா
நதியும் கலக்குமிடம் கடலாகும்’
என்று ஒற்றுமையை உணர்த்தி எழுதப்பட்ட இந்தப் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. ‘சேரமான் காதலி’ என்னும் நாவல் அவருக்கு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத் தந்தது. ‘அர்த்தமுள்ள இந்து மதம்’, ‘இயேசு காவியம்’ என மதம் பார்க்காத புகழ்மிக்க நூல்களை எழுதினார். எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசவைக் கவிஞரானார். இப்படி தன் எழுத்தாலும், புகழாலும் இந்த உலகில் இறுதிவரை கொடிகட்டிப் பறந்தார்.

 

இளைஞர்களுக்கு வேண்டுகோள்!

‘‘அன்று எத்தனையோ புத்தகங்கள் எழுதக்கூடிய அளவுக்கு உடலில் வலுவிருந்தது; ஆற்றல் பொங்கி வழிந்தது. ஆனால், வெறும் ரத்தத் துடிப்புக்கு முதலிடம் கொடுத்து பொன்னான காலத்தை விரயமாக்கினேன். இன்று எத்தனையோ எழுத வேண்டும் என்று துடிக்கிறேன். அனுபவங்கள் பொங்கி வழிகின்றன. ஆனால், எனது பாழாய்ப்போன உடம்பு விட்டுக்கொடுக்க மறுக்கிறது. இளைஞனே என்னைப் பார்த்து விழித்துக்கொள். காலம் பொன்னானது. காலம் தாழ்த்தி உணர்ந்து கொள்ளாதே’’ என்று இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த முத்தை (கண்ணதாசனை), 1981-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி காலன் அபகரித்துக்கொண்டான்.

‘மூன்றாம் பிறை’ படத்தில் மனநிலை பிறழ்ந்த காதலிக்கு எழுதிய தாலாட்டான, கண்ணே கலைமானே என்ற பாடலோடு நிறைவுபெற்றது அவரது திரைப் பயணம். ஆம், நம்பிக்கையில் ஆரம்பித்து தாலாட்டில் முடிந்தது அவரது கலைப்பயணம். அனைத்துத் துறைகளிலும் பல நூல்களை எழுதியுள்ள கவிஞரிடம், ‘‘நீங்கள் எழுதிய நூல்களைப் படிக்கும் வாசகர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை யாது’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘நூலைப் பின்பற்றுங்கள். ஆனால், நூலாசிரியரைப் பின்பற்றாதீர்கள்’’ என்றாராம்.

பூமியிலே இப்போது நடக்கும் எதையும் அவர் பார்க்காமல் தூங்குகிறார்... ‘அவரை எழுப்பாதீர்... அப்படியே தூங்கட்டும்!’

கண்ணதாசன் பற்றி மேலும் சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டுமா... இங்கே கிளிக் செய்யுங்கள்.

- ஜெ.பிரகாஷ்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close