Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இவங்ககிட்ட எல்லாம் கொஞ்சம் சூதானமா இருங்க பாஸ்!

ஆபீஸ்ல மட்டும் இல்ல, வெளியிலயும் நம்ம கூடவே சுத்துற செவ்வாழை கேரக்டர்கள் இருப்பாய்ங்க. அவங்களை பத்திதான் பார்க்கப்போறோம். 

போற போக்குல போற மண்டையடி கய்ஸ்:

முழுப்பரீட்சை லீவுக்குக் கிராமத்தில் இருந்து மாமன் வீடு, சித்தப்பன் வீடுனு சிட்டிக்குப் போவோம். அங்கே அத்தை வழி, சித்தி வழியில் வந்த இன்னொரு போட்டியாளரும் பட்டறையைப் போட்டிருப்பான். ஏதோ வருசத்துல ஒருவாட்டிதான் ஊருக்குப் போறது. நானெல்லாம் கொஞ்சம் பெரும்போக்காதான் இருப்பேன், பஜ்ஜி தின்னக் கையுடன் ஐஸ்கிரீம் வாங்கித் தரச் சொல்வேன். முடிச்ச அடுத்த செகண்ட் மக்காச்சோளம் வாங்கித் தாங்கனு படுத்தியெடுப்பேன். கூடவந்த எங்கம்மாயி கண்ணை உருட்டி மெரட்டிப் பாக்கும்.  இதில் ஒரு தொழில் ரகசியம் என்னன்னா கூட இருக்கிற இன்னொரு பக்கி எதையுமே கேட்க மாட்டான். அமைதியா இருப்பான். எங்க அத்தைக்குப் பெருமை தாங்காது, எப்படி வளர்த்துருக்காங்க பாருன்னு. ஆனா எனக்கு வாங்கும்போது அவனுக்கும் சேர்த்து வாங்குவாங்கதானே? ஒண்ணுமே பேசாம காரியம் சாதிச்சுடுவான் அந்த வெசப்பக்கி. உரிமைக்காகப் பாடுபடறது நானு, விளைச்சலை அறுவடை செய்றது அவன். வித் எ குட் நேம். இந்த மாதிரி ஆளுக எல்லோருக்கும் சொந்தக்காரய்ங்க ரூபத்திலே இருப்பாய்ங்க.  

ஆஃபாயில் டெக்னிக் வித்துவான்கள்:

நானும் என் நண்பனும் நைட்டு சேர்ந்துதான் சாப்பிடப் போவோம். கரெக்டா நான் சாப்பிட்டு முடிச்சு எழுந்திரிக்கப் போறப்போ அவன் ஒரு ஆஃபாயில் ஆர்டர் பண்ணுவான், சரின்னு நானும் முதல்ல போய்க் கை கழுவிட்டுக் காசைக் கொடுத்திடுவேன். இது ரெண்டு மாசம் நடந்தது. மூணாவது மாசத்துல புத்தி வந்த நான் அவன் போட்ட அதே ஆக்கரை அவன் காலுக்கடியில் போட்டேன். அவன் முடிக்கிற நேரத்துல நான் ஒரு ஃபுல்பாயில் சொன்னேன். யாருகிட்ட... அவனோ 'மாஸ்டர் இன்னொரு ஆம்லெட்டு'னு அசால்ட்டா கம்பியை நீட்டிட்டான். எனக்குப் புரிஞ்சிடுச்சு. இதுக்கெல்லாம் வெட்கம் மானமெல்லாம் பார்க்காத ஓர் இரும்பு மனசு வேணும்னு. என் தோல்வியைத் தலை வணங்கி ஏத்துக்கிட்டேன் அவங்கிட்ட. இவிங்கெல்லாம் கரப்பான்பூச்சி இருக்கிற வரைக்கும் இருப்பானுக. #அடேய்... என் காசுடா அது!

அக்கவுன்ட் அங்கிள்ஸ்:

எல்லா ஊர்லேயும் இப்படி ஒரு மாமா இருப்பாங்க. கடைனா பொருள் வாங்குற இடம்தானேங்கிற பொருளாதார அறிவெல்லாம் நிறைஞ்சிக் கிடக்கும். ஆனா அதுக்குக் காசும் தரணுமேங்கிற வணிகவியல் அறிவை ஏத்துக்க மாட்டாங்க. இவிங்களை நம்பிக் கடன் கொடுத்தவன், கடை போட்டவன்லாம் கிறுக்காத்தான் திரியணும். இப்படித்தான் இந்த மாமாவை நம்பி ஒருத்தன் கேபிள் கனெக்சன் கொடுத்துட்டு முதல் மாசம் காசு கேட்கப் போயிருக்கான். தம்பி... அறுபது சேனல் வருதுங்கிறே.. ஆனா நான் எல்லாத்தையும் பார்க்கலை. அதனால பார்த்ததுக்கு உண்டான காசை மட்டும் கேட்டு வாங்கிக்கனு சொல்லிட்டுப் பெருமையா அத்தையைப் பார்த்துருக்காரு, அங்கயே கேபிள்காரனுக்கு கண்ணு இருட்டிக்கிட்டு வந்துருக்கு. இன்னிக்கி எப்படியும் வசூல் பண்ணிடலாம்னு அடுத்த மாசம் ப்ரிப்பேரா போயிருக்கான். மாமா சுதாரிச்சிட்டாரு. இதுக்கு இருநூறு ஓவான்னு எப்படி விலை நிர்ணயம் பண்ணினே? உன்னோட லாப சதவிகிதமென்ன அரசாங்கத்துக்கு எவ்ளோ போகுதுனு திடீர் கம்யூனிஸ்ட் ஆகிட்டாரு. கேபிள்காரனுக்கு புரிஞ்சிடுச்சி இந்த மனுஷன் ஜனநாயக முறைப்படி தர மாட்டேன்னு சொல்றார்னு. நீயுமாச்சு உன் காசுமாச்சுனு ஊரைவிட்டே ஓடிட்டான். #யாருக்கிட்ட?

- சிவகுமார் கனகராஜ் 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ