Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அம்மா பாட்டு... நாட் ரீச்சபிள்?! #WorldRuralWomen'sDay

 

மடிக்கணினி முதல் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்கள் வரை கடந்த சில ஆண்டுகளாய் கிராமங்களில் வேகவேகமாக நுழைந்து கொண்டிருந்தாலும், இன்னும் நாட்ரீச்சபிள் ஏரியா கிராமங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
சூழல் எதுவாக இருந்தாலும் மனதிடமும் உடலுழைப்பும் கொண்டவர்கள் கிராமத்துப் பெண்கள். குறிப்பாக, இவர்களின் வாழ்க்கை இயற்கையோடு இணைந்திருக்கும். ஆயிரம்தான் கஷ்டங்கள் நிறைந்திருந்தாலும், அவர்களின் வாழ்க்கை அழகானது. அதை வாழ்வதற்கெல்லாம் நிச்சயமாக கொடுப்பினை வாய்த்திருக்க வேண்டும்.

விடியற்காலையில் எழுந்து, மாட்டுச்சாணத்தை நீரில் கரைத்து தெருவில் தெளித்து, பெருக்கிக் கோலம் போடும்போது கிடைக்கும் உடற்பயிற்சியை, நகரங்களின் ட்ரெட்மில் எப்போதும் கொடுத்துவிடாது.


பத்து ரூபாய் கொடுத்து ராசயன சாயத்தை மெஹந்தி என்று பூசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், மருதாணி இலைகள் பறித்து அதில் கொஞ்சம் கொட்டைப்பாக்கு புளியும் சேர்த்து அரைத்து வட்ட வட்டமாய் கைகளை அலங்கரிக்கும்போது ஆயிரம் கதைகள் அந்நேரம் கிராமத்துத் தோழிகளிடையே ஓடும்.


‘இங்க பாருடி... அழவாணலை (மருதாணி) செவந்துச்சுனாதான், உனக்கு உன் மாமன் மேல பாசம் இருக்குறதா அர்த்தமாம். விடியுறவரைக்கும் கலைச்சிடாதே’ என்று தோழி ஒருத்தி சொன்னால்,
அதெல்லாம் செவக்கும்... கொட்டப்பாக்கும் புளியும் மட்டும் வைக்கலை... செவத்துல இருந்த மூட்டப் பூச்சியையும் வச்சிருக்கேன்’ என்பாள் பதிலுக்கு.


வாட்ஸ்அப் கதைகளையோ, மெஹந்தி டிசைன்கள் பற்றியோ அறிந்ததில்லை இவர்கள். இலந்தை மரங்களில் ஏறவும், புளியம் பழங்களை உலுக்கவும் கற்றறிந்தவர்கள். ஆட்டுக்குட்டிகளை கழுத்தில் மாலையாக்கிக் கொள்ளவும், முயல்குட்டிகளை காது பிடித்து தூக்கிச் செல்லவும், வாத்து மேய்க்க, ஆட்டுப்பட்டியை கட்டி ஆள, தூண்டில் போட்டு மீன் பிடிக்க என இயற்கையை கற்றறிந்தவர்கள்.


கிராமத்துப் பெண்கள் சம்மர் கிளாஸில் நீச்சல் கற்றுக் கொள்வதில்லை. விறகு வெட்டத் தெரியும். கிணறு வெட்டத் தெரியும். ஏர்பூட்டி கழனி உழ, நாற்று நட, அறுவடை செய்ய, பதர் அடிக்க, நெல்குத்த, ஒரு விவசாய பூமியை மொத்தமாய் கட்டி ஆளும் வித்தையை அறிந்தவர்கள்.


கிராமங்களில் கழிப்பறை வசதி 90 களுக்கு பிறகுதான் படிப்படியாய் கிடைக்கத் துவங்கியது. அதற்கு முன்பெல்லாம் கழிப்பறை வைத்த வீடுள்ள மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வதே கிராமத்துப் பெண்களின் பெருங்கனவாக இருந்தது. செயற்கை நாப்கின்கள் வரவு கிராமங்களில் அப்போது இல்லை. பருத்தித் துணிகளையே மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தி வந்தார்கள். சுகப்பிரசவம் வீட்டிலேயே நடந்ததெல்லாம் ஒரு காலம். விவசாயம், கால்நடை, காடு, கழனி, ஓடை என்றே வாழ்க்கை நடத்தியவர்கள். விஷப்பாம்பு கடித்தாலும் கைவைத்தியம் செய்யும் மருத்துவச்சிகள் கிராமங்களின் உண்டு. ஐபாட் பாட்டறியாமல் ஆராரோ பாடி தாலாட்டியவர்கள் இவர்கள். மஞ்சளும் மரிக்கொழுந்தும் கிராமத்துப் பெண்களுக்காகவே வரம் வாங்கி மண்ணில் விளைந்தவை. தாழம்பூவின் வாசம் அறிந்தவர்கள்.


சொலவடையோ, கிராமியப் பாடலோ ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் உண்டு இவர்களிடம்.
கிராமங்களில் கல்விக் கூடங்கள் எட்டிப்பார்த்தன. தலைவாரி பாவாடைச் சட்டை அணிந்து கல்விக் கூடங்கள் போனார்கள் சிறுமிகள். எட்டாத ஏட்டுக் கல்வி அவர்களுக்கு எட்டும் கனியானது. பள்ளிக்கூடம் தாண்டி கல்லூரியில் கால் பதித்தார்கள். சேலை... நைட்டி ஆனது. தாவணி... சல்வார் ஆனது.


இதெல்லாம் கால மாற்றம். கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிராமங்களில் தடம் பதிப்பதை வரவேற்பதைப் போலவே, ஆலமரத்து தூளிக்குப் பக்கத்தில் ஒலிக்கும் அம்மா, அம்மாச்சியின் தாலாட்டுப் பாடல்கள் தூரமாய் மெல்லிய சத்தத்தில் இசைத்து அடங்கிக் கொண்டே இருக்கும் சோகமும் நெஞ்சின் ஒரு ஓரத்தில் உறுத்திக் கொண்டே இருப்பதையும் மறுக்க முடியவில்லை. கிராமங்களை எல்லாம் நகரமயமாவதோடு, அங்கிருந்த அழகியல், நல்ல பழக்கவழக்கங்கள் என பலவும் மெள்ளச் சிதைவதையும் பொறுக்கமுடியவில்லை.

- பொன்.விமலா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close